October 19, 2021

இன்று உலக புலம்பெயர்ந்தோர் தினம்! –

முதன் முதலாக யூதர்கள் ஜெருசலேத்திலிருந்து விரட்டப்பட்ட நிகழ்வே உலகின் முதல் புலம் பெயர்தல் நிகழ்வு என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இன்று உலக மயமாக்கலுக்கு பிறகு இந்நிகழ்வு அனைத்து நாடுகளின் பொருளாதாரம், கல்வி மற்றும் வெளிநாட்டு கொள்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் சமூகநிகழ்வாக மாறியுள்ளது. புலம் பெயர்ந்தோரின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிச., 18ம் தேதியை உலக புலம் பெயர்ந்தோர் தினமாக கொண்டாட 2000 டிச.,4ல் ஐ.நா.சபை முடிவு செய்தது.
International-Migrants-Day
கற்கால மனிதன் உணவிற்காக இடம் பெயர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. பின் ஆற்றுச்சமவெளி நாகரிகம் வளர துவங்கிய காலங்களில் மனிதன் ஆறுகளின் நீர் வளத்தை பயன்படுத்தி வேண்டிய உணவை தேடி அலையாமல் தானே பயிரிட்டு உற்பத்தி செய்ய கற்றான். அதற்கு பின் நாடோடியாக இருந்த அவனது வாழ்க்கை ஒரே இடத்தில் தங்கி குடும்பமாக… கூட்டுக் குடும்பமாக… பிறகு கட்டுப்பாடுகளுடைய சமூக கூட்டமாக மாறியது. அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய புதிய கண்டுபிடிப்புகளுடன் நாகரிகமும் விஞ்ஞானமும் கைகோர்த்து மனிதன் வாழ்வை வளமாக்கின. நாளுக்கு நாள் அவனது தேவையும் தேடலும் அதிகமாகின. உணவு, உடை மற்றும் இருப்பிடம் என்ற அடிப்படை தேவைகளை தாண்டி மனித சக்தி சிந்திக்க துவங்கியது. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற ஒளவை பாட்டியின் முதுமொழி மனிதனின் தேடலுக்கு புதிய அர்த்தத்தை உருவாக்கியது. அதுவரை காட்டுக்குள் வாழ்ந்த மனிதனின் தேடல், கடலை தாண்ட துவங்கியது. உள்நாட்டில் கிடைக்காத பல விஷயங்கள் வெளிநாடுகளில் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டம், உள்நாட்டு போர், இனவெறி போராட்டங்கள், சமுதாய வேறுபாடுகள் மற்றும் சமூக அநீதி போன்ற பல காரணங்களுக்காக மனிதன் சொந்த நாட்டை விட்டு வௌ?நாடுகளுக்கு புலம் பெயர்ந்தான். பணத்திற்காக, பதவிக்காக, புதிய வாழ்க்கை முறைக்காக புதிய சமுதாய அங்கீகாரத்திற்காக இந்தியர்களும் புலம் பெயர்ந்தனர். 19ம் நூற்றாண்டு துவக்கத்தில் துவங்கிய இந்த இந்திய புலம் பெயர்தல் நிகழ்வு இன்று மிகப்பெரிய சமுதாய நிகழ்வாக நடக்கிறது. துவக்கத்தில் கொத்தடிமைகளாக, ஊழியர்களாக புலம் பெயர்ந்த இந்தியர்கள் இன்று வல்லுநர்களாக வெளிநாடுகளில் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர்.