September 20, 2021

இம்மாநாட்டை நடத்த காரணமென்ன என கேட்கலாம்? -முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு!

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான தொழில் அதிபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த மாநாட்டை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது, “இந்தியாவில் தமிழ்நாடு மிக முன்னேற்றமான, அனைத்து தொழில் திறனையும் பெற்றுள்ள முதல் மாநிலமாக திகழ்கிறது. தொழிற்துறையில் சிறந்த கட்டமைப்புடன் சிறந்த கல்வி அறிவுள்ள மக்கள் பலரை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆடை உற்பத்தி, தோல் உற்பத்தி, தானியங்கி எந்திர உதிரி பாகங்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த பணிகள், சுகாதாரம் ஆகிய துறைகளின் முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இந்தியாவிலேயே தொழில்திறன் சார்ந்த பொருளாதார பங்கில், தமிழ்நாடு முதலிடம் பெறுகிறது.இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகமாக பெறுகின்ற மூன்றாவது மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தற்போது இம்மாநாட்டை நடத்த காரணமென்ன என கேட்கலாம்? இதற்கு என்னுடைய பதில், மிக எளிதானது. எனது தலைமையிலான அரசின் லட்சியங்கள் தமிழ்நாட்டை மென்மேலும் உயர்த்துவதே ஆகும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023’ என்ற திட்டத்தை வரையறுத்து வழங்கினேன். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தனி நபர் வருமானம், பிறநாடுகளின் உயர் மத்திய வர்க்கத்தினருடைய தனி நபர் வருமானத்திற்கு இணையாக 2023–ம் ஆண்டிற்குள் அமைய வேண்டும் என்பது எனது தலைமையிலான அரசின் லட்சியமாகும்.உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் அமைந்துள்ள சிறந்த கட்டமைப்பு வசதிகளும், சேவைகளும், தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் பெற வேண்டும் என்பது எங்களின் உயர்ந்த நோக்கமாகும். தலைசிறந்த தொழில்நுட்ப, புத்தாக்க முயற்சிகளின் அறிவுசார் நகரமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். ஆசிய நாடுகளிலேயே மூன்றாவது இடத்திலும், இந்தியாவிலேயே முதலிடத்திலும், அதிகமான தொழில் முதலீடுகளைப் பெறுகின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டுமே ஒட்டுமொத்தமாக 25 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது வெறும் பேச்சல்ல.

இதற்காக, தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023–ல் இடம் பெற்றுள்ள 217 திட்டங்களில் 84 திட்டங்கள் செயல்படத்தொடங்கிவிட்டன. தென்மாவட்டங்களில் தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர்கள் விரும்பும் சிறப்பு சலுகைகளை எனது தலைமையிலான அரசு அறிமுகம் செய்து உள்ளது. எனது தலைமையிலான அரசு சிறந்த செயலாக்கமும், அறிவித்த அறிவிப்புகளையும், கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகிற அரசாக திகழ்கிறது.

1991–ல் முதன் முறையாக நான் தமிழ்நாட்டின் முதல்–அமைச்சரானவுடன், இந்திய நாடு தன்னுடைய பல ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த பொருளாதார கோட்பாடுகளை மாற்ற வேண்டிய சூழலில் இருந்தது. அப்போதே, எனது தலைமையிலான அரசு அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறந்த வளர்ச்சிக்கு வித்திட்டு பல முனைகளில், தலை சிறந்த முதலீடுகளைப் பெற்று வளரத்தொடங்கியது. அன்றைய சூழலில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம், சராசரி தேசிய தனிநபர் வருமானத்தை விடக்குறைவாக இருந்தது. ஆனால், இன்றோ, தேசிய சராசரி வருமானத்தைவிட, தமிழ்நாட்டில் ஒன்றரை மடங்கு வருமானம் கூடுதலாக பெருகி உள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாடு, இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக திகழ்கிறது. இந்த வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல. எனது தலைமையிலான அரசின் செயலாக்கம், தொலைநோக்கு திட்டங்கள், சிறந்த அமலாக்க முறைமைகளின் வாயிலாக பெறப்பட்ட பலனாகும். 1992–ம் ஆண்டு, நான் அறிமுகப்படுத்திய, ‘புதிய தொழில் கொள்கை’ மாநிலத்தில் தொழில் துறைக்கு ஓர் உந்துசக்தியாக விளங்கியது. இதன் மூலம்தான் உலக அளவில் பெரிய நிறுவனங்களான, போர்டு, ஹுண்டாய் தமிழ்நாட்டில் தமது முதல் தொழிற்சாலைகளை நிறுவின. அந்த நேரத்தில்தான், தமிழ்நாடு தானியங்கி எந்திரங்கள் உற்பத்தி மையமாக திகழ அடிக்கல் நாட்டப்பட்டது.

பல்வேறு துறைகளில், தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக தக்க வைப்பதும், புதிய தொழில் துறை முதலீடுகளில் திருப்புமுனை ஏற்படுத்துவதும் எங்கள் இலக்காக அமைந்தது. எனவே தானியங்கி மற்றும் தானியங்கி வாகன உதிரிபாகங்கள் மற்றும் உயிர் தொழில்நுட்பத் துறைகளுக்கு 2014–ம் ஆண்டில் தமிழக அரசு மேம்படுத்தப்பட்ட துறை வாரியான கொள்கையினை தொடக்கிவைத்தது. 2012–ம் ஆண்டில், சூரியஒளி மின்னாற்றல் கொள்கையை இந்த அரசு தொடக்கி வைத்ததன் பலனாக இன்று வீடுகள் மேற்கூரை மூலம் சூரிய மின்னாற்றல் உற்பத்தி திறனில், மிகை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாடு மின்துறையில் புரட்சியைக் கண்டுள்ளது. மே 2011–ல் நான் பதவியேற்கும்போது தொடர்மின் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக இருந்தது. மின்வெட்டு முழுவதுமாக களையப்பட்டு இன்று மிகைமின் மாநிலமா தமிழ்நாடு திகழ்கிறது. இனிவரும் காலத்தில் மின்பற்றாக்குறை ஏற்படாது என்பதை உறுதி செய்ய, மரபுசார் மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் திட்டங்களுக்கு சிறப்பான மின்பகிர்மான கட்டமைப்பு அமைக்கப்பட்டு, நீண்டகால மின் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த அரசின் கொள்கைகளால், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் நிம்மதியாக இயங்க முடிகின்றன. தமிழ்நாட்டில் தொழில் உறவுமுறைகள், நாட்டிலேயே சிறந்த கட்டுக்கோப்புடனும், சுமுகமாகவும் உள்ளன.நான் அடிக்கடி சொல்வதுபோல, “எல்லோருக்கும், எல்லாமும்’’ என்பதற்கு ஏற்றார்போல, தமிழ்நாடு தமது உள்ளார்ந்த வளர்ச்சி திட்டத்தை வகுத்துள்ளது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கையிலும் சுமார் 20 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதிலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

2013–14–ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 393 தொழிற்சாலைகளைக் கொண்டு தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்த எண்ணிக்கை 2014–15–ம் ஆண்டில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 104 ஆக மேலும் உயர்ந்தது.தொழிற்துறைக்காக 42 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. தமிழ்நாட்டில், முதலீடு தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்ற ஏதுவாக, தேவையான அனைத்து இறுதி ஒப்புதல்களையும் 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சமீபத்தில் ஆணை பிறப்பித்தேன்.

இதன் மூலம் மிகைப்படுத்தல் இல்லாத திறன் மிக்க சேவை வழங்கும் புது மாநிலமாக தமிழ்நாடு மாறவுள்ளது. மாநிலத்தில் விரும்பத்தக்க முதலீட்டுச் சூழல் அமைந்திருப்பதை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உற்சாகமாக ஒப்புக்கொண்டுள்ளனர். 2011–ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த ஜூன் வரை முன்மொழியப்பட்ட மொத்த கூடுதல் முதலீடு ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 709 கோடி என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் தமிழகம், கடந்த 2011 மே முதல் இன்று வரை, ரூ.43 ஆயிரத்து 101 கோடி மதிப்பிலான 86 முதலீடுகளைப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஒற்றைச் சாளர முறைகளின் மூலம் வழங்கியுள்ளது.

இந்த நேரத்தில்தான், ஆண்டுக்கு 18 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் திறன் வாய்ந்த இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தை காஞ்சீபுரம் மாவட்டத்திலும், ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீட்டில் அதன் 9 விற்பனை நிலையங்களையும்; ரூ.168 கோடி முதலீட்டில் டி.ஐ.சி.இ.எல்.–2 உயிரி தொழில்நுட்பப் பூங்காவை தரமணியிலும், ரூ.800 கோடி முதலீட்டில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஒரு விரிவாக்க மையத்தை ஓசூரிலுமாக, மொத்தம் ரூ.2 ஆயிரத்து 568 கோடி மதிப்பிலான மூன்று பெரிய தொழில் திட்டங்களைத் தொடங்கியுள்ளேன்.முதலீட்டு சாதக சூழலை உருவாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். அதன்மூலம் வெளிநாட்டு நிதியை நேரடியாக பெறும் சூழல் வளர்த்து வரும். அதன் அடிப்படையில் பல முதலீட்டாளர்களுக்கு இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் முதலீடு செய்ய ஆர்வமும் பெருகி வருகிறது.


இந்த மாநாட்டிற்கு வந்துள்ள முதலீட்டாளர்கள் மூலம் தமிழக அரசுக்கு வருகின்ற அனைத்து முதலீடுகளுக்கும், மத்திய அரசு அளவில் மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உடனடி தீர்வு மற்றும் ஒப்புதலும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதுபோல எனது தலைமையிலான அரசின் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023–ன் கீழ் உள்ள பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு உரிய ஒத்தழைப்பினை நல்க வேண்டும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கேட்டுக்கொள்கிறேன்.

உலகளாவிய முதலீட்டாளர் மாநாட்டினுடைய ஒட்டுமொத்த முதலீடாக எனது தலைமையிலான அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் பெறுவதற்கு திட்டமிட்டது. ஆனால், இன்று அந்த இலக்கு தொகையினை விஞ்சி விட்டோம். எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இன்றும், நாளையும் இந்த மாநாட்டின் மூலமாக இன்னும் முதலீடுகள் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாளை மீண்டும் இந்த மாநாட்டின் மூலமாக பெருவாரியான முதலீட்டு தொகை பற்றி மாபெரும் வெற்றி செய்தியாக அறிவிக்க உள்ளேன்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்தால், அது உங்களுக்கு சிறந்த முதலீடாக அமையும். சிறந்து உழைக்கும் திறனுள்ள மக்கள் வளம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் இந்த மனிதவள பலம்தான் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியுடைய ஒட்டுமொத்த திறவுகோல் ஆகும். தமிழ்நாட்டில் அதாவது, எங்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்யுங்கள் என்று உங்களை அழைக்கிறேன்”என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்