September 23, 2021

இலங்கையில் இன்று எம்.பி.க்கள் தேர்தல் – நாளை ரிசல்ட்!

கடந்த ஜனவரி மாதம் 8–ந்தேதி நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் உதவியுடன் சிறிசேனா ஆட்சியை கைப்பற்றினார். எனினும், அவரது தலைமையிலான இலங்கை சுதந்திரா கட்சிக்கு பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பலம் இல்லை. இதனால் அவரால் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிய வில்லை. எனவே, பாராளு மன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை சிறிசேனா நடத்த முடிவு செய்தார். இதை யடுத்து இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஆகஸ்டு 17–ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார். அதன்படி இன்று(திங்கட்கிழமை) இலங்கையில் தேர்தல் நடக்கிறது.
si au17
இலங்கை பாராளுமன்றத்தின் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 225 ஆகும். இதில் 196 பேர் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ள 29 எம்.பி.க்கள் கட்சிகள் பெற்ற வாக்குகள் விகித அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அறுதி பெரும்பான்மைக்கு 113 எம்.பி.க்கள் தேவை.தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவர் அதிபருக்கு அடுத்து அதிகாரம் கொண்ட வராக திகழ்வார்.

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் 60 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் 100 சுயேச்சைகள் உள்பட 6,151 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்தல் பாதுகாப்பு பணியில் 63 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க துணை ராணுவ கமாண்டோ படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த கூட்டணி சார்பில் தான் ராஜபக்சே போட்டியிடுகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் தனது கட்சி கூட்டணி வெற்றி பெற்றாலும் ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவியை அளிக்க மாட்டேன் என்று அதிபர் சிறிசேனா ஏற்கனவே அறிவித்து விட்டார். எனினும், தனது செல்வாக்கை நிரூபிப்பதற்காக தேர்தலில் ராஜபக்சே போட்டியிடுகிறார்.

இன்று நடைபெறும் தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் எண்ணப்பட்டு இரண்டு கட்டங்களாக முடிவுகள் வெளியிடப் படும் என்று இலங்கையின் தலைமை தேர்தல் செயலகம் அறிவித்து இருக்கிறது.அதன்படி மாலையில் வாக்குப் பதிவு முடிந்தபிறகு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று நள்ளிரவு 11 மணிக்குள் தபால் ஓட்டுகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். இதைத் தொடர்ந்து தொகுதி வாரியாக ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த முடிவுகள் நாளை(செவ்வாய்க் கிழமை) அதிகாலை முதல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் செயலகம் தெரிவித்து இருக்கிறது.