September 29, 2021

இன்று எம்.ஜி. ஆர் பிறந்த நாள்!

எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி ஏதாவது அறிய விஷயம் கிடைக்குமா என்று கடந்த சில மாதங்களாக பழைய புத்தகம் கிடைக்குமா என்று தேடினேன்! கடைசியாக `பொம்மை’ சினிமா பத்திரிகையின் 1968 இதழ் கிடைத்தது!
அதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம்.அந்த பொம்மையின் அட்டையில் எம்.ஜி.ஆர் ஜெ அட்டை என்பது என் யூகம்! எனக்கு கிடைத்த பிரதியில் அட்டை இல்லை!அந்த இதழுக்காக ஜெயலலிதா எம்.ஜீ. ஆரை பேட்டி கண்டார்
jaya mgr jan 17
இது வருடம் 1968! எம்.ஜி.ஆர் திமுகவில் இருக்கிறார் ! கடவுள் மறுப்பில் தீவரமாக இருந்த கட்சியில் என்பதை நினைவில் வைத்து இந்தப் பேட்டியை படிக்கவும்!

ஜெயலலிதா: நடிப்புத்துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன?

எம்.ஜி.ஆர்” வறுமை!

ஜெ: உங்கள் பெற்றோர்கள் நீங்கள் நடிப்புத்துறையில் ஈடுபடுவதைப் பற்றி என்ன சொன்னார்கள்!

எம்.ஜி.ஆர்:`பசி வந்திட பத்தும் பறந்து போகும்’ என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நடிப்புத் தொழிலில் ஈடுபடும்போது எப்படி தடை செய்வார்கள்?

ஜெ; நீங்கள் முதன் முதலாக போட்ட வேடமென்ன?

எம்.ஜி.ஆர்:லவ குசா நாடகத்தில் குசன் வேடம் போட்டேன் அப்போது எனக்கு வயது 6

ஜெ:உங்களுக்கு நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசான் யார் ?

எம்.ஜி.ஆர் :குசன் வேடத்தில் நடிக்கும் போது நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியின் ஆசிரியர் எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தார்! அவரது பெயர் என் நினைவில் இல்லை!மதுரை ஒரிஜின பாய்ஸ் கம்பெனி நாடகக் கம்பெனியில் நான் சேர்ந்தபோது எனக்கு முதன் முதலாக நடிப்பு சொல்லிக் கொடுத்த ஆசான் காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் காளி. என்.ரத்தினம். அவர் காலஞ்சென்ற பின்னர் எம். கந்தசாமி முதலியார் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார்!

ஜெ: நீங்கள் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம். அதில் நீங்கள் எந்த நடிகர் வேஷம் இவற்றைச் சொல்ல முடியுமா /

எம்.ஜி.ஆர்:மனோகரா நாடகம் அதில் மனோகரன் வேடம்!

ஜெ;பெண் வேடம் போட்டு நாடகங்களில் நடித்திருக்கிறீர்களா ?

எம்.ஜி.ஆர்: நடித்ததுண்டு

ஜெ: அந்த நாளில் நடிகர்கள் சொந்தக் குரலில் தான் பாடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்கள் எப்போதாவது சொந்தக் குரலில் பாடியுதுண்டா ?

எம்.ஜி.ஆர் பாடாவிட்டால் எப்படி கதாநாயகன் வேடம் தருவார்கள்

ஜெ:உங்கள் முதல் படத்திற்கு கதை எழுதிய எஸ்.எஸ். வாசன் உங்கள் 100வது படத்தின் தயாரிப்பாளரானது ?

எம்.ஜி.ஆர் அதுதான் இயற்கையின் விளையாட்டு!

ஜெ: நாடோடி மன்னன் உங்கள் சொந்தப் படம் ? இந்த எண்ணம் எப்படி வந்தது ?\

எம்.ஜி.ஆர்: நான் விரும்பிவதை என் தொழிலில் செய்து காட்ட வேண்டும் என்பது என் நீங்காத ஆசை. அதற்கு பிறர் பணத்தில் சோதனை செய்ய விரும்பாமல் நானே சொந்தமாக படமெடுத்தேன்

ஜெ: சினிமா மந்திரியாக நீங்கள் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்வீர்கள் ?

எம்.ஜி.ஆர் : நாடோடி மன்னனை பாருங்கள். அதில் என் எண்ணங்களை கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்

ஜெ: நீங்கள் ஆங்கிலப் படங்கள் பார்ப்பதுண்டா ?

எம்.ஜி.ஆர் :உண்டு

ஜெ: இந்திப் படங்களைப் பார்ப்பதுண்டா ?

எம்.ஜி.ஆர் : சில படங்களைப் பார்த்திருக்கிறேன்

ஜெ : நீங்கள் எந்தக் கட்சியில் முதலில் இருந்தீர்கள்?

எம்.ஜி.ஆர்  :காங்கிரஸில் காந்தீய வழியில் சமதர்மத்தை விரும்பும் ஒருவனாக இருந்தேன்

ஜெ: திமுகவில் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள் ?

எம்.ஜி.ஆர் : 1952ம் வருடம் திமுகவில் சேர்ந்தேன்

ஜெ : திமுகவில் ஏன் சேர்ந்தீர்கள்?

எம்.ஜி.ஆர் : எனது காந்தீய வழிக் கொள்கைகள் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட திமுகவில் இருப்பதை உணர்ந்து சேர்ந்தேன்

ஜெ:உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா ?

எம்.ஜி.ஆர் : நிச்சயம் உண்டு ( அப்போது திமுகவில் எம்.ஜி.ஆர் இருந்தார் என்பதை நினைவில் கொள்க)

ஜெ. நீங்கள் கோவிலுக்குப் போனதுண்டா ?

எம்.ஜி.ஆர்  : நிறைய இரண்டு முறை திருப்பதிக்குப் போயிருக்கிறேன்.முதல் தடவை எனது 12 வது வயதில்! `மர்மயோகி’ படம் வந்தபோது 2 வது முறை போனேன்

ஜெ:ஏதேனும் பிரார்த்தனை செய்து அதை நிறைவேற்ற போனீர்களா?

எம்.ஜி.ஆர்  : பார்க்க வேண்டும் என்கிற ஆவல்!

ஜெ: உங்கள் தாயார் எந்தத் தெய்வத்தை வழி பட்டார்கள் ?

எம்.ஜி.ஆர் : விஷ்ணு திருப்பதி வெங்கடாசலபதி

ஜெ; வீட்டை விட்டு கிளம்பு முன் எந்த கடவுளை வணங்குவீர்கள் ?

எம்.ஜி.ஆர்  : தாயை

ஜெ; பழைய உங்களது படம் ஒன்றைப் பார்த்தேன் ?அதில் ருத்திராட்ச மாலையுடன் இருந்தீர்கள் ஏதேனும் ஜெபம் செய்தீர்களா ?

எம்.ஜி.ஆர் :ஒரு சின்னத் திருத்தம் அது ருத்திராட்ச மாலை அல்ல!தாமரை மணி மாலை!

ஜெ: பலருக்கு ஆயிரக் கணக்கில் உதவி செய்கிறீர்கள். யாரிடமாவது உதவியைப் பெற்றிருக்கிறீரளா?

எம்.ஜி.ஆர்  : பிறர் உதவியால் வளர்ந்தவன் நான்

ஜெ: அப்படி உதவிப் பெற்றவர்களில் நீங்கள் மறக்க முடியாத மனிதர் யார் ?

எம்.ஜி.ஆர்  :கலைவாணர் என்.எஸ்.கே

ஜெ: ஒரு மனிதன் தன் நண்பனுக்காக செய்யக்கூடிய தியாகம் என்ன ?

எம்.ஜி.ஆர்  :தான் நல்லவனாக வாழ்வது

ஜெ: உங்கள் தொழிலில் உங்கள் பெரிய எதிரி?

எம்.ஜி.ஆர்  : என்னை அழிக்க விரும்பியவர்களின் நட்பு

ஜெ: காஞ்சி மகாப் பெரியவர்களை சந்தித்தண்டா ?

எம்.ஜி.ஆர்  :என்னை விட எல்லா விஷயனங்களிலும் மேன்மை கொண்டவர்களை சந்திப்பதில் என்ன் தவறு! சந்தித்திருக்கிறேன்.

தகவல் உதவி: சுதாங்கன்