September 24, 2021

இந்த தேர்தலிலாவது நல்லவர்களை தேர்ந்தெடுப்போம்!

லோக்சபாவுக்கு தேர்தல் நடக்கும் இந்த சமயத்தில், சமீபத்தில் லோக்சபாவில் நடந்த சம்பவங்கள், நம் கவனத்தில் கண்டிப்பாக வந்தே தீரும். தெலுங்கானா தனி மாநிலப் பிரச்னையின்போது, அவையில் நடந்த கலாட்டாக்களும், கூத்துகளும் யாராலும் மறக்க முடியாது. ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்ததும், கையில் இருந்தது கத்தி அல்ல – ‘மைக்’ தான் என்று ஒரு எம்.பி., சொன்னதும், இன்னொரு எம்.பி.,யோ ‘மிளகு ஸ்பிரே’யை மற்ற உறுப்பினர்கள் மீது அடித்து தன்னை தற்காத்து (!) கொண்டதும் நினைவுக்கு வருகிறது
edit - parliment
இனிமேல் எப்படிப்பட்ட எம்.பி.,க்களை, நம்மை ஆளக்கூடிய பிரதிநிதிகளை, நாம் தேர்வு செய்ய வேண்டும் என்ற அக்கறை, நமக்கு கொஞ்சமேனும் ஏற்பட இந்த சம்பவம், ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.பணத்தை நிதியாக கட்சிக்கு கொட்டிக் கொடுத்து, எம்.பி., தொகுதிகளை கைப்பற்றுகின்றனர். தொகுதிகளிலும், கோடிக்கணக்கான ரூபாய்களை தேர்தலில் வெற்றி பெற, செலவு செய்கின்றனர். வாக்காளர்களுக்கும் சில ஆயிரங்கள் கிடைக்கக்கூடும். இப்படி வெற்றி பெறுவோர், ஜெயித்த பிறகு, தங்கள் தொகுதிக்கு என்ன நன்மை செய்வர்? இவருக்காக யார் செலவு செய்தாரோ, எந்த தொழில் அதிபர் கோடிக்கணக்கில் வாரி வழங்கினாரோ, அவருக்குத் தான் உதவி செய்வார். சாதாரண மக்களைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?

மறுபடியும் ஐந்து ஆண்டு கழித்து தான், அவர்களை சந்திக்க முடியும். ஒருவேளை அவர் அப்போது வேறு கட்சியின், வேறு சின்னத்தில், வேறு கூட்டணியில் கூட இருக்கலாம். இத்தனை தேர்தல்களில் நமக்கு கிடைத்த பாடம் இது தானே!

சில நுாறு அரசியல்வாதிகள்,சம்பாதித்து சுபிட்சமாக வாழத்தான், இந்த தேர்தல்களா என்று கேள்வி எழுகிறது.சமீபத்தில், துாத்துக்குடி துறைமுகத்தில் தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள், கப்பல்களில் செய்த சோதனையை நாம் இதன் பின்னணி யில் பார்க்க வேண்டும்.’சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தி யர்களின் கறுப்புப் பணம் எடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், கப்பல் ஒன்றில் இந்தியா வருகிறது…’ என்று தகவல் கசிந்திருப்பது தலையை சுற்ற வைக்கிறது.

சமுதாயத்தில் பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு என்று வளர்ந்து ஆண்களுக்கு நிகராக, சுயமாக வாழ்ந்து வரும் காலக்கட்டத்தில், சமீப காலமாக அவர்களுக்கு பாலியல் ரீதியான ஆபத்துகள் அதிகமாக நேர ஆரம்பித்திருக்கிறது. இந்த மாதிரி காலக்கட்டத்தில் அவர்களில் கணிசமானோர் தேர்தலில் நின்று, ஜெயித்து லோக்சபாவில் நுழைந்தால், பெண்களின் பாதுகாப்பிற்கும், தைரியத்திற்கும் அதுபேருதவியாக இருக்கும்.

ஆனால், முக்கியமான கட்சிகள் அனைத்தும், சினிமா நடிகைகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மீரட் தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா, பிரசாரம் செய்யும்போது, மக்களின் எதிரிலேயே, தன் கட்சியினராலேயே, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டார். இவர்களுக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண்களின் பாதுகாப்பு பற்றிய பயம் அதிகமாகிறது.சமீபத்தில், ஒரு மத்திய அமைச்சரின் மனைவி, தலைநகர் டில்லியில், ஓட்டல் அறை ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் இறந்து கிடந்ததும், நினைவுக்கு வருகிறது. அது கொலையா, தற்கொலையா என்றும், இன்னும் முடிவாகவில்லை. மேலிடங்களிலேயே பெண்களுடைய நிலை இப்படி இருக்கும்பட்சத்தில், சமுகத்தின் கீழ் மட்டங்களில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வாக, எந்த ஒரு அரசியல் கட்சியும் ெதளிவானதிட்டத்தை முன் வைக்க வில்லை.மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு, என்பதும் கானல் நீராகவே உள்ளது.

நம் தேசத்தின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க, யோசிக்காமல், ஆயுத பெருக்கத்திலும், அணு ஆயுத வளர்ச்சியிலும் ராக்கெட் விடுவதிலும் கவனம் செலுத்துவதும், ஒரு நாடு, முன்னேற்றப் பாதையில் செல்லுவதற்கான அறிகுறியல்ல!கல்வியறிவு இல்லாதோர், பண பலத்தால் ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்றனர். ஒரு சில படித்த அதிகாரிகளின் ஆலோசனைகளின் பேரில், ஊழல்களில் ஈடுபட்டு கொள்ளையடித்து பங்கு போட்டுக் கொள்கின்றனர். ஆக, மக்களை சுரண்டுவதில் படித்தோர், படிக்காதோர் என்றவித்தியாசமில்லை.மக்களை ஏமாற்றி, சுரண்டி அதில் பிழைப்பு நடத்தக் கூடாது. அரசின் நலத் திட்டங்கள் சொல் அளவில் இல்லாமல், செயல் அளவில் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர வேண்டும் என்ற பொறுப்பை இந்த அதிகாரிகளுக்கு அவர்கள் படித்த கல்வி கற்றுத் தரவில்லை என்றால், இதற்கு யார் காரணம்?கல்வி வியாபாரமாகிப் போனதே அதற்கு காரணம். படிக்காதோர் பண பலம், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, கல்வி நிறுவனங்களை துவங்கி, கல்வியை விற்று காசு சம்பாதிக்கின்றனர். ஏராளமாக காசு செலவழித்து படிப்போர், மக்கள் சேவையை மறந்து, அந்த காசை சம்பாதிப்பதிலேயே குறியாகஇருக்கின்றனர்.

இந்த தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள், கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள். அதுமட்டுமின்றி ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, பணம் பறிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டோர் எல்லா கட்சிகளும், இவர்களுக்கு பாரபட்சமின்றி தேர்தலில் நிற்க, வாய்ப்பு தந்துள்ளது.

தேர்தலில் நிற்பவர் நல்லவரா? மக்கள் நலத்தை விரும்புபவரா? என்று எந்த கட்சியும் பார்ப்பதில்லை. அவர் வல்லவரா? பண பலம் மிக்கவரா என்று மட்டுமே பார்ப்பதால் தான், இந்த நிலை. இப்படிப்பட்ட சூழலில் நமக்கான பிரதிநிதியை நாம் தான் எச்சரிக்கையுடன் தேர்வு செய்ய வேண்டும்.
விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு வறுமை, கல்வி, மருத்துவம், தண்ணீர் மற்றும் மின்சாரம், பெண்களின் பாதுகாப்பு போன்றவை, மக்களைவாட்டி வதைக்கும் முக்கிய பிரச்னைகள். அதுமட்டுமின்றி நாடெங்கிலும் விவசாயிகளின் தற்கொலைகள், சிறுதொழில்கள் சீரழிந்து, கிராமப்புற ஏழைகள், குடும்பம் குடும்பமாக வேலை தேடி, நம் நாட்டிலேயே அகதிகளாக அலைவதும், அவர்களில் ஒரு சிலர் செய்யும் சமூக விரோத செயல்களுக்காக அனைவரையுமே, சந்தேகத்துடன் பார்க்கும் மனோபாவத்திற்கு சமூகத்தை தள்ளிய கொடுமையும், நம்மை கலங்க வைக்கும் நிஜங்கள்.
இந்த பிரச்னைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது, அரசியல்கட்சிகளின் தோல்வியைத் தான் ெவளிப்படையாக காட்டுகிறது. எனவே, இந்த தேர்தலிலாவது மக்கள் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகளை சீர் துாக்கி பார்த்து நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் உண்மையான மாற்றம் ஏற்படும்.

அப்சல் in தினமலர் E-mail: [email protected]
கார்ட்டூன் உதவி: timesofindia.indiatimes.com/