September 25, 2021

இனி ஊசிக்கு டாட்டா சொல்லுங்க!இப்ப குட்டியூண்டு கேப்ஸ்யூல்கள் ரெடி!

ஒரு குறிப்பிட்ட மருந்து எந்த எடை உள்ள மனிதருக்கு எந்த அளவில் கொடுக்க வேண்டும் என்ற அளவு கோளில் செயல்படுவதால் 99% தீர்வு கிடைக்கிறது. அதுவும் உடனடியாக ரத்தத்தில் கலந்து கொள்ள இது பயனுடையதாக இருப்பதால்தான் இஞ்செக்ஷன் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து இன்று வரை உல்கம் முழுக்கப் பயன் படுத்தி வருகிறார்கள்..
cabsule injection aug 15
இந்த ஊசிப் பற்றிய சில தகவல்களை நம்மிடம் சொன்ன டாக்டர் செந்தில் வசந்த், “கி.பி. 900ம் ஆண்டில் எகிப்தைச் சேர்ந்த அம்மர் இபின் அலி அல் மௌஸ்லி என்ற மருத்துவர், கண்புரையை அகற்றுவதற்காக ஒரு நுண்ணிய கண்ணாடிக் குழாயை முதன்முதலில் பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சையின் போது தேவையற்ற கழிவுகளை உடலில் இருந்து அகற்றுவதற்காகவே ஊசி போன்ற நுண் குழாயைப் பயன் படுத்தினார்கள். 1650ல் பிளெய்ஸ் பாஸ்கல் என்ற பிரெஞ்சுக்காரர் சிரிஞ்சு கண்டுபிடித்ததே பெரும் திருப்பு முனையாக அமைந்தது. ‘திரவப்பொருள் நிரம்பிய மூடப்பட்ட ஒரு கலனுக்குள் செலுத்தப்படும் அழுத்தம், அந்தக் கலன் முழுவதும் சமமானது’ என்கிற இவரது ‘பாஸ்கல் விதி’ அறிவியல் உலகில் மிகவும் பிரபலமானது.

பாஸ்கலின் கண்டுபிடிப்புக்குப் பிறகு, சிரிஞ்சு பயன் படுத்த பல்வேறு முயற்சிகளை மருத்துவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். 1656ல் கிறிஸ்டோபர் ரென் என்கிற மருத்துவர் போதை மருந்தை ஊசியின் மூலம் ஒரு நாய்க் குட்டிக்கு செலுத்திப் பரிசோதித்துப் பார்த்தார். போதை ஏறிய அந்த நாய்க்குட்டி என்ன சேட்டை செய்தது என்பது பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை! தொடர்ந்து பல ஆய்வுகள் நடந்ததில், 1844ல் அயர்லாந்தை சேர்ந்த பிரான்சிஸ் ரிண்ட் என்ற மருத்துவர்,

இப்போது பயன்படுத்தப்படும் ஊசியை வடிவமைத்து, வலிநிவாரண சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு குத்தினார்!1853ல் ஸ்காட்லாந்தை சேர்ந்த அலெக்ஸாண்டர் உட் என்ற மருத்துவர் அதிகாரப்பூர்வமாக ஊசியைப் பயன்படுத்தியதோடு, எடின்பர்க்கிலிருந்து வெளிவரும் மருத்துவ இதழிலும் ‘இது புதிய சிகிச்சை முறை’ என்று எழுதினார். அதன்பிறகு, இது பற்றிய பயம் நீங்கி மருத்துவர்களும் மக்களும் ஊசியை ஏற்றுக் கொண்டார்கள். மருத்துவ உலகில் சகலமும் மாறிக் கொண்டு வந்தாலும் கடந்த 150 ஆண்டுகளாக ஊசியின் அடிப்படை வடிவம் மாறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது” என்றார்

இதனிடையே இதற்கு முற்றிலும் மாற்றாக புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளனர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள். இதன்,மூலம் இனி ஊசிக்கு டாட்டா சொல்லி விடலாம் என்கிறார்கள் அவர்கள் நம்பிக்கையோடு. இதற்காகவே அவர்கள் சிறிய கேப்ஸ்யூல்களை வடிவமைத்துள்ளனர்.

ஒரு மில்லிமீட்டர் பரப்பில் இப்படிப்பட்ட 10 கேப்ஸ்யூல்களை வைக்கலாம். அவ்வளவு குட்டி! இந்தக் கேப்ஸ்யூல் களில் மருந்து இருக்கும். இந்த மருந்துகளை நுண் அதிர்வலைகள் வழியாக உடலினுள் உட்செல்லும்படி செய்துள்ளனர். இதனை முதற்கட்டமாக எலிகளுக்குச் சோதனை செய்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். ‘‘இன்சுலின் அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சர்க்கரை நோயாளிகள், குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்’’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

‘‘ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் பாதுகாப்பற்ற சிரிஞ்சுகளால் நோய் தொற்றி உயிரிழக்கின்றனர். இந்தப் புதிய முறையில் எந்த ஆபத்தும் இருக்காது. இந்தக் கேப்ஸ்யூலை உடலில் எங்காவது காயம்பட்ட இடத்தில் வைத்து சிறிய கையடக்க கருவி வழியாக உட்செலுத்தும்போது நுண் அதிர்வலைகள் உருவாகும். அப்போது மருந்து உடலுக்குள் செல்லும். இந்த நுண் அதிர்வலைகள் நோய்த் தொற்று ஏற்பட்ட பகுதியில் மட்டும் செயல்பட்டு நோயை விரைவாக குணமாக்கும்’’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.