October 19, 2021

இயக்குநர் பாலுமகேந்திரா காலமானார்

இயக்குனர் பாலுமகேந்திரா இன்று அதிகாலை உடல் நலம் பாதிக்கப்பட்டு விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்ட்டது. சில மணி நேரங்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு அளிக்கப் பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காத நிலையில் காலமானார்.இந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்து போன திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு இயக்குனர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் அஞ்சலி செலுத்த விரைந்த வண்ணம் இருக்கிறார்கள்.
Balu mahendra
இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது அண்டை வீட்டுக்காரர் கவிஞர் காசி ஆனந்தன். அழியாத கோலங்கள் திரைப்படத்தில் வரும் மூன்று சிறுவர்களில் ஒருவர் காசி ஆனந்தன் தான் என பாலு மகேந்திரா நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.

அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை ‘செம்மீன்’ படப்புகழ் ராமு காரியத் அவரது ‘நெல்லு’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் ‘சுக்கு’,’ ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி’ ‘சட்டக்காரி’ பி என் மேனோனின் ‘பணிமுடக்கு’ போன்றவை முக்கியமான படங்கள். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர்.

1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான ‘கோகிலா’வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான ‘அழியாத கோலங்கள்’ வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் அவரே.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். “சேது”, “நந்தா”, “பிதாமகன்” போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ராம், வெற்றி மாறன், சீமான் சுகா,சீனு ராமசாமி போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்க்து. சமீபகாலமாக முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தும், அதை பொருட்படுத்தாமல் ’தலைமுறைகள்’ என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கப் போவதாகக் கூறிவந்தார் பாலு மகேந்திரா.இப்பேர்பட்ட சாதனையாளரின் மரணம் கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.இவரின் இறுதி சடங்கு சென்னையில் நாளை நடக்கிறது என்றும் சாலிகிராமம் தசரதபுறத்தில் உள்ள அவரது ஸ்டூடியோவில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்றும் செய்திகள் கிடைத்துள்ளன.. .