December 4, 2022

இந்த டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் மாறி கொண்டே இருக்கிறது

கொரோனா பத்திரிகைகளின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கியமான வினையாகி விட்டது. விகடன், தி ஹிந்துவை தொடர்ந்து புதிய தலைமுறை தனது வார இதழ்களை மட்டும் நிரந்தரமாக நிறுத்துகிறது. அங்கிருக்கும் பணியாளர்களுக்குப் பணி நீக்க நோட்டீஸ் கொடுத்தாகி விட்டது என தகவல். அதில் closure of magazine என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள். அங்கே, பணி செய்து கொண்டிருந்தவர்கள் முன்னாள் இன்னாள் நண்பர்களே. பல முறை புதிய தலைமுறை அலுவலகம் சென்றுள்ளேன்.

இதழ்களில் புதியதொரு பரிமாணத்தில் வந்து கிசுகிசுக்கள், சினிமா என்ற ரெகுலர் ஃபார்முலாவை உடைத்து முன்னேற்றம் சார்ந்த செய்திக் கட்டுரைகளை தொடர்ந்து அளித்து வந்தது புதிய தலைமுறை இதழ். அதனால் பலரும் வாசிக்க தொடங்கினர். வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்காக மாணவர்களுக்காக ஆண்டு சந்தாவும் குறைந்த தொகையில் வழங்கியது. இது நல்ல வரவேற்பையும் பெற்றது. புதிய தலைமுறை கல்வி என்று ஒரு இதழையும் துவங்கியது. இப்போது திடீரென அனைத்தையும் மூடுவதாக அறிவித்து உள்ளது தீராச் சோகம் தான்.

ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், கொரோனா அனைவரையும் புரட்டி போட ஆரம்பித்து விட்டது. வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதால் விளம்பரங்கள் இல்லை. கடைகள் திறந்தாலும் முன்பு போல் வியாபாரம் இருக்கவும் வாய்பில்லை. எனவே நிர்வாகம் இதை ஒரு காரணமாக சொல்லி தான் நடவடிக்கை எடுக்கிறது. வெறும் லாப நஷ்டத்தை மட்டும் பார்த்து ஒரு இதழை ஒரு பன்முக வெற்றிக் குழுமம் நிறுத்துகிறது என்றால் அது சொல்லும் செய்தி கடினமானது.

ஆனால் புதிய தலைமுறை இதழ் அல்லாத பல பத்திரிகைகள் சினிமாவை மட்டுமே தூக்கி பிடித்தன. அரசியலில் ஒரு சார்பு நிலையை எடுப்பதும் அதை மட்டுமே முன்னிலைப் படுத்துவதும் என்று அடாவடியான பேர்வழிகளான ஊடகங்கள் மாறிப் போனது நம் கண் முன்னே நடந்து கொண்டு தான் இருந்தது. எனவே, பிரிண்ட் மீடியாக்களின் மீதான நம்பக தன்மை படிப்படியாக குறைந்து போனது. செய்தி டீவி மீடியாக்களின் வளர்ச்சி இன்னொரு காரணம். உடனுக்குடன் நிகழ்வுகள் வீட்டுக்கு வந்து சேர்வதால் நாளைய செய்திக்கு அவசியமில்லாமல் போனது. மேலும் பேஸ்புக், வாட்சப், டிவிட்டர் என டிஜிட்டல் மீடியாக்களின் தாக்கமும் சேர்ந்து கொண்டு பிரிண்ட் மீடியாக்களின் குரல் வளையை நெறிக்க துவங்கியது. அப்போதே சுதாரித்தவர்கள் இணையத்திற்கு மாறினார்கள்.

பிரிண்ட் & டிஜிட்டல் மீடியாக்களில் தொடர்ந்து இயங்குபவர்கள் ஒரளவுக்கு இன்று வரை தாக்கு பிடிக்கிறார்கள். நாளை என்பது புரியாத புதிர் தான். இந்த டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் மாறி கொண்டே இருக்கிறது. வாசிப்பு படிப்படியாக குறைந்து போனது. நம்மையெல்லாம் செம்மை படுத்திய புத்தகங்களின் பெயர்களை கூட இந்த காலத்து இளம் வயதினர் அறிவார்களா என்று தெரியவில்லை. மேலும் இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு மேல் எதையும் ஆழ்ந்து வாசிக்கும் பொறுமை அறவே இல்லை. இதை எப்படி வளர்ப்பது என்றும் புரியவில்லை.  இன்னும் ஒரிரு மாதங்களில் கொரோனா நோய் தொற்று முடிந்தாலும் அதன் வீச்சு இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறது என்பது ஒரு திகில் நாவலின் மர்ம முடிச்சாகவே இருக்கிறது.

சூர்யா சுரேஷ்