September 21, 2021

ஈ.பி.பில் ஐயாயிரம் வரை கேஷாக கட்டலாம்!

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில்,” தமிழக மின்சார வாரியத்தில் 1.88 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்பட 2.65 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. மின் கட்டணம் ரூ. 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தால், மின் கட்டணம் வசூலிக்கும் பல மையங்களில் கட்டணமானது ரொக்கமாக இல்லாமல் காசோலையாகவே பெறப்பட்டு வந்தது. எனவே, ரொக்கமாகச் செலுத்தும் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
eb bill
எனவே இதனை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி, மின் கட்டணத்தொகை, காசோலை பெறுவதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் கோரியது.

இதனை ஏற்று, விதிகளில் ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தாழ்வழுத்த மின் நுகர்வோர் ரூ.2 ஆயிரத்துக்கு அதிகமாகச் செலுத்தும் கட்டணத்தை கேட்பு வரைவோலை அல்லது காசோலையாகச் செலுத்தவேண்டும் என்பதை ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமாக செலுத்தும் கட்டணமாக திருத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் சூழ்நிலையைப் பொருத்து மின்சார வாரிய அதிகாரி கட்டணத் தொகையை ரொக்கமாக ஏற்றுக்கொள்வதுடன், எதிர்காலத்தில் கேட்பு வரைவோலை அல்லது காசோலையாகச் செலுத்த நுகர்வோருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நுகர்வோர் காசோலை அளித்து அது திரும்பி வந்தால் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிப்பது குறித்தும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, நுகர்வோரால் வழங்கப்பட்ட காசோலை வேறு எந்தவிதமான காரணங்களுக்காகவும் திருப்பப்பட்டால் தாழ்வழுத்த நுகர்வோர் குறைந்தபட்சம் மூன்று பட்டியலிடல் காலங்களும் (மூன்று முறை), உயர் அழுத்த நுகர்வோர் மூன்று மாதங்களும் மின் கட்டணம் செலுத்தும் செயல்பாட்டை கண்காணித்து அதன் பின் அவரிடம் இருந்து நான்காவது முறை காசோலை ஏற்றுக்கொள்ளப்படும்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.