February 8, 2023

உலக வருமானம் உயர்கிறது..ஆனாலும் அடித்தட்டு மக்கள் வாழ்க்கை ..? ரமேஷ் பாபு

ன்றைய உலக வருமானம் சுமார் $ 94 இலட்சம் கோடிகள் என்கின்றது உலக வங்கியின் அங்கமான பன்னாட்டு செலாவணி நிதியத்தின் அறிக்கை ஒன்று. இது கடந்த 2020 ஆம் ஆண்டின் நிலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் காணப்படும் பல தகவல்கள் இன்றைய உலக வருமானம் எவ்வாறு பெரும் வேறுபாடுகளுடன் உள்ளது என்பதைக் காட்டுகிறது.

இந்த அறிக்கையின்படி அமெரிக்கா சுமார் $ 22.9 இலட்சம் கோடி மொத்த உள்நாட்டு வருமானத்துடன் முதல் இடத்திலுள்ளது. அடுத்தப்படியாக சீனா சுமார் $ 17 இலட்சம் கோடி இதைத் தொடர்ந்து ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியவற்றுடன் ஆறாவது இடத்தில் இந்தியாவுள்ளது. அவற்றின் நாட்டு வருமானங்கள் முறையே சுமார் $ 5.1, $ 4..2, $ 3.2 மற்றும் இந்தியா $2.9 இலட்சம் கோடிகளாக உள்ளன. இந்தியா விரைவில் 4 ஆம் இடத்தைப் பிடித்துவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், இத்தாலி, கனடா மற்றும் தென் கொரியா ஆகியன அடுத்த 4 இடங்களைப் பெற்றுள்ளன. இதில் அமெரிக்காவின் வளர்ச்சி கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்கிறார்கள். அமெரிக்காவின் நான்கு துறைகள் இந்த வளர்ச்சிக்கான காரணிகளாக உள்ளன. நிதி, காப்பீடு, வீட்டு வசதித்துறை மற்றும் மருத்துவம் போன்ற தொழில்த்திறன் மிக்க துறைகளும் அத்துடன் வணிகமும் இணைந்துள்ளன. மேலும் அரசின் செலவுகளும் சேர்ந்து இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தியுள்ளது.

சீனாவின் வளர்ச்சி 1976 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் இணைந்து பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் வேகமான வளர்ச்சியைப் பெறும் சூழலை கொண்டு வந்தது. உலகின் தொழிற்சாலை என்று சீனாவை அழைக்கும் நிலைக்கு அது உயர்ந்துள்ளது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் அதிக பலன்களைத் தரும் அளவிற்கு தாராளமயத்தைத் தரவில்லை என்றே கருதப்படுகிறது. இன்னும் கூட நிறைய சிவப்பு நாடா கட்டுப்பாடுகள் அரசுத்துறைகளில் இருப்பதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வருவதில்லை; மேலும் இந்தியாவில் இருந்து சுமார் 8 இலட்சம் பேர் வெளியேறி வெளிநாட்டு குடியுரிமைப் பெற்று அங்கு முதலீடுகளை செய்து வருகிறார்கள். இது எதிர்மறையான போக்காக காணப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்றும் ஏற்கனவே மந்த நிலையில் இருந்த பொருளாதாரத்தை மேலும் சுணக்கம் அடையச் செய்துள்ளது. சில நாட்களுக்கு நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் பொருளாதாரம் மெதுவாக மீண்டு வருவதாகக் கூறினார்.

எனவே இந்தியா 4 ஆவது பெரிய பொருளாதாரமாக உயர்வது மட்டுமல்ல சீனாவின் இடைத்தைப் பெறுவது என்பதே சரியான இலக்காக இருக்கும். இதற்கு குறைந்த செலவில் பசுமை ஹைட்ரஜன் போன்ற எரிபொருட்கள், விவசாய இடுபொருட்கள் மலிவு விலையில் கிடைப்பது, நியாய கூலி/சம்பளம், செல்வம் ஓரிடத்தில் குவியாமல் தடுப்பது போன்ற நீண்ட கால திட்டங்கள் அதிரடியாக நிறைவேற்றப்பட வேண்டும். கையூட்டு, ஊழல், தேர்தலில் பணத்தின் செல்வாக்கு போன்றவையும் பேரளவில் குறைக்கப்பட்டால்தான் சமமான வளர்ச்சி சாத்தியமாகும். இதுவே ரூபாயின் மதிப்பை உயர்த்தி வலிமையான பொருளாதாரத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவின் கதையை அடுத்துப் பார்த்தால் ஐரோப்பா கடந்த 70 ஆண்டுகளில் கண்டுள்ள சீரான ஆனால் வலிமையான வளர்ச்சி ஓர் முன்னுதாரணமாக உள்ளது. குறிப்பாக வளம் குன்றிய கிழக்கு ஜெர்மனியை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஒன்றுபட்ட ஜெர்மனி இன்னும் நான்காவது பெரிய பொருளாதாரமாக நிலைத்திருப்பது அரிய சாதனையாகும். ஐரோப்பாவின் இஞ்சின் என்று அழைக்கப்படும் ஜெர்மனி உலகின் 20$ வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் 90% நாட்டு வருமானம் வர்த்தகம் மூலம் வந்திருக்கிறது. ஜெர்மனியுடன் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகியனவும் ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த நாடுகளே. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இல்லாத ஐரோப்பிய பொருளாதாரம் என்பதை கற்பனை செய்ய இயலாது. மேலும், ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்றவையும், வட பகுதியின் துருவப் பிரதேச நாடுகளான ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து ஆகியவை சமூக நலப் பொருளாதாரத்திற்கு விளக்கம் தரும் நாடுகளாக தங்களது வளர்ச்சிப் பாதையை அமைத்துக் கொண்டவையாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கிழக்க ஐரோப்பா சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு நல்ல வளர்ச்சிக் கொண்டவையாக முன்னேறி வருகின்றன.

உலகில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் ஆப்பிரிக்கா, ஓஷனியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளும், மத்திய கிழக்கு நாடுகளும் இடம் பெற்றுள்ளன. இவை தவிர வேகமாக வளரும் பொருளாதாரங்கள் எனும் பட்டியலிலும் 10 நாடுகள் இடம் பெற்றுள்ளன. சிலி, பெரு போன்ற தென் அமெரிக்க நாடுகளும், லிபியா, அயர்லாந்து போன்ற நாடுகளும் இப்பட்டியலில் உள்ளன. வேறுபட்ட வகையில் அயர்லாந்தின் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள் போன்றவற்றாலும், பிஃபைசர் போன்ற பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களாலும் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறதாம்! இங்கு 12.5% பெரு நிறுவன வரி மட்டுமே வசூலிக்கப்படுவதால் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தை அமைத்துள்ளன. விரைவில் அயர்லாந்தும் வளர்ந்த நாடுகளின் குறைந்தபட்ச 15% பெரு நிறுவன வரி அமைப்பிற்கு மாறவுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் பெரு நிறுவன வரி 35-40% என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட அளவாக இருந்தாலும் அதிகமான ஒன்றாகவே கருதப்படுகிறது. எனவே பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை தங்களது தளமாகக் கொள்ள முன்வருவதில்லை.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் மொத்த வருமானம் $3 இலட்சம் கோடியாக இருந்ததாம். இன்று $94 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் இது $180 இலட்சம் கோடியாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வளர்ச்சி அதிகரித்தாலும் கூட அமைதி, வளம், கண்ணியமான வாழ்க்கைத் தரம் ஆகியன உலகின் கணிசமான மக்களுக்கு கிடைத்தபாடில்லை. பொருளாதாரத்துடன் மக்கள் தொகையும், செல்வ பங்கீடும் ஒத்துச் செல்வதில்லை என்பதாலும், நாட்டின் வளர்ச்சிப்போக்கை ஒரு சிலரே தீர்மானிப்பதாலும் ஏற்றத்தாழ்வுகள் நீடிப்பதோடு எவ்வளவுதான் உலக வருமானம் உயர்ந்தாலும் அடித்தட்டு மக்களின் நிலை தொடர்ச்சியாக அதிகரிப்பதில்லை.

ரமேஷ் கிருஷ்ண பாபு