இன்று முதல் 6 நாட்களுக்கு படப்பிடிப்பு ரத்து:சினிமா நூற்றாண்டு விழாவுக்கு ஜெயலலிதா ரூ.10 கோடி!
இந்திய சினிமா நூற்றாண்டு விழா வரும் 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சென்னையில் கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, இன்று (வியாழன்) முதல், 6 நாட்களுக்கு சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறன்றன.
அத்துடன் வெளிப்புற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதால், நடிகர்–நடிகைகள் சென்னை திரும்புகிறார்கள்.இதற்கிடையில் முதல்வர் ஜெயலலிதா விழா ஏற்பாடுக்காக தமிழக அரசின் பங்களிப்பாக 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இந்த ஆண்டு (2013), இந்திய சினிமா நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது.சென்னையில், தமிழக அரசின் உதவியுடன் இந்த விழாவை 4 நாட்கள் பிரமாண்டமாக நடத்துவதற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஏற்பாடு செய்து வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமை (21–ந்தேதி) மாலை 5.30 மணிக்கு விழா தொடங்குகிறது.அதைத் தொடர்ந்து 22–ந்தேதி கன்னட சினிமா உலகினர் பங்குபெறும் நிகழ்ச்சியும், அன்று மாலை தெலுங்கு சினிமா உலகினர் பங்கேற்கும் நிகழ்ச்சியும், 23–ந்தேதி காலை மலையாள சினிமா உலகினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அகில இந்திய அளவிலான திரையுலகினர் பங்குபெறும் உச்ச கட்ட நிறைவு நாள் நிகழ்ச்சி, 24–ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில முதல்–மந்திரிகளும், நடிகர்–நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள்.இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்–நடிகைகள் திரளாக பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா நூற்றாண்டு விழா பற்றி பொது மக்கள் அறிந்து கொள்வதற்காக, சினிமா தியேட்டர்கள் தவிர மக்கள் கூடும் பொது இடங்களிலும் சினிமா காட்சிகளை திரையிட தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை ஏற்பாடு செய்துள்ளது.சிவன் பூங்கா (கே.கே.நகர்), நடேசன் பூங்கா (தியாகராயநகர்), நாகேஸ்வரராவ் பூங்கா (மைலாப்பூர்) உள்பட சென்னையின் முக்கிய பூங்காக்களில் சினிமா காட்சிகள் திரையிடப்படும். சினிமா தவிர ‘மேஜிக்’ போன்ற மற்ற பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கோடங்கி