September 20, 2021

இலங்கை -ராஜபக்ஷே தோல்வி : அதிபர் மாளிகையிலிருந்து எஸ்கேப்!

இலங்கையில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அங்கு புதிய அதிபரை தேர்ந்து எடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது.தற்போதைய அதிபர் ராஜபக்சேவின் (வயது 69) பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருந்த போதிலும், அவர் முன்கூட்டியே தேர்தலை நடத்த ஏற்பாடு செய்தார். மேலும் தான் 3-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியல் சட்டத்திலும் அவர் திருத்தம் செய்தார்.அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக 63 வயதான மைத்ரிபால் சிறிசேனா போட்டியிடுகிறார். இவருக்கு முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
rajapakse jan 9
சிறிசேனா, ராஜபக்சே அரசில் சுகாதார துறை மந்திரியாக இருந்தவர். ராஜபக்சேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, மந்திரிசபையை விட்டு வெளியேறினார். முன்னாள் அதிபர் சந்திரிகா, முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.அதிபர் தேர்தலில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், ராஜபக்சேவுக்கும் சிறிசேனாவுக்கும் இடையேதான் போட்டி நிலவியது.

இதையடுத்து அதிபர் தேர்தல் நேற்று ஓரளவு அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது. பெரும்பாலான பகுதிகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. நேற்று மாலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடந்து வருகிறது.தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா முன்னிலை வகித்துள்ளார்; அதிபர் மகிந்த ராஜபக்ச தொல்வி முகம் கண்டுள்ளார். காலை 7.30 மணி நிலவரப்படி, தேச அளவில் சிறிசேனா 14,06,557 (52.49%) வாக்குகளுடன் முன்னிலையிலும், ராஜபக்ச 12,38,340 (46.21%) வாக்குகளுடனும் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

இந்த நிலையில், அதிபர் ராஜபக்ச தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய அதிபரிடம் ஒப்படைப்படைக்கப்படும் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.அதிகாலை பிரதான எதிர்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்கவை சந்தித்த ராஜபக்ச தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினாராம்.இதனிடையே இன்றே புதிய அதிபராக சிறிசேனை பதவியேற்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.