September 24, 2021

இந்தியா மற்றும் சீனாவில் அதிகரிக்கும் புற்று நோய்!

ஆசியா கண்டத்தின் இரு பெரும் நாடுகளான இந்தியாவிலும், சீனாவிலும் அதிகரித்துவரும் புற்றுநோய் தாக்கம் புகைப்பழக்கம், காலம்கடந்து நோயறிதல்,நோயப்பாதிப்பிற்கேற்ற சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் இருத்தல் போன்றவற்றால் பெரும் நெருக்கடிகளைத் தருவதாக மாறியுள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.லான்சட் ஆன்காலஜி என்ற மருத்துவ பத்திரிகையில் வெளிவந்துள்ள முக்கிய அறிக்கையில் 40-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இந்த இரு நாடுகளும் கேன்சர் நோயினால் பொருளாதார மற்றும் மனித இழப்பீடுகளைப் பெருமளவில் எதிர்கொள்ள நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Human breast cancer cells dividing
சீனாவில் தற்போது நிகழும் ஐந்து மரணங்களில் ஒன்றாகவும், இதய நோய்க்கு அடுத்த இடத்திலும் கேன்சர் காணப்படுகின்றது. இதில் 60 சதவிகிதம் சுற்றுச்சூழல் மாசுபாடு, புகை பிடித்தல் மற்றும் நீர் மாசுபாடு என்று அறியப்படுகின்றது. மக்களின் விழிப்புணர்வும் குறைவாக இருக்கும் சமயத்தில் அரசு மக்களுக்காகச் செலவிடும் நிதி குறைவும் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் அங்கு கிராமப்புறங்களில் வாழும்போது நகர்ப்புற மக்களுக்கு அதிக மருத்துவ வசதிகள் கிட்டுகின்றன.

இந்தியாவிலோ அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் காணப்படுவதைவிட நான்கில் ஒரு பகுதியினரே இந்நோயால் பாதிக்கப்பட்டாலும் இறப்புவிகிதம் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. கிட்டத்தட்ட 30 சதவிகிதத்தினரே கேன்சர் நோய் கண்டறியப்பட்டபின் ஐந்து வருடங்களுக்கு உயிர் வாழ்கின்றனர். மிகத் தாமதமாகவே இந்த நோய் கண்டறியப்படுகின்றது என்றும், சரியான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படாததவும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது. இந்தியாவில் ஐந்து பெண்களில் ஒருவர் இறப்பிற்கு மார்பக புற்றுநோய் காரணமாக இருக்கின்றது என்றால் 40 சதவிகிதத்தினரின் மரணத்திற்கு புகையிலைப் பழக்கம் காரணமாக உள்ளது.

புகையிலை கட்டுப்பாடு, ஆரோக்கிய பராமரிப்பு, புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளில் செய்யப்படும் முதலீடுகளின் அளவைப் பொறுத்தே அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த நோய் அதிகரிப்பது தொடரும் என்று கொல்கத்தாவில் உள்ள டாடா மருத்துவ மையத்தின் பேராசிரியரான மோகன்தாஸ் மல்லத் தெரிவிக்கின்றார்.

ஆண்டுக்கு ஒரு மில்லியன் புதிய கேன்சர் நோயாளிகள் இங்கு கண்டறியப்படுகின்றனர். வரும் 2035-ம் ஆண்டுக்குள் இந்த கணக்கீடு 1.7 மில்லியனாக மாறக்கூடும். அதுபோல் 6,00,000 -7,00,000 ஆக இருக்கும் கேன்சர் இறப்பு விகிதம் 1.2 மில்லியனாக மாறக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.