September 24, 2021

இவன் வேற மாதிரி – திரை விமர்சனம்!

அநியாயத்தைக் கண்டு பொங்கி எழும் நாயகனைப் பற்றிய ஆயிரத்தி ஒன்றாவது படம்தான் இதுவும்.‘இவன் வேற மாதிரி’ என டைட்டில் வைத்தாலும் வழக்கமான மசாலா படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன்.

‘எங்கேயும் எப்போதும்’ படத்தைப் பார்த்ததும், அழகான காதலை, உணர்வுபூர்வமாகக் கொடுக்க அருமையான ஒரு இயக்குனர் கிடைத்து விட்டார் என்று கொண்டாடப்பட்டவர் இயக்குனர் சரவணன். இரண்டாவது படத்திலேயே ஒரு மசாலாப் படத்தைக் கொடுத்து வழக்கமான இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிக்க முயற்சிப்பது வருத்தமான விஷயம்தான்.
ivan-vera-mathiri-movie-owl 15
விஷுவல் கம்யூனிகேஷன் முடித்து விட்டு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பவர் விக்ரம் பிரபு. சட்ட அமைச்சராக இருந்து கொண்டு சட்டத்தை மீறி வருபவர் ஹரிராஜ். சட்டக் கல்லூரியில் அவரை மதிக்கவில்லை என்ற காரணத்திற்காக ஒரு வன்முறையைத் தூண்டி விடுகிறார். அதில் மூவர் உயிரிழக்கிறார்கள்.

பரோலில் அவருடைய தம்பி வம்சியை வெளியே எடுத்து ஒரு கொலையையும் செய்ய வைக்கிறார். ஆனால் வம்சியைக் கடத்தி வைத்துக் கொண்டு, அவரை பரோல் முடிந்தும் மீண்டும் சிறை செல்ல முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தி விடுகிறார்.

சில நாட்கள் கழித்து இதை வெளியில் தெரிய வைத்து ஹரிராஜ் பதவி பறி போகவும், அவர் கைதாகவும் காரணமாகிறார் விக்ரம் பிரபு. பின்னர் வம்சியை யாருக்கும் தெரியாமல் நடு வீதியில் போட்டு விட்டுப் போகிறார்.

தன்னை இப்படி அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியது யார் என்று தெரியாமல் தவிக்கும் வம்சி, விக்ரம் பிரபுவைக் கண்டு பிடித்து பழி வாங்கத் துடிக்கிறார்.

அது நடந்ததா இல்லையா என்பதுதான் ‘இவன் வேற மாதிரி’.

எதையாவது, புதுமையாகவோ, வித்தியாசமாகவோ செய்பவர்களைத்தான் இவன் வேற மாதிரி என சொல்வோம். ஆனால், இந்த படத்தில் அப்படி யார் வேற மாதிரி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. கடத்தல் விஷயமெல்லாம் ‘இந்தியன்’ படத்திலேயே பார்த்தாகி விட்டது.
மற்றபடி மந்திரியை எதிர்ப்பது, தன்னை யார் என்று காட்டாமலேயே ஹீரோயிசம் செய்வதை ‘ரமணா’வில் பார்த்தாகி விட்டது.

அது எப்படிங்க, ஹீரோயின் போற பஸ்சிலேயே கரெக்டா ஹீரோவும் போறாரு. மீனைக் கொடுக்கிறாரு, அப்புறம் குழந்தையைக் கொடுக்கிறாரு… யதேச்சையா நடக்கிற மாதிரி தெரியலையே…‘எங்கேயும் எப்போதும்’ பஸ் சென்டிமென்ட்டை இந்த படத்துலயும் பயன்படுத்தியிருக்காருன்னு தோணுது.

‘கும்கி’ படத்துக்கப்புறமா விக்ரம் பிரபு ஹீரோவா நடிக்கிற படம். அந்த படத்துல காதல் பார்வை பார்த்தே கவர்ந்தவரு, இந்த படத்துல ஆக்ஷன் ஹீரோவா அவதாரம் எடுத்திருக்காரு. சண்டைக் காட்சிகள்ல வீராவேசம் வெளிப்படுது. அதுக்கேத்தபடி முகத்துல இன்னும் ஆவேசத்தை வெளிப்படுத்தியிருந்தால் நல்லா இருந்திருக்கும்.

புதுமுகம் சுரபி ஹீரோயினா அறிமுகமாகியிருக்காங்க. அழகா இருக்காங்க. ஆனால், தமிழ் சினிமா ஹீரோயின் வழக்கப்படி இப்படி லூசுத்தனமா அலைய விட்டிருக்க வேணாம். இஞ்சினியரிங் படிக்கிற பொன்னு இப்படியா அசமஞ்சமா இருக்கும். படத்துல தனியாக யாரும் காமெடி நடிகர் இல்லாத குறையை இவங்க கேரக்டர்ல அமைச்சிட்டாரு இயக்குனர்.

வில்லன்னு சொன்னாலும் ஏறக்குறைய இரண்டாவது ஹீரோ மாதிரிதான் வர்றாரு வம்சி. தெலுங்குல டப்பிங் பண்ணால் பொருத்தமா இருக்கும்னு இவரை செலக்ட் பண்ணியிருப்பாங்க போல. எப்பவுமே உர்ர்ர்னு இருக்காரு. ரகுவரன், பிரகாஷ்ராஜ், நாசர் இவங்கள்லாம் வில்லனா நடிச்ச படங்களைப் பாருங்க பாஸ்….நல்லா வருவீங்க…

ரஜினிகாந்த் தயாரிச்ச ‘வள்ளி’ படத்தோட ஹீரோ ஹரிராஜ் படத்துல இன்னொரு வில்லன். அரசியல்வாதிகளையும், அமைச்சரையும் வில்லனா காட்டறதுதான் நம்ம தமிழ் சினிமால அதிகமா இருக்கிற வழக்கம்…அது இந்த படத்துலயும் மாறலை…

கமிஷனரா கணேஷ் வெங்கட்ராமன், கம்பீரமா இருக்கிறாரு, ஆனால் நடிக்கத்தான் அதிக வாய்ப்பில்லை.

சத்யா இசையில ‘லவ்வுல…’ பாடல் ரசிக்க வச்சிருக்கு…மத்த பாடல்கள்லாம் படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர்தான்.

ஸ்டன்ட் மாஸ்டர் ராஜசேகரை ரொம்பவும் பாராட்டணும். அந்த உயரமான பில்டிங் ஃபைட், மற்ற பைஃட்னு பிரமிக்க வைச்சிருக்காரு. ஹீரோயினை பொம்மை மாதிரி செட் பண்ண வச்சி பண்றதுலாம் ரொம்ப ஓவர்…

சுரபி போற பஸ்ஸுலயே விக்ரம் பிரபு பயணிக்கிறதும், விக்ரம் பிரபு அவங்க அம்மா கூட ஹாஸ்பிட்டல்ல இருக்கறப்போ பேஷன்ட் வந்து போன லிஸ்ட்டை விக்ரம் பிரபு எடுத்துட்டுப் போறதும், ஹரிராஜ் கிட்ட இன்ஸ்பெக்டர் போனை கொடுத்துப் பேசும் போது, கமிஷனரான கணேஷ் வெங்கட்ராமன் கிட்ட மாட்டறதும், என அந்த காலத்திலிருந்தே பார்த்து வரும் சினிமாத்தனமான காட்சிகள் நிறையவே உள்ளன.

மாத்தி யோசிச்ச ஒரே காட்சி…பில்டிங்ல பொம்மை மாதிரி, சுரபி கட்டப் பட்டிருக்கும் போது, அவங்க கம்மல் கீழே விழுற போது, விக்ரம் பிரபு கண்டு பிடிச்சிடுவாருன்னு நினைச்சி தியேட்டர்ல ஒரே கைத்தட்டல், ஆனால் விக்ரம் பிரபு அது தெரியாமலே போயிடறாரு….எப்படா சுரபிய கண்டுபிடிப்பாருன்னு நினைக்கிற அளவுக்கு மிகவும் நீநீநீ……ளமான காட்சி அது…

இவன் வேற மாதிரி – தலைப்பில் மட்டும்…

Courtesy:www.screen4screen.com/

1 thought on “இவன் வேற மாதிரி – திரை விமர்சனம்!

  1. neenga entha padathada nalla irukunu solluveenga… neenga ithu varaikum nalla irukunu review kodutha oru padam peru sollunga

Comments are closed.