October 16, 2021

இன்றும் மழை பெய்யும்!- வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
weather oct 19
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக முடிந்து, நேற்று முன்தினம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன்.”கிழக்கில் ஈரப்பதம் நிரம்பிய காற்று தென் இந்தியா பகுதியில் நிலவி பரவலாக மழை பெய்துள்ள நிலையில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக நீங்கி, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ந் தேதி தொடங்கும். ஆனால் சில ஆண்டுகளில் அக்டோபர் 20-ந் தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ தொடங்கும். அதுவும் இயல்பு நிலைதான். ஆனால் இந்த ஆண்டு 3 நாட்களுக்கு முன்பே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று (அதாவது வெள்ளி) தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே நிலையில் தான் நீடிக்கிறது.இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்