December 8, 2022

இன்பத்தில் துன்பம்… துன்பத்தில் இன்பம்… இறைவன் வகுத்த நியதி!

பிரபலமா இருக்கவங்க, நமக்கு தெரிஞ்சவங்க திடீர்னு இல்லாம போறத பாத்தா பக்னுதான் இருக்கு. அதும் தொடர்ச்சியா அப்டி நடந்தா மனசு விட்டு போயிருது. ஆனா, இதான இயற்கை. நிலையாமை-னு பெரியவங்க சொல்லுவாங்க. பூமில எதுவுமே நிரந்தரம் இல்ல. அதுல நம்பர் 1 உயிர்.

நேற்று இருந்தவன் இன்னக்கி இல்லை-ங்றது பூமியோட பெருமைனு வள்ளுவர் சொன்னார். நேத்து உடலா இருந்த அம்மா இப்ப சாம்பலா இருக்கா..னு பட்டினத்தார் பாடினார். கண்ணதாசன தொட்டா முடிக்க முடியாது. விரல் வலிக்கும். இதெல்லாம் ஒரு ஆறுதல். இது இப்டிதான் என்ற தெளிவு உண்டாகி தேறுதல். குரங்கா அலைபாயிற மனச வேற எப்டி அடக்றது.

கொரோனா கொண்டாட்டம் ஓவரா போய்ட்டு இருக்கு. ஆனா எதிர்பாக்காத மேட்டர் இல்ல. வைரச ஜெயிச்சிட்டோம்னு பட்டாசு வெடிச்சப்பவே நிபுணர்கள் வான் பண்ணாங்க. எல்லாம் தெரியும் எமக்கு!னு நம்புற தலைமை நமக்கு. சுத்தி இருக்ற யாருக்கும் எடுத்து சொல்ல தில் இல்ல. தில் உள்ளவங்கள ஏற்கனவே எட்டடி தள்ளி நிறுத்தியாச்சு. தூரத்துல குரல் வந்தாக்கூட கோணி ஊசிய வச்சு.. சரி விடுங்க.

இன்னார் இடத்ல அன்னார் இருந்தா இப்டிலாம் நடக்குமா?னு சூடாறது வேஸ்டுங்க. மனுசன மாதிரி நாடுகளுக்கும் ஹெட் ரைட்டிங் இருக்கு. அன்னாருக்கு பதில் இன்னார் வந்ததே அந்த டிசைன்தான். எழுதினத அனுபவிச்சே தீரணும். நோ எஸ்கேப். மாத்தி காட்டுவோம்னு கம்பு சுத்தினா கை வலிதான் போனஸ்.

கொரோனாவ சாக்கா வச்சு கோல்மால் பண்றவங்க நியூசும் நிறைய வருது. மனுசனும் அயோக்கியத்தனமும் ரர அல்லது உபி-னு சொல்லலாம். நோ பாலிடிக்ஸ். எல்லா காலத்லயும் இப்டியான கூட்டம் இருந்திருக்குனு ஞாபகம் வச்சுக்கணும். அவங்கள மொத்தமா கூட்டினாலும் ஜனத்தொகைல ஒரே ஒரு சதவீதம் தேற மாட்டாங்க. அதத்தான் பாக்கணும். நடக்ற தப்புகள மட்டுமே வரிசையா ஷேர் பண்ணிட்டே இருந்தா மூள காச்சல் வந்து, கொரோனாக்கு சான்ஸ் தராமலே பல பேரு டிக்கட் வாங்கிருவாக.

அளவுக்கு மீறினா எல்லாமே டேஞ்சர். பணம், பிரியாணி, கோபம், விஸ்கி, கடன், பிஎம்ஐ மட்டும் இல்ல அந்த லிஸ்ட்ல. தகவலும் அதே கேஸ்தான். ரொம்ப தெரிஞ்சுகிட்டா முதல்ல ஆயாசம் வரும். அப்றம் அதோட பரிவாரங்கள் வரும். பாக்றது படிக்கிறதுல பாதிக்கு மேல ஃபேக் நியூஸ்னு புரிஞ்சவங்க எத்தன பேரு இருப்பாங்க? அவங்களுக்கு தெரியும், மீதிலாம் ஆஃப்-பேக்டு நியூஸ்னு.

போன வருசம் சொன்னத ஞாபக படுத்த தோணுது.

முரட்டு சிந்தனைகள், பேச்சுகள கைவிட்டு முடிஞ்சவரைக்கும் மென்மையான உணர்வுகள வெளிப்படுத்துவோம். இயற்கையோடும் மத்த உயிர்களோடும் நெருக்கமா இருப்போம். யார் மேலயும் கசப்பு வெறுப்பு காட்டாம, இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி..னு பாடிகிட்டே நடப்போம். இதுவும் கடந்து போம்.

கதிர்