உதயநிதி-யின் மனிதன் தேறி விட்டான்! – AanthaiReporter.Com

உதயநிதி-யின் மனிதன் தேறி விட்டான்!

ஒரு மத யானையை சுண்டெலி சுளுக்கெடுக்கிற கதைகளுக்கு எப்பவுமே மக்கள் மத்தியில் ஒரு ‘மவுஸ்’ உண்டு. பிரகாஷ்ராஜ் என்ற யானையை உதயநிதி என்ற சுண்டெலி தோற்கடிப்பதுதான் இந்த படத்தின் அட்ராக்ஷன். அதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் களம், நம் அன்றாட வாழ்வின் லெவல் கிராசிங் ஏரியாவான பிளாட்பார்ம். அங்கு படுத்துறங்கும் ஏழைகள். (வருங்கால உடன்பிறப்புகள், “ஏழைப் பங்காளனே…” என்று உதயநிதிக்கு குரல் கொடுக்க வசதியாக ஒரு படம்)
manithan apr 29
ஒரு இந்தி படத்தின் ரீமேக்கான இதில், நிறைய எக்ஸ்ட்ரா சங்கதிகளை போட்டு கச்சேரியை களை கட்ட வைத்திருக்கிறார் இயக்குனர் ஐ.அஹமத்!

பொள்ளாச்சியில் வக்கீல் வேலை பார்த்து வரும் உதயநிதிக்கு முறைப்பெண் ஹன்சிகா மீது லவ். ஆனால் கோர்ட்டில் எதற்குமே லாயக்கில்லாத லாயர் என்ற பெயரெடுத்த உதயநிதிக்கு பெண் கொடுக்குமா ஹன்சிகா குடும்பம்? “ஒரு பெரிய கேஸ்ல ஜெயிச்சுட்டு அப்பா முன்னாடி கம்பீரமா நிற்கணும்” என்பது ஹன்சிகாவின் விருப்பம். ஆனால் அதற்கெல்லாம் சிறிதும் மெனக்கெடாத உதயநிதி, ஒரு கட்டத்தில் மனம் வெதும்பி சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வர, வந்த இடத்தில் ஏதோ ஒரு தைரியத்தில் ஒரு வழக்கை எடுக்கிறார். அதுதான் பணக்கார இளைஞன் ஒருவன் பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆறு பேர் மீது கார் ஏற்றி கொன்ற வழக்கு! அந்த இளைஞனுக்கு ஆதரவாக இந்தியாவிலேயே புகழ் பெற்ற வழக்கறிஞரான பிரகாஷ்ராஜ் உள்ளே வருகிறார். நீதிமன்றத்தில் நடக்கும் வாக்குவாதங்கள் எழுபது சதவீதமும், மிச்சசொச்ச நேரங்கள் ஹன்சிகா உதயநிதி டூயட்டுகளுக்காகவும் போய்விட, நெட் ரிசல்ட்?

தமிழில் இப்படியொரு படம் வந்து அநேக நாளாச்சு என்பதாலேயே கூட்டம் களை கட்டும்!

குருவித்தலையில் கோன் ஐஸ்சை வைத்த மாதிரி, சற்றே கடினமான ரோல்தான். நிறுத்தி நிதானமாக பொறுமையாக டீல் பண்ணுகிறார் உதயநிதி. யதார்த்தத்திற்கு மிக அருகில் நிற்கிறது அவரது கேரக்டர். அதனாலேயே பைட் சீன்களில் செமத்தியாக அடியெல்லாம் வாங்குகிறார். பிரகாஷ்ராஜ் நடிப்பு அசுரன் என்று தெரிந்தும், சரிக்கு சரி நின்று மோத முடிவெடுத்த அந்த துணிச்சலுக்காகவே முதல் சபாஷ். அந்த போட்டியில் ஓரளவுக்கு ஸ்கோர் செய்யவும் முடிந்திருக்கிறது அவரால். ஹன்சிகாவே பணம் கொடுத்து செல்போன் வாங்கித்தர சொன்னதாகவும், ஆனால் இரண்டாயிரம் ரூபாய் சைனா செட்டில் விஷயத்தை முடித்துவிட்டதாகவும் உதயநிதி அளக்கிற இடத்தில், ஐயோ வக்கீலே… எப்படிங்க இவ்ளோ தூரம் படிச்சீங்க? என்று சந்தேகப்பட வைக்கிறது அந்த கேரக்டர். அதென்னவோ தெரியவில்லை. லவ் சீன்களில் மட்டும் ஹன்சிகாவை வளைத்து வளைத்து பிரகாசம் ஆகிறார் உதயநிதி.

ஒளிப்பதிவாளர் மதியின் ஸ்பெஷல் லைட்டுகளில் குளித்து மேலும் மெருகேறியிருக்கிறார் ஹன்சிகா. அவரை அதிகம் நடிக்க வைத்து நமக்கும் ஹன்சிகாவுக்கும் ஒருசேர சங்கடத்தை தரவில்லை இயக்குனர். செகண்ட் ஹீரோயினாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், படத்தில் சேனல் ரிப்போர்ட்டர். தொலைக்காட்சியின் செவ்வக பிரேமிற்குள் வைத்தே அவரது சோலியை முடிக்காமல் லைவ்வாக நடமாடவும் விட்டிருக்கிறார்களா? நன்றாகவே ரசிக்க முடிகிறது.

அப்புறம் பிரகாஷ்ராஜ்! யப்பா… மனுஷன் இப்படியெல்லாம் நடிக்க முடியுமா? என்று மிரள வைக்கிறார். நீதிமன்ற நாற்காலியில் அமர்ந்தபடியே பிரகாஷ்ராஜிடம் ரியல் எஸ்டேட் பற்றி விவாதிக்கிற அளவுக்கு நெருக்கமான நீதிபதி, சட்டென்று தனக்கு எதிராக ஒரு முடிவெடுக்க, அதை சகிக்க முடியாமல் அவர் பண்ணும் அலப்பறை… அசத்தலய்யா அசத்தல்! ராதாரவி மட்டும் என்னவாம்? ஒரு அரை மில்லி மீட்டர் புன்னகையில் கூட ஆயிரம் அர்த்தங்களை வெளிப்படுத்துகிறார். பிசாசு படத்திற்கு பிறகு, ராதாரவிக்கு சபாஷ்களை அள்ளிக் கொடுத்திருக்கிற படம் இது.

மயில்சாமி, விவேக்குக்கெல்லாம் அதிகம் வெயிட் இல்லை. இருந்தாலும் இருப்பை தக்க வைக்கிறார்கள். படத்தில் சாட்சியாக வரும் அந்த ஏழைகளின் நடிப்பில் என்னவொரு தத்ரூபம்! பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்த உதவி இயக்குனர் குழுவுக்கு இந்த இடத்தில் ஒரு சபாஷ்.

சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை, படு பயங்கர இம்சை. காது பொத்துக் கொள்கிற அளவுக்கு ‘ங்கொய்ய்ய்ய்….’ சவுண்டை போட்டு படம் முழுக்க சாகடிக்கிறார். அதுவும் நீதிமன்ற விவாதங்களில் வசனங்களை கேட்க முடியாதளவுக்கு படுத்துகிறது அது. பாடல்களிலும் ஒரே மாதிரியான ஒப்பாரி ட்யூன். மாறணும்… இல்லேன்னா மாத்திரும் சினிமா!

அஜயன் பாலாவின் வசனங்கள் பல இடங்களில் நறுக் சுருக்! பொதுவாகவே இதுபோன்ற நீதிமன்ற கதைகளை பின்னணியாக கொண்ட படங்களில், வண்டி வண்டியாக வசனம் பேசுகிற வழக்கத்தை முதன் முறையாக தகர்த்திருக்கிறது அஜயன் பாலாவின் பேனா.

கடந்த மூன்று படங்களாக வாய்தா வாங்கிக் கொண்டிருந்த உதயநிதி இந்த முறை ஜெயித்தே விட்டார்! வேறு வழியில்லை. நீதிக்கு தலை வணங்கிவிட வேண்டிதுதான்!

-ஆர்.எஸ்.அந்தணன்