September 27, 2021

இன்சூரன்ஸ், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் அன்னிய முதலீடு! அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் !

அன்னிய நேரடி முதலீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு சட்டதிருத்த மசோதாக்கள் மீது அவசர சட்டம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து அவசர சட்டதிருத்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது ஒப்புதலுடன் புதிய சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. த்ற்போது அதனை ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டு அவசர சட்டங்களை பிறப்பிப்பார்.எனினும், இந்த 2 அவசர சட்டங்களுக்கும் அடுத்து பாராளுமன்றம் கூடும் நாளில் இருந்து 6 மாத காலத்துக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
india new law
காப்பீட்டுத்துறையில் அன்னிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தும் சட்டதிருத்த மசோதா 2008–ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா டெல்லி மேல்–சபையில் இதுவரை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.நேற்று முன்தினம் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் இந்த மசோதா நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் எதிர்க்கட்சிகளின் அமளியால் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இதேபோல் 1993–ம் ஆண்டு முதல் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 204 நிலக்கரி சுரங்கங்களின் உரிமத்தை அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து நிலக்கரி சுரங்கங்களை மின்னணு முறையில் ஏலம் விடுவது தொடர்பான சட்ட திருத்த மசோதா(சிறப்பு ஒதுக்கீடு) ஒன்றையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவும் டெல்லி மேல்–சபையில் நிறைவேறவில்லை.

இந்நிலையில் மத்திய மந்திரி சபை பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடியது. அப்போது காப்பீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஆகியவற்றின் மீது அவசர சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய மந்திரிசபை முடிவு செய்தது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் ”2 மசோதாக்களையும் அவசர சட்டங்கள் மூலம் நிறைவேற்ற மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருக்கிறது என்று தெரிவித்தன.காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை வெளிநாடுகளின் முதலீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”என்றனர்.

மேலும் மருத்துவக் கருவிகள் தயாரிப்பு துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவத் துறை வளர்ந்து வரும் நிலைல், தேவையான மருத்துவக் கருவிகள், சோதனைக் கருவிகள் உள்ளிட்டவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும். அதன்படி இந்த துறையில் 100 சதவீத அன்னிய முதலீடு ஊக்குவிக்கப்படும். இதற்கான அவசர சட்டமும் கொண்டு வரப்படுகிறது. என்று அருண் ஜெட்லி தெரிவித்தார்.