இந்தியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை!

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏறி இந்திய சிறுவன் அத்வைத் பார்தியா சாதனை படைத்துள்ளான்.

மலையேறுபவர்களின் லட்சியக் கனவுகளில் ஒன்றாக விளங்கும் மலை கிளிமஞ்சாரோ. ஆப் ரிக்கக் கண்டத்தின் மிக உயரமான இம்மலையைப் பற்றிய சுவையான தகவல்கள் சிலிர்ப்பூட்டு பவை… டான்சானியாவில் 756 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள, யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான கிளிமஞ்சாரோ தேசிய பூங்காவில் கிளிமஞ்சாரோ மலை உள்ளது.
உலகின் உயரமான தனித்த மலை இதுதான். மற்ற உயரமான மலைகளெல்லாம் ஏதேனும் ஒரு மலைத் தொடரின் அங்கமாக இருக்கும். உலகின் புகழ்பெற்ற ஏழு மலைமுகடுகளில் கிளி மஞ்சாரோவும் ஒன்றாகும். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர்.

கிளிமஞ்சாரோ ஒரு ராட்சஸ பல அடுக்கு எரிமலை ஆகும். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பொங்கி வழிந்த எரிமலைக் குழம்பால் உருவான மலை இது. இம்மலையானது, கிபோ (Kibo), மாவென்சி (Mawenzi), ஷிரா (Shira) ஆகிய மூன்று முக்கிய எரிமலைகளால் உருவானது. இதில் மாவென்ஸியும் ஷிராவும் இறந்துவிட்ட எரிமலைகளாகும். கிபோ ஓர் உறங்கும் எரிமலை. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். கடைசியாக இது 200 ஆண்டுகளுக்கு முன் வெடித்தது. கிபோ எரிமலையின் உச்சியின் பெயர் ‘உகுரு’ (Uhuru).

கிளிமஞ்சாரோ என்ற பெயரின் உருவாக்கமும் பொருளும் எவரும் அறிந்திருக்கவில்லை. ஆப்ரிக் காவில் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் ‘சுவாஹிலி’ மொழியில் ‘கிளிம’ என்றால் ‘மலை’ என்றும், ‘ஞ்சாரோ’ என்றால் ‘வெண்மை’ என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். அதாவது ‘வெள்ளை மலை’ என்பது கிளிமஞ்சரோவின் அர்த்தங்களில் ஒன்றாகும்.

கிளிமஞ்சாரோவில் 2.2 சதுர கி.மீ. அளவுள்ள பனி முகடு உள்ளது. ஆனால், புவி வெப்பமயமாத லால் இதன் அளவு குறைந்து கொண்டே வருகிறது. 1912ம் ஆண்டு காணப்பட்ட பனியின் அளவில் 80 சதவீதம் இப்போது குறைந்து விட்டது. இங்கு ஒரே மலையில் வேளாண் நிலம், மழைக் காடு, புதர்க் காடு, தரிசு நிலம், மலைப்பகுதியைச் சார்ந்த பாலைவனம், பனி முகடு என்று ஆறு விதமான நிலப்பரப்புகள் காணப்படுகின்றன. இது உலகில் வேறெந்த பகுதியிலும் காணக் கிடைக்காத அதிசயம். மலையின் ஒவ்வொரு ஆயிரம் அடியிலும் ஒவ்வொரு வகை நிலப்பரப்பு காணப் படுகிறது. மலையின் கீழ்ச்சரிவுகளில் காப்பி விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மலை உச்சியைச் சென்றடைய ஆறு பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாதைக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. இதில் ‘மாரங்கு’ என்ற பாதை புகழ்பெற்றதாகும். 1848ம் ஆண்டு ஜெர்மனி மதபோதகரான ‘ஜோஹன்னஸ் ரெப்மான்’ (Johannes Rebmann) என்பவர், கிளிமஞ்சாரோ மலையைக் கண்டறிந்து, ராயல் புவியியல் சங்கத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். ஆனால், அங்கிருந்த எந்த நிபுணர்களும் இதை நம்பவில்லை. வெப்பம் நிறைந்து காணப்படும் நிலமான, பூமத்திய ரேகைப் பகுதியில் பனி மூடிய மலைக்கு சாத்தியமே இல்லை என்று சந்தேகித்தனர்.

இப்படியாப்பட்ட இந்த சிகரத்தின் மீது 9 வயது இந்திய சிறுவன் அத்வைத் பார்தியா கடந்த 31-ம் தேதி ஏறி சாதனை படைத்துள்ளான். இவனது பூர்விகம், மராட்டிய மாநிலம் புனே ஆகும். 2016-ம் ஆண்டில் 6 வயதாக இருந்த போது, அத்வைத் எவரெஸ்ட் சிகர அடிவார முகாமுக்கு ஏறி சாதனை படைத்துள்ளான். அடுத்த ஆண்டு ஐரோப்பாவிலேயே உயரமான எல்ப்ரஸ் சிகரம் ஏற அத்வைத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.