September 20, 2021

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க தீர்மானம்: வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றம்!

அண்டை நாடான இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் நடைபெற்றா மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக் கையை கடந்த மாதம் 16ஆம் தேதி தாக்கல் செய்தது. அதில், போரின்போது, இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் குற்றம் செய்துள்ளன என்பது உள்பட பல்வேறு குற்றச் சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தன.இதையடுத்து, இலங்கை போரின்போது நடந்த குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பை இலங்கை அரசே உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய வரைவு தீர்மானம் ஒன்றை, அமெரிக்கா கொண்டு வந்தது.
srilanka oct 1
இந்த தீர்மானத்திற்கு இலங்கையின் ஆதரவு நாடுகளான பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அந்த வரைவு தீர்மானத்தில் அமெரிக்கா சில திருத்தங்களை செய்துள்ளது.

அதன்படி, சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பு என்பதற்கு பதிலாக காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் அடங்கிய விசாரணை அமைப்பு என்பது போன்ற பல்வேறு திருத் தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து காமன்வெல்த் நீதிபதிகள் அடங்கிய அமைப்பு விசாரணை செய்யும். இந்த தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

இந்நிலையில், இந்த அறிக்கையின் மீதான பொது விவாதம் நேற்று ஐ.நா. மனித உரிமை ஆணை யத்தில் நடந்தது. இதில் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டு இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அமெரிக்காவின் வரைவு தீர்மானம் குறித்தும் பேசினர்.இந்நிலையில், அமெரிக்காவின் வரைவு தீர்மானம் இன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பொது வாக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதில் கலந்து கொண்ட பல்வேறு நாட்டு பிரதிநிதிகளில் யாருமே வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுக்கவில்லை.இதையடுத்து, இலங்கை போரின்போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த வரைவு தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே இவ்விவகாரத்தில் இந்தியா அமைதிகாத்தது என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கருத்து தெரிவிக்க வேண்டிய நேரத்தில் இந்தியா அமைதியாக இருந்தது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நட்பு நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்தது என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்தியா எதிர்ப்பு தெரிவித்து இருந்தால், தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இருக்கும், தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கும் என்றும் பசுமை தாயகம் இயக்கத்தின் தலைவர் பாலு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.