September 20, 2021

ஈவ் டீசிங் செய்த வாலிபர்களை பெல்டால் விளாசிய அக்காள்–தங்கைக்கு அரியானா முதல்வர் ரிவார்ட்!

அரியானா மாநிலம் ரோதக்கில் இருந்து டில்லி நோக்கி வந்த பஸ்சில் ஈவ் -டீசிங் செய்த வாலிபர்களுக்கு சகோதாரிகள் இணைந்து தர்ம அடி கொடுத்தனர். இந்த காட்சி வீடியோ மூலம் அனைத்து மீடியாக்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் வாலிபர்களை தைரியமாக விளாசிய அக்காள்–தங்கை இருவருக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அரியானா முதல்–மந்திரி மனோகர் லால் கட்டார் அறிவித்து உள்ளார்.
harysn sisters
அரியானா மாநிலம் ரோதக் நகரில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருபவர்கள் பூஜா, ஆர்த்தி. இருவரும் அக்காள்–தங்கை ஆவர். இவர்கள் ஓடும் பஸ்சில் தங்களுக்கு செக்ஸ் தொல்லை தந்த வாலிபர்களை நையப்புடைத்து விரட்டியடித்தனர். இந்த சம்பவம் அவர்களை வீரமங்கைகளாக அடையாளம் காட்டியது.இது தொடர்பான சக பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்த காட்சிகள் ஊடகங்களில் வெளியானதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதிலும் இருந்தும் பூஜா, ஆர்த்தி சகோதரிகளுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது

இந்த நிலையில், அரியானா மாநில முதல்–மந்திரி மனோகர் லால் கட்டார், சகோதரிகள் இருவரும் அவர்களது தீரச் செயலுக்காக வருகிற குடியரசு தினவிழாவின்போது கவுரவிக்கப்படுவார்கள் எனவும், அப்போது அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் நேற்று அறிவித்தார்.

மேலும், மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கும், போக்குவரத்து துறைக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் பஸ்சில் நடக்கக்கூடாது என்று பஸ் கண்டக்டர்களும், டிரைவர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.மேலும் சகோதரிகளை ஈவ் டீசிங் செய்து தொல்லை கொடுத்த 3 வாலிபர்கள் மீதும் வன்செயலில் ஈடுபட்டு பெண்களை மானபங்கம் செய்தல், வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்துதல் போன்ற 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 

சம்பவ வீடியோப் பார்க்க:https://www.youtube.com/watch?v=KLM7PFPRgyk