January 31, 2023

ஈஸ்வரன் – விமர்சனம்!

நவீன மயமாகிவிட்ட இக்காலத்தில் கூட நம் நாடெங்கும் சாமி ஆடுதல், வாக்குச் சொல்லுதல், பூதம், பேய், பிசாசு, மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல், மந்திரம் மந்திரித்தல், பில்லி சூனியம் செய்து மக்களுக்குத் துன்பம், சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டிச்சாத்தான் கருப்பு முதலியவைகளைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்து மக்களை வாதீனப்படுத்தல், முன் ஜென்மம் பின் ஜென்மம் உண்டெனல், இவை முதலாகிய விஷயங்களில் நம்பிக்கை கொண்டு திரியும் ஜனங்கள் ஏராளமுண்டு.. அப்படி ஒரு கேரக்டரை மையமாகக் கொண்டு பாரதிராஜா & சிம்புவைக் கொண்டு ஈஸ்வரன் என்ற பெயரில் இரண்டு மணி சினிமா ஒன்றைக் கொடுத்திருக்கிறார்..படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும் போது பெரும்பாலானோர் ‘ஈஸ்வரா’ என்று முணங்கியபடிதான் வருகிறார்கள்..

பழனிக்கு பக்கத்தில் இருக்கும் வில்லேஜில் வசித்து வரும் பாரதிராஜா குடும்பத்தில் ஒரு உயிர் பலி நடந்தே தீரும் என்று சோழிகளை உருட்டி ஆருடம் சொல்லி விடுகிறார் காளி வெங்கட். ஏற்கெனவே இதே சோழி போட்டு ஜோசியம் சொன்னதும் பலித்து இருந்ததால் அந்தக் குடும்பமே அரண்டு போய் மகன், மகள்கள் அனைவரும் கிராமத்துக்கு வருவதை பல வருடங்களாக தவிர்த்துவிடுகின்றனர். யாருமில்லா தனிமையில் உழலும் பாரதிராஜாவை புதிதாக அந்த ஊருக்கு வரும் சிலம்பரசன் அன்போடு கவனித்துக்கொள்கிறார். அந்தக் காலக் கட்டத்தில் பாரதிராஜாவின் மொத்த குடும்பத்தையும் கருவறுப்பேன் என்று சபதம் செய்தபடி சிறையில் இருந்து வெளியே வருகிறார் வில்லன். அவரிடமிருந்து சிம்பு எப்படி அந்தக் குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பதும், உண்மையில் சிம்பு யார் என்பதுமே ஈஸ்வரன் கதை.

ஈஸ்வரன் என்ற நாமகரணத்தில் வரும் சிம்பு உடல் எடை எல்லாம் குறைத்து, இளமையாகத் தான் தெரிகிறார். ஆனால் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததைக் கிளிப் பிள்ளை மாதிரி எதையும் ஹோம் ஒர்க் செய்யாமல் நடித்து விட்டு போயிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

பெரியசாமி என்ற கேரக்டர் எடுத்து வரும் பாரதிராஜா-தான் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். இயக்குநர் சுசீந்தரனுக்கு மிகவும் வேண்டப்பட்டவராகி விட்டதால் இவர் ரோலை மிக அழகாகச் செதுக்கி இருக்கிறார். ஆனால், வில்லனுக்கும் அவருக்குமான பகைக்கு உரிய காரணம் எடுபடாததால் பாரதிராஜா-வே டல் அடிப்பதையும் சொல்லியே ஆக வேண்டும் நாயகி என்றொருவர் இருக்கிறார். ஏகப்பட்ட படங்களுக்கு அப்புறம் பாலா சரவணன் பலே சொல்ல வைக்கிறார்.

இசை தமன்.. பாடல்கள் படத்தில் பார்க்கும் போது ஓ கே சொல்ல வைக்கிறது. ஆனால் பின்னணி இசையை ஏனிப்படி அதிகபடியாய் வைத்து கடுபேத்தி இருக்கிறார் என்று தெரிய வில்லை. கேமராமேன் திரு ஒரே ஒரு வில்லேஜை மட்டும் காட்ட வேண்டியதிருப்பதால் ஒப்பேற்றி இருக்கிறார். எடிட்டர் ஆண்டனி கத்திரி ரொம்ப ஷார்ப்.

இயக்குநர் சுசிந்தரன் 11 வருடங்களில் 13 படங்களை முடித்துவிட்ட நிலையில் இந்த ‘ஈஸ்வரன்’அவரது 14-வது படமாம். இந்த ஈஸ்வரன் மூலம் நமக்கு மிகவும் பரிச்சயாமாகி விட்ட லாக்டவுன், கொரோனா , முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றைக் கொண்டு ஒரு மாய பிம்பம் – அதிலும் கோலிவுட்டின் சர்ச்சை ஹீரோ சிம்புவை வைத்து படமெடுத்து ரிலீஸூம் செய்து விட்டார் .. அவ்வளவுதான். இப்படி எல்லாம் சாதனை படைப்பதில் அர்த்த மில்லை என்பதை கோலிவுட் சுசீந்தரனுக்கு விரைவில் உணர்த்தும் என்று நம்புவோமே!

மொத்தத்தில் ஈஸ்வரன் –  ருத்ர தாண்டவமாட வேண்டிய வாய்ப்பை தவறி விட்டு விட்டான்

மார்க் 2.5 / 5