September 20, 2021

இலங்கை அதிபரானார் சிறிசேனா!

இலங்கை அதிபராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்த ராஜபக்சேயின் ஆட்சிக் காலம் முடிவடைய மேலும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதாக அவர் அறிவித்தார். மேலும் தான் மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக அரசியலமைப்பு சட்டத்திலும் திருத்தம் செய்தார். அவருடைய அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேனா ஆட்சி மற்றும் கட்சியில் இருந்து வெளியேறி ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டார். அவருக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன. தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைத்ததால் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார் சிறிசேன. நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் சுமார் 75 சதவீத வாக்குகள் பதிவாயின. அவை உடனடியாக எண்ணப்பட்டு நேற்று காலை முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி மைத்ரிபால சிறிசேனா 62 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
srisena 1
இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனா வெற்றிப் பெற்று, புதிய அதிபராக நேற்று பதவியேற்றார். மைத்ரி பாலா சிறிசேனா, பொலனருவை பகுதியில் 1951, செப்.,3ல் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பொலனருவை ராயல் கல்லூரியில் படித்தார். குண்டசாலையில் உள்ள இலங்கை விவசாயக் கல்லூரியில் டிப்ளமோ பட்டம் பெற்றார். 1980ல் ரஷ்யா சென்று அரசியல் அறிவியலில் டிப்ளமோ படித்தார். கூட்டுறவு சங்கத்திலும், கிராம அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு ஜெயந்தி புஷ்பகுமாரி என்ற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இளம்வயதில் கம்யூனிசத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இலங்கை சுதந்திரக் கட்சியின், இளைஞர் முன்னணியில் 1967ல் இணைந்தார். 1971ல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை சென்றார். சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தேசிய பொதுச் செயலராக 1983ல் நியமிக்கப்பட்டார்.முதன்முதலில் 1989 பார்லிமென்ட் தேர்தலில் பொலனருவை மாவட்டத்தில் போட்டி யிட்டு வென்றார். 1994 முதல் இலங்கை அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் பொதுசெயலராகவும் இருந்துள்ளார். 2014, நவ., 21ல் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியிலிருந்து விலகினார்.எதிர்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் ஏழாவது அதிபரானார்.