September 20, 2021

”இந்தியாவில் “மதம் இல்லை” என்போர் 28.6 லட்சம் !

2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 28.6 லட்சம் இந்தியர்கள், தங்களின் படிவத்தில் எந்த மதம் என்பதை குறிப்பிடவில்லை. ஜாதியோ மதமோ எனக்கு மதிப்பை தராது என்ற நம்பிக்கை இளைஞர் களிடம் அதிகரித்து வருவதாகவும், மதங்களை குறிப்பிடாத மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் பலர் தெரிவித்துள்ளனர். இது வரவேற்கதக்க, மகிழ்ச்சிகரமான ஒன்று எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
religion india aug 31
2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மும்பை எஸ்.என்.டி.டி., மகளிர் பல்கலை., யின் பொருளாதார துறையின் தலைவர் விபுதி பட்டேல் விவரித்தார். அப்போது, மதம் அல்லது ஜாதி மீது நம்பிக்கையில்லாத மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 10 சதவீதம் பேர், சென்சஸ் படிவத்தில் தாங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிடவில்லை. நாடு முழுவதிலும் சுமார் 28.6 லட்சம் பேர் தங்களின் மதத்தை குறிப்பிடவில்லை.

இந்தியாவின் தொழில்துறை பகுதியில் ஒன்றான மகாராஷ்டிராவில் தான் மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அங்கு மதம் அல்லது ஜாதிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. ஆனால் தங்களின் ஜாதி அல்லது மதத்தை கூறினால் வேலை போய் விடுமோ என்று பயந்து பலரும் அவற்றை வெளியில் சொல்வதில்லை. தங்களை மற்றவர்கள் சேர்த்துக் கொள்ள மாட்டார்களோ எனவும் பலர் தங்களின் குழந்தைகளுக்கு பள்ளியில் கூட ஜாதி அல்லது மதத்தை குறிப்பிடுவதில்லை.

பயத்தால் அவர்கள் குறிப்பிடாமல் இருந்தாலும், இதனால் தீண்டாமை என்ற விஷயம் காணாமல் போகிறது. இந்தியர் களின் வாழ்வில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அதன் மீது நம்பிக்கை இல்லை; அதனால் தங்களுக்கு மதிப்பு ஏற்பட்டு விடாது என நம்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.