September 18, 2021

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியா காலமானார்!

இந்திய கிரிக்கெட் வாரியம். இதன் தலைவராக கொல்கத்தாவைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியா இருந்து வந்தார்.தொழிலதிபரான ஜக்மோகன் டால்மியா 1979–ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இணைந்தார். அது முதல் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பொறுப்புகளில் வெற்றி கரமாக செயல்பட்டார். 2001–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியத் தின் தலைவராக பணியாற்றினார். டால்மியா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராகவும் இருந்திருக்கிறார். 1997–ம் ஆண்டு முதல் 2000–ம் ஆண்டு வரை ஐ.சி.சி. தலைவராக செயல்பட்டார். ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினையில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலில் என்.சீனிவாசன் போட்டியிட கோர்ட்டு தடை விதித்ததால் 10 ஆண்டுகள் கழித்து மறுபடியும் டால்மியாவை நோக்கி தலைவர் பதவி தேடிச் சென்றது. கடந்த மார்ச் மாதம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக 2–வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
dalmiya
டால்மியாவுக்கு கடந்த 17–ந்தேதி இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ‘ஆஞ்சியோகிராபி’ சிகிச்சையின் மூலம் அடைப்பு அகற்றப்பட்டதாகவும், அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை டால்மியாவின் உடல்நிலை மோசமடைந்தது. மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. தகவல் அறிந்ததும் பெங்கால் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உடனடியாக அங்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர், ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா உள்ளிட்டோர் கொல்கத்தாவுக்கு விரைந்தனர். இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பிலும், கிரிக்கெட் வீரர்கள் சார்பிலும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டால்மியாவின் மரணத்தை தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டுபொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.