October 21, 2021

இந்தியா முழுவதும் ஒரே விலையில் உயிர் காக்கும் மருந்து! – மத்திய அரசு அதிரடி!

உயிர்காக்கும் மருந்துகள் தற்போது இந்தியாவில் அந்தந்த பகுதிகளில் தனித் தனி விலையில் விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் சொல்லும் மருந்துக் கடைகளில்தான் நோயாளிகள் மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விலை வைத்து விற்கப்படுகிறது.இதனைத் தடுப்பது குறித்து மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்தது. அதன்படி இந்தியா முழுமைக்கும் ஒரே விலையில் உயிர் காக்கும் மருந்து பொருட்களை விற்க மருந்து கம்பெனிகள், விற்பனை டீலர்கள், விற்பனை சங்கத்தினர் ஆகியோருக்கு உரிய உத்தரவு வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
medi price nov 17
உயிர்காக்கும் மருந்துகளுக்கு மானியம் அளித்து, குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. இதனையும் மீறி பல்வேறு மருந்துக் கடைகளில், கூடுதல் விலைகளில் உயிர் காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விலைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரும் ஜனவரி ஒன்றாம்தேதி முதல், உயிர் காக்கும் மருந்துகளின் லேபிள் மீது அரசு நிர்ணயித்துள்ள விலை சிவப்பு மையில் பெரிதாக அச்சிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் வசூலிக்கப்பட்டால் நுகர்வோர் 1800 111255 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் கூடுதல் கட்டணம் பெற்றதாக இதுவரை 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வழக்குகள் தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக மருந்துக் கம்பெனிகள், டீலர்கள்,நுகர்வோர் அமைப்புகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் மருந்து கம்பெனிகள் தங்களின் கருத்துக்களை சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சுகாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.