October 2, 2022

இந்திய குடிமக்களாகிய நாங்கள்..!

ஜிக்னேஷ் மெவானி குஜராத் எம்.எல்.ஏ.

மோடியை விமர்சித்து ட்வீட் போட்டார். அதற்காக அசாம் போலீஸ் அவரை கைது செய்தது. அவரை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

விடுதலையான மெவானி வெளியே வந்ததும் மறுபடி கைது செய்து உள்ளே தள்ளியது. புது புகாரின் பேரில் புது வழக்கில் கைது செய்தார்களாம்.

என்ன புகார்? யார் கொடுத்தது?

”போலீஸ் நிலையத்தில் இருந்து வேனில் அழைத்து வரும் வழியில் என்னை ரேப் செய்ய முயன்றார்” என்று ஒரு பெண் போலீஸ் புகார் செய்தாராம்.

“போலீஸ் வேனில் அத்தனை ஆண் போலீஸ் உடன் இருக்கும்போது ஒரு பெண் போலீசை ஒரு கைதி கற்பழிக்க முயன்றார் என்பது நம்புகிற மாதிரியா இருக்கிறது?” என்று மாவட்ட நீதிபதி கேட்டார்.

அவரால் தாங்க முடியவில்லை. ”இந்தியாவுக்கு சுதந்திரம் சும்மா வரவில்லை. எத்தனையோ நல்லவர்கள் உயிர் தியாகம் செய்து கிடைத்த வரம் நம்முடைய ஜனநாயகம். அசாம் போலீஸ் கேணத்தனமாக இப்படி எல்லாம் பொய் கேஸ் போட்டு மக்களை சித்ரவதை செய்வதை பார்த்துக் கொண்டு கோர்ட் சும்மா இருக்காது” என்று முழங்கி இருக்கிறார்.

ஆனால் அவர் பாவம், ஒரு மாவட்ட நீதிபதி. “ஆகவே நமது ஐகோர்ட் இந்த மாதிரி அபத்தமான போலீஸ் அட்ராசிடிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்றார். ஐகோர்ட் ஏற்கனவே அசாம் போலீசின் போலி என்கவுன்டர்கள் குறித்த வழக்கை விசாரிக்கிறது. 30 பேரை சுட்டு கொன்றிருக்கிறது அங்குள்ள போலீஸ்.

விசித்திரம் என்ன என்றால், மெவானி குஜராத் எம்.எல் ஏ. அங்கே நடப்பது பா.ஜ ஆட்சி. அது மோடியின் சொந்த மாநிலம். அங்குள்ள போலீசுக்கு தப்பாக தெரியாத விசயம் அசாம் போலீசுக்கு குற்றமாக தெரிந்து அங்கே போய் கைது செய்திருக்கிறார்கள்.

“குஜராத் அரசுக்கு கெட்ட பெயர் வந்து விட கூடாது என்பதற்காக, அசாம் மாநில போலீசுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆடர் போட்டு என்னை கைது செய்ய வைத்தார்கள்” என்று மெவானி சொல்கிறார்.

இந்த மாதிரி சமீப காலத்தில் பலது பார்த்து விட்டோம். Layer by layer என்பார்கள். அந்த மாதிரி நாட்டின் ஜனநாயக நிர்வாக கட்டமைப்பை படிப்படியாக உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். முழுவதுமாக உடைத்து முடிக்கும்போது, அப்படியொரு ஜனநாயக கட்டமைப்பு இருந்ததே பலருக்கு மறந்து போயிருக்கும்.

ஜனநாயகமும் நாடாளுமன்ற அரசமைப்பும்தான் உலகின் தலைசிறந்த நிர்வாக ஏற்பாடு என்று நான் நம்பியது இல்லை. ஆனால், இருப்பதில் சிறந்த ஏற்பாடு இதுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஓட்டைகள் நிறைய இருக்கின்றன, உண்மைதான். அவற்றை சரி செய்ய வேண்டுமே தவிர தகர்த்து எறியக் கூடாது.

ஊடகங்களும் உயர் நீதிமன்றங்களும் அடக்கி வாசிக்கும் சூழ்நிலையில், சராசரி மனிதராக மதிக்கப்படும் ஒரு மாவட்ட நீதிபதி ஜனநாயகத்தை காக்க குரல் கொடுத்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

இந்தியா என்பது மத்திய அரசு என்று பலரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். இல்லை. இந்தியா என்பது இந்திய குடிமக்கள். அரசியல் சாசனத்தின் தொடக்க வாசகமே அதுதான்:

“இந்திய குடிமக்களாகிய நாங்கள்…”

கதிர்