October 18, 2021

“இந்த” தகவல்களையெல்லாம் ஊடகங்களில் இனி சொல்லலாமா கூடாதா?

சமீபத்தில் புதிய தலைமுறை டிவி– யில் நேர்பட பேசு நிகழ்ச்சியில் தீபாவளியை ஒட்டி நடந்த விவாதத்தை எதிர்த்து  நேற்று புதிய தலைமுறை அலுவலகத்தின் முன் இந்து முண்ணனியினர் ரகளை செய்தனர். ’புதிய தலைமுறை கட்டிடமே இருக்காது’ என மிரட்டும் காட்சியின் வீடியோவை இத்துடன் கீழே இணைத்திருக்கிறேன்
nerpada pase
இதுக் குறித்து  நடந்த விவாதம் மிக மிக பொதுவான ஒன்று. அதில் கலந்து கொண்ட எஸ்.ராமகிருஷ்ணன், சுபவீ, வீ.அரசு முதலானவர்கள் தீபாவளியின் வரலாறு பற்றியும், இன்று நுகர்வுக் கலாச்சாரத்தால் தீபாவளி கொண்டாட்டங்கள் எப்படி உருமாறிவிட்டன என்பது குறித்தும், இதில் உள்ள சமூக பொருளாதார விஷயங்கள் எனவும் பலவற்றையும் குறித்து பொதுசமூக நோக்கில் பேசினர். ஆனால் மூவருமே தீபாவளி கொண்டப்படுவதை எதிர்த்து எதுவும் கூறவில்லை. பண்டிகைகளால் மக்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை வரவேற்றே பேசினர். எஸ்.ராமகிருஷ்ணன் தானும் புதுச்சட்டை அணிந்தே வந்திருப்பதாக கூறினார். சுபவீ மிகுந்த பண்பாட்டுணர்வுடன் இந்த விவகாரத்தைக் கையாண்டார். ஆனால் வழக்கறிஞர் ராமமூர்த்திதான் இந்த விவாதம் இந்துக்களுக்கு எதிரான விஷயம் என்று திரிக்க பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்.

தமிழர்கள் வாழ்வில் தீபாவளி 500 வருடங்களாகத்தான் இருக்கிறது என்றோ பட்டாசுகள் தமிழ்நாட்டிற்கு 1934ல்தான் வந்தது என்றோ சொல்வது எப்படி தீபாவளிக்கோ அல்லது இந்து மதத்திற்கோ எதிரானதாகும்? அதே போல தமிழ் நாட்டிற்கு கிறிஸ்துமஸ் வந்ததற்கும் ரம்ஜான் வந்ததற்கும் வரலாற்றுக் காலங்கள் உண்டு. வரலாற்றைப் பயில்பவர்கள் அதையெல்லாம் பேசத்தான் செய்வார்கள். பூமி தோன்றிய காலம் தொட்டு இதெல்லாம் இருந்தன என்று யாராவது நம்பினால் அவர்கள் இருட்டறையில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். ஆனால் வரலாற்றைப் பற்றிய, பண்பாட்டைப் பற்றிய பேச்சையெல்லாம் மதம் சார்ந்த பேச்சாக மாற்றி மாற்றுக்குரல்களை அழித்துவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. இந்த உலகத்தை அவ்வளவு பெரிய மூடர்கூடமாக மாற்ற முடியுமா என்ன?

வரன்முறையின்றி பட்டாசுகளை கொளுத்துவதால் காற்றும் எந்த அளவு மாசுபடுத்தபடுகிறது என்றும் ஒலி மாசுபாடு எந்த அளவு ஏற்படுகிறது என்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் புள்ளி விபரம் வெளியிட்டு வருகிறது. அதன் மூலம் எத்தகையை நோய்கள் பரவுகின்றன என்பதைப் பற்றியும் அது எச்சரிக்கிறது. இது போன்ற அமைப்புகள் எல்லாம் தீபாவளிக்கும் இந்துமதத்திற்கும் எதிரானவையா? இந்த அமைப்பு ‘இந்த ஆண்டு தீபாவளி தினங்களில் கடும் மழை பெய்துவருவதால் பட்டாசு மாசு சென்ற ஆண்டைவிட குறைந்துள்ளது’ என்றும் கூறுகிறது, இந்த தகவல்களையெல்லாம் ஊடகங்களில் இனி சொல்லலாமா கூடாதா?

இது போன்ற விவாதங்கள் புத்தாண்டு கொண்டாங்கள் தொடர்பாகவும் நடக்கின்றன. புத்தாண்டு என்பது குடிகாரர்களின் பண்டிகையாகி விட்டது என்றும் இதே ஊடகங்களில் பேசியிருக்கிறோம். கிறித்துவர்கள் யாரும் குண்டாந்தடியுடன் வரவில்லை. இஸ்லாமியர்களின் பண்டிகைகளை ஒட்டி பொதுவான சர்சசைகள் எழுந்தால் அதைப் பேசுவதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. புத்தாண்டு கொண்டாடக் கூடாது என பல இந்து அமைப்புகள் பிரச்சாரம்செய்து வருகின்றன.

காவல்துறையினர் 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்காதீர்கள் என்றுகட்டுப்படுத்துகின்றனர். பட்டாசுத்தொழிலில் குழந்தைத் தொழிலாளர் முறை இருப்பதாலும் பட்டாசால் சுற்றுச் சூழல் மாசடைவதாலும் பல சமூக அமைப்புகள் தங்கள் ஆட்சேபங்களை தெரிவிக்கின்றன. இவர்கள் எல்லாம் இனி மத விரோதிகளா?

காதலர் தினத்தில் நுகர்வுக் கலாச்சாரத்தின் தாக்கத்தை எதிர்க்கும் இந்துத்துவா கும்பல் தீபாவளியில் நுகர்வுக் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று சொன்னால் எதற்காக வெறியாட்டம் போடுகிறது. ?

https://www.youtube.com/watch?v=6ZvAE2CyE1k

புதிய தலைமுறையில் நடந்த தீபாவளி பற்றிய விவாதத்தின் காணொளி இந்தச் சுட்டியில் இருக்கிறது
http://www.youtube.com/watch?v=HLMHqPPdgxI&list=PL-RDFpvLYFEWCShKiMrhdEw7wL434UOjl&index=2

manushya.puthiran