September 21, 2021

இன்று முதல் பி.எஸ்.என்.எல் இலவச ரோமிங் + நாடு முழுவதும் ஒரே கட்டணம்!

பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கான நாடு முழுவதும் இலவச ரோமிங் சலுகை இன்று முதல் அமலுக்கு வருகிறது. புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஒரே போன்று கட்டணம் வசூலிக்க வேண்டும்.
free roaming
ஆனால், தனியார் நிறுவனங்களின் எதிர்ப்பு காரணமாக இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்திற்குச் செல்லும் செல்போன் வாடிக்கையாளர்கள் பல மடங்கு கட்டணம் செலுத்தும் அவல நிலை தொடர்ந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘பி.எஸ்.என்.எல் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 15ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது,’’ என்றார். அதன்படி இன்று முதல் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப்பகுதியில் இருந்து அவுட்கோயிங் செய்தாலும் ஒரே கட்டணம்தான். இன்கமிங் கால்களுக்கு கட்டணம் கிடையாது. இந்த சலுகைக்கு தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் பி.எஸ்.என்.எல் தகவல் அனுப்பி வருகிறது. இந்த இலவச ரோமிங் சலுகை ஓராண்டு வரை இருக்கும்.