September 18, 2021

உலக பள்ளி செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற 7 வயது மும்பை சிறுவன்!

சர்வதேச அளவிலான பள்ளிகளைச் சேர்ந்த ஏழு வயதிற்குட்பட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பிரேசிலின் ஜூயஸ் டி போராவில் நடந்தது. நேற்று முன்தினம் முடிவடைந்த இந்த போட்டியில் மும்பையை சேர்ந்த ஏழு வயது சிறுவன் தேவ் ஷா சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறான்.
chess 6
மும்பையிலுள்ள திருபாய் அம்பானி பள்ளியில் படித்து வரும் தேவ் ஷா சவுத் மும்பை செஸ் அகாடமியில் பயிற்சி மாணவனாக இருக்கிறான். 9-க்கு 7.5 புள்ளிகளை வென்று சாதனை படைத்துள்ள இவன் உலக செஸ் கூட்டமைப்பு வழங்கும் கேண்டிடேட் மாஸ்டர் பட்டத்தையும் பெற தகுதி பெற்றுள்ளார். இவனுடைய தற்போதைய சர்வதேச ரேட்டிங் 1448 என்பது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி கொஞ்சம் சதுரங்கத்தின் வரலாற்றைப் பார்ப்போமா?. இந்தியாவில் கிட்டத்தட்ட கி.பி.600 ஆண்டுகளில் சதுரங்கம் விளையாடியதற்கான சான்றுகள் உள்ளன. இந்தியாவில்தான் சதுரங்க விளையாட்டு தோன்றியிருக்க வேண்டும் என்றே பலரும் நினைக்கிறார்கள். பின் இந்தியா வழியாக பாரசீகத்துக்குச் சென்றுள்ளது. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும், பிற உலக நாடுகளுக்கும் பரவியுள்ளது.

தற்போது விளையாடப்படும் ஆட்டத்தின் விதிமுறைகள் அனைத்துமே கிட்டத்தட்ட 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் முடிவு செய்யப்பட்டன. அப்போதுதான் ஒவ்வொரு சதுரங்கக்காயும் எப்படி நகரலாம், எது எதை எப்படி வெட்டலாம், எப்பொழுது ஆட்டம் முடிவடையும் போன்றவை முடிவாக்கப்பட்டன. அதற்குப் பிறகு இதுவரையில் விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை.