October 16, 2021

உலக முதியோர் தினம் – அக்டோபர் 1

இப்போதெல்லாம் வயதான முதியோர்களை இளைஞர்கள் இளக்காரமாக பார்க்கிறார்கள். முதியவர்களும், ஒரு காலத்தில் தங்களைப் போல் இளைஞர்களாக இருந்து வந்தவர்கள்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
மாறிவரும் சமுதாயத்தில் பண வசதியே முக்கியமாக கருதப்படுவதால் முதியோர் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இதற்கு முதியோரும் ஒருகாரணம்.

சாதாரணமாக அறுபது வயதுக்கு மேலான முதியவர்கள், மருத்துவச் செலவுக்குக் கூட குடும்பத்தில் உள்ள மகன் அல்லது மகளை சார்ந்திருக்கும் நிலை இருக்கிறது. பெரும்பாலும் இளைஞர்கள் முதியோருக்கு செலவை எண்ணி சரிவர மருத்துவம் பார்ப்பதில்லை. வார்த்தைகளால் வதைக்கிறார்கள்.
1 - old age 2
பல இடங்களில் வயதானவருக்கு சரியான சாப்பாடு கூட மறுக்கப் படுவதால் சத்து குறைவு, சுகாதாரச் சீர்கேடு ஏற்ப்படுகிறது. பணியில் இருக்கும் போதே ஓய்வுக் காலத்துக்கு என்று சேமிப்பு மற்றும் முதலீடு செய்தவர்கள் பிற்காலத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இளமையிலே முதுமைக்கு திட்டமிடும் அவசியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும்) வசதியான வயதானவர்களுக்கு குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கின்றன. எல்லாம் பணம்தான் காரணம்.

வசதி இல்லாத வயதானவர்களைக் குடும்பத்தில் உள்ள பேரன், பேத்திகள் கூட மதிப்பதில்லை. குடும்பத்துக்காக உழைத்தே தாய் & தந்தையர் ஓடாகி விட்டார்கள் என்பதை குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தால் நல்லது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது.அதிகளவில் குழந்தை பிறப்பு, அதிக அளவு இறப்பு என்று ஏற்கனவே இருந்த நிலைமாறி, தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது.

எனவேதான் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக கடந்த 1990ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபை அறிவித்தது. அதன்படியே ஒவ்வோர் ஆண்டும் இந்தநாள், உலக முதியோர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

21ஆம் நூற்றாண்டில் வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக்கூடிய சவால் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டும், அனைத்து வயதினரையும் முன்னிலைப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல் ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
அத்துடன் வயது முதிர்ந்தோரைப் பாதுகாப்பதுடன் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பங்களிப்பிற்கும் உறுதி மேற்கொள்வோம்!

ஸ்ரீவித்யா