இரவு நேர முகாம் அமைக்கும் விவகாரம்: மத்திய அரசுக்கு உத்தரவு!

நடைபாதையில் வசிப்போருக்கு தற்காலிக முகாம்கள் அமைப்பது தொடர்பாக 10 நாட்களுக்குள் அனைத்து மாநில தலைமை செயலாளர்களின் கூட்டத்தைக்கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் மேலும், இந்த பிரச்சினையில் மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான ஒரு அறிக்கையை 3 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
homeless
வீடற்றோர் குளிரால் இறக்க நேரிடுவதால் போதுமான இரவு நேர தங்குமிடங்கள் அமைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி வழக்குரைஞர் இ.ஆர். குமார் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் மதன் பி. லோகுர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கி அமர்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

இதில், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி,”மக்கள்தொகை கணக்கீட்டின்படி, தில்லியில் மட்டும் வீடற்றோர் 39 ஆயிரம் பேர் வசிப்பது தெரியவந்துள்ளது. ஆனால், வீடற்றோருக்காக கட்டப்பட்டுள்ள இரவு நேர தங்குமிடங்களில் 17 ஆயிரம் பேர் மட்டுமே தங்க முடியும் எனத் தில்லி அரசு தெரிவித்துள்ளது. மேலும், தில்லியில் உள்ள இரவு நேர தங்குமிடங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை. எனவே, தில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் போதுமான இரவு நேர தங்குமிடங்களை அமைத்து அவற்றைக் கண்காணிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “தில்லியில் மொத்தம் 231 இரவு நேர தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 84 நிரந்தரமானவை’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில்,””தலைநகரில் வசிக்கும் வீடற்றோர் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், அது தொடர்பான வழக்கை விசாரிக்க முடியாது. அதேசமயம், குளிர்காலத்தில் வீடற்றோர் தவிக்கும் நிலையை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களில், அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்பதை அறியத் தெளிவான விளக்கம் இல்லை.எனவே, வீடற்றோருக்கு குறைந்த பட்சம் தாற்காலிக இரவு நேர தங்குமிடங்கள் அமைப்பது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களை 10 நாள்களுக்குள் அழைத்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசனை நடத்த வேண்டும். வீடற்றோருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், நடவடிக்கைகள் பற்றி அறிந்து அதன் விவரத்தை பிரமாணப் பத்திரமாக 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.