October 19, 2021

‘இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரபலம்’ விருது! ரஜினிக்கு மத்திய அரசு வழங்குகிறது!

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரஜினிகாந்துக்கு ‘இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரபலம்’ என்ற டைட்டிலில் சிறப்பு விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
rajni nov 12
கோவாவில், 45-வது சர்வதேச திரைப்பட விழா, வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.இந்த விழா 11 நாட்கள் நடைபெறும். 75 நாடுகள், இதில் பங்கேற்கின்றன. ஆசிய நாடுகளின் 7 படங்களும், இதர நாடுகளின் 61 படங்களும் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.முதலாவது படமாக ஈரான் மொழிப்பட இயக்குனர் மோசன் மக்மல்பப் இயக்கிய ‘தி பிரசிடண்ட்’ என்ற படம் திரையிடப்படும்.

இந்த ஆண்டு மரணம் அடைந்த ஆலிவுட் பிரபலங்கள் ரிச்சர்டு அட்டன்பரோ, ராபி வில்லியம்ஸ் மற்றும் இந்திய திரையுலக பிரபலங்கள் ஜோரா சேகல், சுசித்ரா சென், ஏ.நாகேஸ்வரராவ், சதாசிவ் அம்ராபுர்கர், பரூக் ஷேக் ஆகியோருக்கு விசேஷ அஞ்சலி செலுத்தப்படும்.இந்த திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை ராஜாங்க மந்திரி ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.விழாவில், அமிதாப்பச்சன், தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு ‘இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரபலம்’ என்ற விருது வழங்கப்படுகிறது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவையொட்டி, இந்த விருதை அவருக்கு மத்திய அரசு வழங்குகிறது.

மேலும் இந்த திரைப்பட விழாவில், ஹாங்காங் பட இயக்குனர் வாங் கர்-வைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அவர் இயக்கிய ‘தி கிராண்ட்மாஸ்டர்’ படம், பட விழாவின் கடைசி படமாக திரையிடப்படுகிறது.

இந்தியாவின் வடகிழக்கு மாநில திரைப்படங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அந்த பிராந்தியத்தில் உள்ள 8 மாநிலங்கள், பெண்களை மையமாக கொண்டு தயாரித்த திரைப்படங்கள், விழாவில் திரையிடப்படுகின்றன. வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த இயக்குனர் ஜானு பருவாவின் சாதனைகள் பற்றிய விளக்கப்படமும் திரையிடப்படும்.இந்த ஆண்டு ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்றவர் கவிஞர் குல்சார். அவரது சாதனைகள் பற்றிய விளக்கப்படமும் விழாவில் திரையிடப்படுகிறது.