September 25, 2021

உலகிலேயே கடுமையான ஹிப்போக்ரைட் சொசைட்டி தமிழ் சமூகம் எனலாம்!

அஸ்வினி என்ற மாணவியை கொலை செய்ததால் மூஞ்சி முகரை எல்லாம் பேத்து அமர வைக்கப்பட்டு இருக்கும் அந்த இளைஞனின் முகத்தை பாருங்கள். எந்த தெளிவும் இல்லாமல் , ஒரு வறண்ட முகக்களை தெரியும். இவன் மட்டுமல்ல இதைப் போல லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழகம் முழுக்க உருவாகி இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் நம் தம்பியும் இருக்கக் கூடும்.

இதைப்போன்ற இளைஞர்களை ஆள் நடமாட்டமில்லாத தெருவில் கவனித்து இருக்கிறேன். ஓரங்கட்டி வைக்கப்பட்டு இருக்கும் பைக்கில் துப்பட்டாவால் முகத்தை மறைத்துக்கொண்டு ஒரு யுவதி அமர்ந்திருக்க , தொள தொள ஜீன்ஸ் போட்டுக் கொண்டு இந்த இளைஞன் அங்கே இங்கே தொட்டு சீண்டி விளையாடிக்கொண்டு இருப்பான்.

அந்த யுவதி கல்லூரி பெண்ணாக மட்டும் இருக்க மாட்டாள். 8 வது 9ம் வகுப்பு படிக்கும் பெண்ணாகவும் இருப்பாள். இந்த யுவதி நம் தங்கையாகவும் இருக்கக் கூடும்.

முன்னொரு காலங்களிலும் சிறு வயதிலேயே இதைப்போன்ற சில்மிஷ விளையாட்டுக்கள் நடந்தனதான் என்றாலும் , அதில் பெரும்பாலும் க்ரைம் இருக்காது. செக்ஸுவல் அப்யூஸோடு நின்று விடும். இப்போது பெரும்பாலான காதல் மற்றும் கள்ளக்காதல் விவகாரங்கள் ஏதேனும் ஒரு க்ரைமில்தான் முடிகின்றன.

நாம் இப்போது என்ன செய்யப் போகிறோம் ?

அந்த இளைஞனை அடித்து உதைத்து , போலிஸிடம் ஒப்படைத்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக்கொடுத்து விட்டால் முடிந்ததா ?

பெண்களை பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டால் முடிந்து விடுமா ?

போலீஸ் , நீதித்துறை மற்றும் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி விட்டால் சரி ஆகி விடுமா ?

விஞ்ஞானமும் , வசதிகளும் எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டு செல்கின்றனவோ அந்த அளவுக்கு மனித குலம் இந்தியாவில் வளரவில்லை. அதற்கு எதிர் துருவமாக பின்னோக்கி பிற்போக்குத்தனமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.

பொதுவாக சொன்னால் , கலை கலாச்சார சுரணை உணர்வு கொஞ்சமும் இல்லாத பிராய்லர் கோழி கூட்டமாக ஒரு பெரும் மக்கள் கூட்டம் வளர்ந்து வருகிறது. “ஜங்க் ஃபுட் “ என்று சொல்வார்களே , அது போல “ஜங்க் க்ரௌட்” பெரும் அளவில் வளர்ந்து வருகிறது.

இந்த கூட்டத்திற்கு , லேட்டஸ்ட் உடை ,மொபைல் , பைக் , சரக்கு ,மூன்று வேளை தின்று மலம் கழிப்பது + செக்ஸ் இதைத்தவிர வேறு ஏதும் தெரியாது. இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். திருடுவார்கள் , கொள்ளையடிப்பார்கள் , கூலிப்படையில் சேர்வார்கள் .கொலை செய்வார்கள் .

இதைப்போன்ற இளைஞர்கள் கூட்டம் பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாமல் , சாதி மத ஏற்றத் தாழ்வு இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் பரவியுள்ளனர்.

என்ன ஏழை இளைஞன் மாட்டிக்கொள்வான். பணக்காரன் அல்லது மேற்சாதி இளைஞன் வெளியே தெரியாமல் தப்பித்துக் கொள்வான்.

பலர் இதற்கெல்லாம் பெரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளேஎ காரணம் என்பர். நான் இதை முழுமையாக ஏற்கவில்லை. தமிழர் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் 70 -80 களில் கூட வறுமையில் உழன்ற தமிழ் இளைஞர் கூட்டம் தான் கொள்கை வீரர்களாக மிளிர்ந்தார்கள். சிங்கிள் டீக்கு டிங்கி அடித்தாலும் சுயம்ரியாதை சிங்கமாக இருந்தார்கள். பெண்களை மரியாதையாக நடத்தினார்கள் , கண்ணியமாக காதலித்தார்கள். அவர்களை வறுமை கொன்றுக்கொண்டு இருந்தாலும் படிப்பு இருந்தது, வாசிப்பு இருந்தது. ஒவ்வொருவருக்கும் தலைவர்கள் இருந்தனர் , ஆதர்சங்கள் இருந்தனர் .

இன்றைய, “இதைப்போன்ற” இளைஞர்களுக்கு கையில் மொபைலைத் தவிர வேறெதுவும் இல்லை.

மண்டைக்குள்ளும் மொபைல் மட்டும் தான் இருக்கிறது. அதைத்தாண்டி கடும் தாழ்வு மனப்பான்மையிலும் , பெண்களைப்பற்றி பிற்போக்குத்தனமான கருத்துக்களோடும் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் கூட்டத்தில் அவர்கள் பெண்களைப்பற்றி பேசுவதைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும்.

இதைப்போன்ற இளைஞர்கள் ஒரு பெண் பின்னால் நீண்ட நாள் திரிந்தாலே , அது காதல்தான். அதாவது அந்த பெண் ஒரு புன்னகை கூட புரிந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. “இம்மாம் நாள் அவ பின்னாடியே தானே அலைஞ்சிட்டு இருந்தேன். இன்னிக்கி வேற ஒருத்தன் கூட சுத்துறா தே…யா “ என்பார்கள். இதுவே இப்படி என்றால் , ஒரு சிறு புன்னகை , ஒரு நாணம் , அன்பாக ஒரு பார்வை , நட்பாக பழகுதல் , காஃபி ஷாப் பழக்கம் என எல்லாமே காதல் தான். அதை ஒரு கட்டத்தில் காதல் இல்லை என மறுத்தால் , ஏதேனும் வன்முறை , ஆசிட் அடித்தல் , அதிக பட்சமாக கொலை செய்தல்.

உண்மையாக சொன்னால் பல இளைஞர்களுக்கும் பெண் கிடைப்பதில்லை என்ற இன் செக்யூரிட்டியிலும் , மன அழுத்தத்திலும் இருக்கிறார்கள். கிடைக்கும் வரை காலை நக்கி கெஞ்சி விட்டு , கிடைத்ததும் அவளை “புனித பத்தினியாக” இருக்கும் படி துன்புறுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவள் அதை மீறி வெளியேறும் போது தண்டனை கொடுக்கிறார்கள்.

இதில் சில இளைஞர்கள் பெண்களுடன் நெருக்கமாக பழகுவதே பணம் பறிக்கத்தான். 9 , 10 ம் வகுப்பு பெண்கள் வீட்டில் பணம் திருடி இவர்களிடம் கொடுத்ததை போலீஸ் நண்பர் கேஷுவலாக சொன்னார்.

கொலை நடந்தால் கூட , அந்த பெண்ணின் கேரக்டரைப் பற்றி தவறாக பேசும் கோரைப் பற்கள் கொண்ட கூட்டம் இங்கே இருக்கிறது. உலகிலேயே கடுமையான ஹிப்போக்ரைட் சொசைட்டி தமிழ் சமூகம் எனலாம்.

சமீபத்தில் 25 வருடங்களாகத்தான் இந்த அளவுக்கு ஹிப்போக்ரைட் சொசைட்டியாக மாறி இருக்கிறது.

இந்த ஹிப்போக்ரைட் சொசைட்டியின் மனோபாவமே இதைப்போன்ற இளைஞர்கள் உருவாகக் காரணம்.

சிலருக்கு ஹிப்போக்ரைட் சொசைட்டி என்றால் தெரியாமல் இருக்கலாம்.

உதாரணமாக , எல்லா வகையான அயோக்கிய தனத்தையும் நாலு சுவருக்குள் யாருக்கும் தெரியாமல் செய்து கொண்டு வெளியே பொதுவெளியில் இயல்பாக இருக்கும் ஒருவனை வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள்…

இதைப்போன்ற சமூகம் இந்த இளைஞர்களை உருவாக்காமல் வேறு கொள்கை வீரர்களையா உருவாக்கும் ?

மீண்டும் , பெண்களை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்ல ஒவ்வொருவருக்கும் அலுப்பாகத்தான் இருக்கும். என்ன செய்வது இப்போதைக்கு வேறு வழியில்லை. இதுவே குறைந்த பட்ச தீர்வு.

காதலிக்க விருப்பமில்லை என்றால் திரும்பி கூட பார்க்காதீர்கள். தொடர்ந்து வருவது தெரிந்தால் உடனே வீட்டில் சொல்லுங்கள் அல்லது புகார் அளிக்கலாம்.

தெரியாத , அறியாத புது நபர்கள் உடன் காஃபி ஷாப் , சினிமா எல்லாம் டேஞ்சர். அவன் அதையே காதல் என நினைத்துக் கொள்கிறான்.

சும்மா ஃபிரண்ட்ஷிப் , க்ரஷ் , ஃபிலிர்ட் என்றெல்லாம் கூறிக்கொண்டு திரிந்தாலும் ரிஸ்க்தான். நீங்கள் அவனை பிரியும்போது வன்முறை வெளிவர வாய்ப்புள்ளது.

முன்பின் தெரியாதவனுடன் பழகுவதோ , அவன் அடிக்கடி கண்ணில் பட்டால் சிரிப்பதோ கூட ஆபத்தாகி விட்ட சூழலில் நமக்கெல்லாம் இது நடக்காது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். நமக்கு நடக்கவும் அந்த வாய்ப்பு இருக்கிறது என்ற எச்சரிக்கை உணர்வோடு இருத்தல் நலம்.

அராத்து