October 22, 2021

உலகில் சுத்த ரத்தம் என்று எதுவுமே கிடையாது. ஒவ்வொரு இனமும் கலப்பினமே!

இணையத்தில் சமீபமாக வந்தேறி எனும் வார்த்தையை பரவலாக பார்க்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை பார்ப்பனர் களை வந்தேறிகள்.. வந்தேறிகள் என்று கூறி அரசியல் நடத்திய திராவிடக் கட்சியினர் இன்று அதே வந்தேறி எனும் வார்த்தையை கண்டு பதட்டமடைவதையும் காண்கிறேன்.உலகம் முழுக்க தமிழர்கள் அகதிகளாக தஞ்ச மடைந்திருக்கும் நிலையில் வந்தேறி என்ற வார்த்தையை எப்படி ஒரு தமிழனால் சொல்ல முடிகிறது என்பது புரியவில்லை. அது ஒரு வலி நிறைந்த வார்த்தை.
bala 28
இன்றைய மனித சமூகம் அடைந்திருக்கும் அத்தனை வளர்ச்சிக்கும் காட்டுவாசிகளாக காடுகளில் சுற்றித்திரிந்த அந்த முதல் மனிதர்கள் வந்தேறியாக ஒவ்வொரு இடத்திற்கும் இடம்பெயர்ததுதான் காரணமாக இருக்க முடியும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதன் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறான். இன்றும் தமிழர்கள் முகங்கள் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த மனித இனங்களின் முகங்களோடு ஒத்துப்போவதை கவனிக்க முடியும். கண்டங் கள் பிரிந்தபோது நாம் இங்கு வந்திருக்க வேண்டும். அல்லது அவர்கள் பிரிந்து சென்றிருக்க வேண்டும்.

உலகம் முழுக்க மனித இனம் இப்படிதான் பரவியிருக்க முடியும். ஒவ்வொரு உயிரையும் இயக்குவது அவற்றின் தேவைகளே. பசியும் தன் குடும்ப தேவையும் தான் வட இந்தியன் ஒருவனை மொழி தெரியாத தமிழகத்திற்கு வந்து வேலை பார்க்க தூண்டுகிறது. அப்படிதான் தமிழர்களையும் உலகெங்கும் இடம்பெயர வைக்கிறது.

இன்று அமெரிக்காவில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இரண்டு மூன்று தலைமுறைக்குப்பின் தங்கள் தாய்மொழி மறந்து அவர்கள் அந்த மண்ணின் மைந்தர்களாக மாறிவிடுவார்கள். இதுதான் எதார்த்தம்.

இந்தியா என்பது ஒரு தனி தேசிய இனத்தின் நாடல்ல. இங்கு பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன. கட்டாயத்தின் பேரில் இணைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலை தொடரலாம். அல்லது சில நூற்றாண்டுகளுக்குப்பி சிதறுண்டுப்போகவும் கூடும்.

அந்தவகையில் மொழிவழி மாநிலங்களாக பிரிக்கப்படுவதற்கு முன் தமிழகம் பெரியாரின் தலைமையின் கீழ் முக்கியமான சமூக சீர்திருத்த போராட்டக்களமாக இருந்தது. மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் ஒவ்வொருவரும் அவரவர் மொழி அடையாளத்துடன் பிரிந்து சென்றப்பிறகு தமிழர்களையும் அதுபோலவே அனுமதித்திருக்க வேண்டும்.

ஆனால் தமிழர்களை தமிழர்கள் என்ற அடையாளத்துடன் இருக்கவிடாமல் தங்களின் அரசியல் லாபத்திற்காக திராவிடர்கள் என்றே மெயிண்டெய்ன் செய்த அரசியல் சித்துவிளையாட்டின் காரணமாகவும் கூட இந்த வந்தேறி எனும் வார்த்தை இன்று சில அமைப்பினரால் கூர் தீட்டப்படுகிறது என நினைக்கிறேன்.

ஆயிரம் ஆண்டுகளாக, நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் வாழும் ஆரியர்களானாலும் சரி பிறமொழியினரானாலும் சரி அவர்களின் தாய் மொழியுரிமையுடன் இந்த மண்ணில் யாரையும் அடிமைப்படுத்தாமல் வாழ்வதற்கான அத்தனை உரிமையும் உண்டும்.

உலகெங்கிலும் வாழ்ந்தாலும் தமிழர்கள் தமிழர்கள் என்ற அடையாளத்துடன் தான் வாழ்கிறார்கள். தாங்கள் தஞ்சம் புகுந்த எந்த மண்ணின் பூர்வீகக்குடிகளின் இன அடையாளத்தை தமிழர்கள் சிதைத்ததில்லை.

எங்கு வாழ்ந்தாலும், “நீ தமிழனா” என்று கேட்டால் “ஆமா” என்று தமிழர்கள் சொல்வதுபோல் இங்கிருக்கும் பிறமொழியினர் தங்கள் தாய்மொழி அடையாளத்துடன் சுதந்திரமாக தலைநிமிர்ந்து வாழவேண்டும். எதற்காக போலியாக ஏதோவொரு அடையாளத்தை அவர்கள் சுமக்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த இனங்களும் தங்கள் நிர்வாக வசதிக்காக சில எல்லைகளையும் சில கட்டுப்பாடு களையும் வைத்திருக்கின்றன. அந்த மண்ணின் நடைமுறைகளையும் அவர்களின் இன அடையாளங்களையும் சிதைக்காமல் ஏற்றுக்கொண்டு வாழ்வதே ஆரோக்கியமானது.

பிரபஞ்சம் குறித்து வாசிக்க ஆரம்பித்தால் நாம், நான் பெரியவன் நீ பெரியவன்.. என் இனம் உயர்ந்தது.. என் சாதி உயர்ந்தது.. என் மொழி உயர்ந்தது என்று அடித்துக் கொள்வதெல்லாம் காமெடி என புரியும்.

இந்த பிரபஞ்சத்தில் நாம் அடித்துக்கொள்ளும் இந்த பூமி என்பது வெறும் ஒரு சிறு துகள் மட்டுமே. இதற்குள் தூசியிலும் தூசியாக இருந்து கொண்டுதான் நாம் முட்டிக் கொண்டிருக்கிறோம்.

அதிக பட்சம் ஒருவனால் தன் முன்னோர்கள் என ஒரு ஐந்து தலைமுறையினரை நினைவு கூறலாம். சரி பத்து தலைமுறையினர் என்று கூட வைத்துக் கொள்வோம்.அதற்கு முன் யார் அவனின் மூதாதையர்கள் என எப்படி தெரியும். அந்த வகையில் இன்று யாரை வந்தேறிகள் என்று ஒருவன் சொல்கிறானோ அவர்களின் வழித் தோன்றலாகவும் கூட அவன் இருக்கலாம் யார் கண்டா? ஏனெனில் மனித சமூகம் பல காதல்களையும் கள்ளக்காதல்களையும் சர்வசாதாரணமாக கடந்து பயணித்துக் கொண்டேயிருக்கிறது.

மகாராஷ்டிராவிலிருந்து தமிழகத்திற்கு வந்திருக்கும் நான் வந்தேறி. தமிழகத்தின் வெவ்வேறுப் பகுதியில் இருந்து வந்திருக்கும் நாமெல்லாம் சென்னையின் பூர்வீகக்குடிகளைப் பொருத்தவரை வந்தேறிகளே.அதனால் எவராக இருந்தால் என்ன.. எந்த மொழிக்காரராக இருந்தால் என்ன.. வந்தேறி எனும் சொல் ஆபத்தானது. கண்டிக்கப்பட வேண்டியது. இந்த  உலகில் சுத்த ரத்தம் என்று எதுவுமே கிடையாது. ஒவ்வொரு இனமும் கலப்பினமே. இந்த பிரபஞ்சம் எல்லோருக்குமானது. மனித சமூகம் அதை நோக்கிதான் பயணிக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது.

`யாதும் ஊரே
யாவரும் கேளீர்’

 

-கார்ட்டூனிஸ்ட் பாலா