September 29, 2021

இம்மாத கடைசியில் மெட்ரோ ரயில்! – ஜெ. முதல்வராகி தொடங்கி வைக்கிறார்?

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்காக ஜப்பானைச் சேர்ந்த நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, அது தொடர்பான திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இரு வழிப்பாதைகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையும், சென்ட்ரலில் இருந்து புனித தோமையார்மலை வரையும் 45 கி.மீ. தூரத்துக்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பாதையில் 24 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையில் ரயில் பாதை அமைகிறது. இப்பணிகள் அனைத்தும் 2016ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
chennai metro jaya
இந்நிலையில், முதல்கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலத்தில் ரயில் இயக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் ரயில் பாதை, ரயில் நிலையங்கள், சிக்னல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முடிந்ததையடுத்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் இரண்டு கட்டங்களாக வந்து ஆய்வு செய்தார். இதுவரை, கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை ஆய்வு பணிகள் முடிந்துள்ளது. அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல் மற்றும் ஆலந்தூர் இடையே இந்த மாத இறுதியில் ஆய்வு பணிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 7.22 கி.மீ தொலைவுள்ள மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கு ஏதுவாக, மெட்ரோ ரயில் பொது விதிகள் 2013-இல் திருத்தம் செய்து அதில் சென்னை மெட்ரோ ரயில் சேவையின் முதலாம் கட்டத்தை செயல்படுத்தும் விவரத்தை மத்திய அரசு சேர்த்துள்ளது.

இதன் மூலம் சென்னையில் முதல் முறையாக அறிமுகமாகவுள்ள மெட்ரோ ரயில் சேவை
கோயம்பேடு – ஆலந்தூர் இடையிலானது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஆலந்தூர் முதல் அசோக் நகர் வரையிலான 2.88 கி.மீ. தொலைவுள்ள ரயில் சேவையையும், தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ் குமார் மித்தல் அனுமதிக்கு உள்பட்டு செயல்படுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மேற்கண்ட 10 தொலைவு கொண்ட ரயில் சேவை பாதைகள், ரயில் நிலையங்கள், அவற்றின் கட்டமைப்பு, பயணிகளுக்கான வசதிகள் போன்றவற்றை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ் குமார் மித்தல் கடந்த ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தார். இந்நிலையில், அவரது ஆய்வறிக்கையைப் பரிசீலித்த ரயில்வே துறையின் நிர்வாகக் குழு தெரிவித்த ஒப்புதலின்படி, சென்னையில் மெட்ரோ சேவையைத் தொடங்க மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரைவில் பதவியேற்கவுள்ளார். அநேகமாக அவர் பதவிக்கு வந்தவுடன் தொடங்கவுள்ள பல்வேறு திட்டங்களில் சென்னை மெட்ரோ ரயில் சேவை முதன்மை பெறும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.