September 20, 2021

இந்தியாவில் வருகின்ற 2020-ம் ஆண்டில் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை (5 ஜி)

அதிவேக இணைய பயன்பாட்டுக்கான 4ஜி சேவை இந்தியாவை அதிகரித்து வருகிறது. அதிலும், ஜியோ நிறுவனம் அறிமுக சலுகையாக இலவச 4ஜி சேவை வழங்கிய பிறகு இவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது. இந்நிலையில், இந்தியாவில் வருகின்ற 2020-ம் ஆண்டில் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை (5 ஜி) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, “ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை (5ஜி) தொழில்நுட்பத்தின் மூலம் நகர்ப்புறங்களில் அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவையின் வேகம் 10,000 எம்பிபிஎஸ் ஆகவும், கிராமப்புறங்களில் 1,000 எம்பிபிஎஸ் ஆகவும் இருக்கும். இதற்காக மத்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்து தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருண் சுந்தர்ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கருவிகள் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. நமது நாட்டில் பயன்படுத்தப்படும் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கருவிகளில் உள்நாட்டுத் தயாரிப்புகள் 50 சதவீதம் இருக்க வேண்டும்.

சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை கருவிகளில் இந்தியத் தயாரிப்புகள் 10 சதவீதம் இருக்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு, பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும்”இவ்வாறு அவர் தெரிவித்தார்.