October 16, 2021

இளையராஜா என்னும் தமிழ்நாட்டு மேதையின் அகந்தை!

தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் இளையராஜா நடந்து கொண்ட விதத்தை அவராலேயே கூட நியாயப்படுத்த முடியாது. எனவே ஊடகத்துறையினரும் ஊடக அமைப்புகளும் அவர் மீது கோபப் படுவதில் நியாயம் இருக்கிறது. அதேசமயம் அதற்கான தமது கண்டனங்களை பதிவு செய்துவிட்டு இந்த பிரச்சனையை கடந்து போவதே சரி. எல்லா கலைஞர்களையும்போல அவரும் உணர்ச்சிகளால் ஆனவர். அதுவும் பிறவி மேதை என்னும்போது அதற்குரிய சலுகையை நாம் அவருக்கு இந்த சம்பவத்தில் கொடுத்துவிட்டு இதை கடந்து செல்லலாம்.
cine dec 18
காரணம் அவரது இசை மேதமையும் அத்தோடு ஒட்டிப்பிறந்த அகந்தையும் ஊரறிந்தவை. அவரது மேதமை அவருக்கு உலகப்புகழ் தந்தது. அவரது அகந்தை அவருக்கான சரிவையும் தனிமையையும் பெற்றுத் தந்தது. ஆனானப்பட்ட பெரியாரையே வெறும் நாத்திகர்/கடவுள் மறுப்பாளர் என்பதாக தட்டையாக புரிந்துகொண்டு அவரது திரைப்படத்துக்கு இசை அமைக்க மாட்டேன் என்று மறுக்கும் அளவுக்கு தான் இசைக்கு வெளியிலான இளையராஜாவின் ஞானம் இருந்து வந்திருக்கிறது. எனவே இந்த சம்பவத்தில் அவர் எரிச்சலடைந்ததற்கும் செய்தியாளனை பகிரங்கமாக அவமானப்படுத்தியதற்கும் ஊடகத்துறையினர் தம் கண்டனத்தை பதிவு செய்துவிட்டு கடந்து செல்லலாம்.

அதேசமயம், இந்த சம்பவத்தை முன்வைத்து இந்த சம்பவத்தைத் தாண்டி தமிழக ஊடகங்கள்/ஊடகவியலாளர்கள் மீதான பரவலான விமர்சனங்களின் அடிநாதமாக கேட்கப்படும் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு ஊடகத்துறையில் இருக்கும் நாம் அனைவருமே முகம் கொடுக்கத்தான் வேண்டும்.

1. 24 மணிநேர செய்திச்சேவை வந்தபிறகு செய்தியாளர்கள் இடம், பொருள், ஏவல் அறிந்து தான் கேள்விகள் கேட்கிறோமா? நம் கேள்விகளின் முதன்மையான நோக்கம்/இலக்கு என்பது சமூகம் சார்ந்ததா அல்லது சர்ச்சையை வலிந்து உருவாக்கி பரபரப்பை தோற்றுவிக்கும் அவரவர் தொழில் தேவை மற்றும் தொழிற்போட்டியைச் சார்ந்ததா?

2. ஊடகத்துறையில் பணிபுரியும் நாம் எல்லோரையும் ஒரேமாதிரி சமதளத்தில் வைத்து நடத்து கிறோமா? அதாவது எல்லோரை நோக்கியும் ஒரே மாதிரி நினைத்த மாத்திரத்தில் நினைக்கும் எல்லா விதமான நியாயமான கேள்விகளையும் நாம் கேட்கிறோமா? கேள்வி கேட்பது செய்தியாளனின் அடிப்படை கடமை. உண்மை தான். ஆனால் அந்த அடிப்படை கடமையை எந்த அளவுக்கு நேர்மையாக நாம் செய்திருக்கிறோம்? கடமையை நேர்மையாக செய்யாமல் உரிமைக்கு மட்டும் குரல் கொடுப்பது தொழிற்சங்கப் பார்வையில் சரியாகப்படலாம். ஆனால் தொழில் நேர்மை என்னும் அளவுகோலின்கீழ் அது சரியல்ல.

ஆள்பலம், அதிகாரபலம், அடியாள் பலம், சாதி பலம் உள்ளிட்ட பலவற்றுக்கேற்பவே நம் மைக்குகளும் கேள்விகளும் நீளும் என்கிற பொதுவான குற்றச்சாட்டு அல்லது பொதுப்புரிதல் தானே இந்த பிரச்சனையில் செய்தியாளர்களுக்கு எதிரான பரவலான விமர்சனமாக, கண்டனமாக வெடித்திருக்கிறது?

ஊடகத்துறையின் கடந்தகால/நிகழ்கால செயற்பாடுகள் தானே இதற்கு முக்கிய காரணம்? பொது வாகவே அரசியல்வாதிகளுக்கு அடுத்து ஊடகத்துறை தான் இன்று அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இருதரப்பாரின் நடத்தையும் நம்பகத் தன்மையும் பொதுமக்கள் மத்தியில் அந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் தான் இளையராஜா விஷயத்தில் அந்த ஊடகத்துறை நண்பரின் செயலில் பெரிய தவறு இல்லாத நிலையில் கூட இளையராஜாவின் எதிர்வினை அகந்தையானது என்றாலும் இளையராஜாவைவிட செய்தியாளரே பொதுமக்களால் அதிகம் கண்டிக்கப்படுகிறார். அதற்கான முக்கிய காரணியை ஊடகத்துறையினர் உணர்வது அவசியம் என்பதே ஊடகவியலாளனாக என் வேண்டுகோள்.

இளையராஜா என்னும் தமிழ்நாட்டு மேதையின் அகந்தையை இனிமேல் போக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால் தமிழ்நாட்டு ஊடகத்துறையின் ஆரோக்கியம், சுயமரியாதை குறித்து எனக்கு என்றும் கவலை உண்டு. இந்த இரண்டுக்குமான மிகப்பெரும் அச்சுறுத்தல் கண்டிப்பாக இளையராஜா அல்ல என்பதே என் புரிதல்.

LR Jagadheesan