June 14, 2021

கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் அடைக்கலமாகி போன இன்றைய தேர்தல் களம்!

இது ஒரு சின்ன பிளாஷ் பேக் :முக்கியமான எதிர்க்கட்சி அடித்து நொறுக்கி பிரசாரம் செய்து கொண்டிருந்தது. நாடகம், திரைப்படம், பத்திரிகைகள் என கிடைத்த ஊடக வாய்ப்புகளை எல்லாம் அவர்கள் பயன்படுத்தினார்கள். அரசாங்கமோ அதனுடைய வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தது. சாதனைகள் நிறைய இருந்தாலும் அதனை சத்தம் போட்டுச் சொல்வது இல்லை. இதனை கண்டு பொறுக்க முடியாத ஆளுங்கட்சி ஆதரவு திரைத்துறை பிரமுகர் ஒருவர், முதல்வர் காமராஜரை அணுகினார். அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்குவதற்கு நாமும் விளம்பரப் படம் தயாரித்து வெளியிடலாம் என்றார். கூடவே அதற்குச் செலவாகும் தொகையையும் தெரிவித்தார். காமராஜர் அவரை முறைத்தார். “அதெல்லாம் எதுக்குன்னேன் – அந்தப் பணத்தில் நான் இன்னும் சில பள்ளிக்கூடங்களைத் திறப்பேன்னேன். மக்களுக்குச் செய்யிறது அவங்களுக்குத் தெரியாதான்னேன்’ -என்று அடித்த வாய் துடைத்தது போல சொல்லிவிட்டார். இந்த சம்பவத்தை அப்படியே மனதிற்குள் படமாக ஓடவிடுங்கள். இதெல்லாம் இப்போது நம்ப முடியாத கதை போலத்தானே இருக்கிறது! உடல் ஒரு கணம் சிலிர்க்கிறதல்லவா!
edit feb 11


அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த இத்தகைய அரசியல், இன்றைக்கு எப்படி எல்லாம் மாறிப் போய் விட்டது? நிறைய பணம் தேவைப்படும் துறையாக, பணமின்றி எதுவும் செய்ய முடியாத நிலைக்கு வந்துநிற்கிறது. அப்போதெல்லாம் கட்சிக் கொடி கட்டுவதில் இருந்து, தேர்தலில் நிற்பது வரை கடை மட்ட தொண்டனின் பங்களிப்பு நிறைந்திருந்தது. கட்சிகளின் வண்ணங் களை, எண்ணங்களை மட்டுமே உடல் முழுக்க நிரப்பி, உளப்பூர்வமாக, உணர்ச்சிப் பூர்வமாக அரசியல் செய்தார்கள். அந்தத் தலை முறையினர் அருகிவிட்டனர்.

சிங்கிள் டீ குடித்துவிட்டு உற்சாகமாக தொண்டனே ஏறி நின்று கட்டிய கொடிகளை, இப்போது சில நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் கட்டுகின்றன. அவர்களுக்கு கொடிகளைப் பற்றியோ, கட்சி களைப் பற்றியோ கவலை ஏதுமில்லை. இதுவும் ஒரு வேலை அவ்வளவுதான்! சொந்தக் கட்சியின் கூட்டத்திற்கும் முறையாக கவனித்தால் தான் தொண்டர்கள் வருகிறார்கள்.கட்சித் தொண்டர் களை விடுங்கள். மக்களும் கூட நிறைய மாறிவிட்டார்கள். தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் வாக்களித் தவர்களைப் பார்த்து பயந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது, “வாங்கிக் கொண்டுதானே போட்டே.. சும்மா ஒண்ணும் செய்யலயே..’ என்ற கேள்விக்கு முகத்தை எங்கே வைத்துக் கொள்வது என்று தெரியாத அளவுக்கு வாக்காளர்களும் இருக்கிறார்கள்.

ஜனநாயகத்தின் எல்லா முனைகளிலும் நிகழ்ந்துள்ள இது போன்ற மாற்றங்கள், தேர்தல்களின் பாதை யையும் மாற்றியிருக்கிறது. கட்சிக் கொடி, கரை வேட்டி விற்பனை என்பனவற்றைத் தாண்டி தலைவர் களையே ஆட்டிப்படைக்கும் அளவுக்குத் தேர்தல் களம், வணிகக்கூட்டாண்மை (“கார்ப்பரேட்’) நிறுவனங்களின் கைகளில் அடைக்கலமாகி உள்ளது. இதற்கென நாடு முழுதும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் முளைத்திருக்கின்றன. இதனால், கட்சிகளில் தேர்தல் பணிக்கு என்றிருந்த பிரிவுகள் செல்லாக் காசுகளாகி விட்டன. இரண்டாம் மட்ட தலைவர்களிடம் ஆலோசிப்பது, கடை நிலை தொண்டர்களிடம் கலந்து பழகுதல், அவர்களின் மன ஓட்டத்தை அறிதல் என்பனவெல்லாம் தேவை இல்லாததாயின. குளு, குளு அறைகளில் உட்கார்ந்து கொண்டு அந்த நிறுவனங்களின் வல்லுநர்கள் வடித்துத் தரும் திட்டங்களை மட்டும் செயல்படுத்தினால் போதும். அச்சு அசலாக வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களின் செயல்திட்டமாகவே அவை இருக்கின்றன. அதைப் பற்றி கேள்வியோ, விவாதங்களோ தேவையில்லை என்ற நிலை கட்சிகளிடம் உருவாகியிருக்கிறது.

இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்கள் பெரும் பிரசாரக் களமாகியுள்ளன. முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் போன்ற வற்றைக் கொண்டே “மக்களின் மனதில் இடம் பிடித்துவிடலாம், எதிரி களின் செல்வாக்கை அழித்திடலாம்’ என்ற போக்கு வலுப்பெற்றுள்ளது. இதற்காக, தனி பணியாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நியமிக்கப்படுகின்றனர். வெளி நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நவீன யுக அரசியல், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது முழுவீச்சில் இந்தியாவுக்குள் புகுந்தது. இவற்றைச் சரியாக பயன்படுத்திய மோடிக்கு கிடைத்த வெற்றி அத்தனை அரசியல்வாதி களையும் ஈர்த்தது. எல்லாரும் அந்த வழியைப் பின்பற்ற விரும்பினார்கள். அதுவரை இலைமறை காயாக செயல்பட்டு வந்த இதுபோன்ற நிறுவனங்கள் சமீபத்திய பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமாக வெளிச்சத்திற்கு வந்தன.

முன்பு மோடிக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கிய பிரசாந்த் கிஷோர் என்பவரது நிறுவனத்தை நிதீஷ்குமார் வளைத்துப் போட்டார். அவர்கள் சொல்படிதான் லாலு பிரசாத்துடன் கூட்டணி வைத்தார். சரிபாதியாக இடங்களைப் பகிர்ந்து கொண்டார்.கூட்டங்களை நடத்துவதில் தொடங்கி, மக்களைப் பார்த்து கும்பிடு போடுவது வரை அவர்களே தீர்மானித்தார்கள். நிதீஷ் குமார் வென்று மீண்டும் முதல் வரானார். ஆனாலும், எந்த லாலு பிரசாத் உடன் நிதீஷ் மேடையைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று கிஷோர் சொன்னாரோ, அவரது கட்சியே நிதீஷ் குமார் கட்சியைவிட அதிக இடங்களில் வென்றது. வணிகக்கூட்டாண்மை (கார்ப்பரேட்) பிரசாரத்தை விடவும் சக்தி வாய்ந்தது மக்கள் சக்திதான் என்பதற்கு இதுவே உதாரணம்.

எப்படியோ, நிதீஷ் குமார் முதல்வரானதால் பிரசாந்த் கிஷோரின் மரியாதையும் தேவையும் ஏகத்திற் கும் எகிறியது. கோடிகளைக் கொட்டி அவரது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டால், ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எல்லா மாநிலக் கட்சிகளும் நினைக்கத் தொடங்கியிருக்கின்றன. இதன் உச்ச மாக கிஷோரைத் தன் பிடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக கேபினட் தகுதியுடன் கூடிய ஆலோசகராக அவரை நியமித்திருக்கிறார் நிதீஷ்குமார். அதாவது, பிகார் அரசில் சூப்பர் அமைச்சராக கிஷோர் செயல்படுவார். தலைவர்களுக்கு எல்லா காலங்களிலும் ஆலோசகர்கள் இருந்திருக்கிறார்கள். அரசல் புரசலாக அவர்களின் பெயர் அடிபடும். தங்களை அவர்கள் வெளிக்காட்டிக் கொண்டதில்லை.

அதற்கு முக்கியக் காரணம் ஆலோசனை சொல்பவர்களைவிட, தலைவர்களின் ஆளுமைத்திறன் சக்தி மிக்கதாக இருந்தது. மக்களிடம் நேரடி தொடர்பு கொண்டவர்களாகவும் திகழ்ந்தனர். இப்போது மக்களை மட்டுமல்ல, தங்களைத் தாங்களே நம்பாத நிலையில்தான் பல தலைவர்கள் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அயல்நாட்டு நிறுவனத்தின் உத்திகள், அசாத்திய திறமை கொண்ட ஆலோசகர் கள் போன்றவற்றுக்கு அப்பால் ஆற்றலும், தலைவர்களைக் கணிக்கும் திறனும் பெற்றவர்கள் வாக் களிக்கும் மக்கள். அவர்களை அத்தனை எளிதாக யாரும் ஏமாற்றிவிட முடியாது.

ஒட்டுமொத்த இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், சில நேரங்களில் மக்கள் உணர்ச்சிவயப் பட்ட வர்களாக வாக்களித்திருக் கிறார்களே தவிர, ஒருபோதும் அவர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.கட்சிகளாலும் வணிகக்கூட்டாண்மை நிறுவனங்களாலும் கணித்திட முடியாத புத்திசாலித் தனம் நிறைந்தவர்கள் மக்கள்தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது. அதிலும் அறிவுமிக்க இளைஞர் சமுதாயம், ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தளவில் தற்போதைய வாக்காளர் பட்டியலின்படி 23 சதவீதம் பேர் இளைஞர் கள். அதாவது 18 வயதிலிருந்து 23 வயது வரை உள்ளவர்கள். அண்மைக்காலத்து சாயம் வெளுத்த அரசியலை வெறுக்கும் இவர்களிடம், முழுக்க, முழுக்க மக்களின் நலம் நாடும் அரசியலைப் பற்றிய ஏக்கம் இருக்கிறது.ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டுமென அதிகம் சிந்திக்கிறார்கள், பேசுகிறார் கள். காசுக்கு ஓட்டு என களங்கப்பட்ட கடந்த தலைமுறை தேர்தல் அரசியலை ஏற்க இவர்கள் விரும்ப வில்லை. ஜனநாயகத்தைக் காவு கேட்கும் பண நாயகத்திற்கு முற்றிலும் மாறுபட்டவர்களாக இளைய தலைமுறையினர் இருக்கிறார்கள்.

எனவே, மக்களுக்காக உண்மையிலேயே ஏதாவது செய்ய நினைப்பது மட்டுமே எல்லா சந்தைப் படுத்தும் (மார்க்கெட்டிங்) மாயாஜாலங்களையும்விட, அவர்களின் மனங்களை வெல்வதற்கு உதவும் என்பதை மறந்திடக்கூடாது. எனவே, எந்தக் கட்சியாக, தலைவராக இருந்தாலும் அதனை நோக்கிய பாதையில் பயணித்தால் மட்டுமே வருகின்ற தேர்தலில் வாகை சூட முடியும்.எத்தனை, எத்தனை விஞ்ஞான உத்திகளைப் பயன்படுத்தி கவர்ந்திழுக்க நினைத்தாலும் ஓட்டு போடப் போவது கணினி இல்லை என்பது தானே ஜனநாயகத்தின் வலிமை?

கோமல் அன்பரசன்