September 25, 2021

இந்தியாவில் செல்போன் விற்பனை வீழ்ச்சி!

அந்தக் காலத்தில் போன் வைத்திருந்தாலே வசதியானவர்கள் என்று கருதப்பட்டது. போன் வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூட இந்தியாவில் விதி இருந்தது. போன் இணைப்பு வாங்க வேண்டும் என்றால் விண்ணப்பித்து விட்டு, வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். தொலை தொடர்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்று டெலிபோன் சிறப்பு ஒதுக்கீடுகள் இருந்தது. அதற்காக எம்.பி.க்களிடம் நடையாக நடந்து இணைப்பு பெற்றவர்கள் உண்டு.
mobile india
“உங்கள் பிள்ளை வீட்டில் போன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, உங்களுக்கு திருமணம் ஆனவுடனேயே போனுக்கு விண்ணப்பித்து விடுங்கள்” என்று ஜோக் அடிப்பதுவும் உண்டு. ஆனால் இதில் ஒரு மாற்றம் உருவானது. 1992-ம் ஆண்டு தொலை தொடர்புத்துறையில் மத்திய அரசு தாராளமயமாக்கல் கொள்கையை கொண்டு வந்தது. போன் இணைப்புக்கள் கிடைப்பது எளிதானது.

1995-ம் ஆண்டில் இந்தியாவில் செல்போன் சேவை தொடங்கியது. தொடக்கத்தில் செல்போன் விலை அதிகமாக இருந்தது. சேவைக்கட்டணங்களும் அதிகமாகவே இருந்தது. இதனால் செல்போன்கள் வசதி படைத்தவர்களின் கைகளில் மட்டும் அடைக்கலமாகி இருந்தது.

செல்போன் வந்த காலக்கட்டத்தில் ஒரு நிமிட அழைப்புக்கு கட்டணம் 16 ரூபாயாக இருந்தது. குறைந்தபட்ச செல்போன் விலை ரூ.5 ஆயிரம். இதனால் செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையும் ஆமை வேகத்தில்தான் நகர்ந்தது. 2000-ம் ஆண்டில் இந்தியாவில் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 19 லட்சம்தான். அதன்பின்னர் தனியாருக்கு செல்போன் சேவை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டன.

செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும் பெருகத்தொடங்கின. சேவை நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகப்பெருக இந்தத் துறையில் போட்டி வலுத்தது. அதன்பயன் பொதுமக்களை வந்து அடையத் தொடங்கியது. செல்போன்கள் விலை குறையத் தொடங்கியது. சேவைக்கட்டணமும் குறைந்தது. இதனால் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் ஏறுமுகத்தில் சென்றது. அதிலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், டேப்லட்டுகளின் வரத்து இந்தியாவில் மொபைல் போன் விற்பனையை கடந்த 10 ஆண்டுகளில் சூடுபிடிக்கச் செய்தது.

சோனி, ஆப்பிள், பிளாக்பெர்ரி, சாம்சங் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் ஹேண்ட்செட்டுகளுடன் உள்நாட்டில் உள்ள லாவா, இண்டெக்ஸ், மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட பல கம்பெனிகளின் ஹேண்ட்செட்டுகள் போட்டி போட்டு பல மாடல்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் செல்போன்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சைபர்மீடியா என்ற முன்னணி தொழில்நுட்ப கருவிகளுக்கான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.14 சதவீதம் அளவுக்கு ஸ்மார்ட்போன்களின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. அதாவது, 6.2 கோடி ஹேண்ட்செட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில், இப்போது 5.3 கோடியாக விற்பனை எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதே காலகட்டத்தில் விலை குறைவான பட்ஜெட் போன்களின் விற்பனையும் 18.3 சதவீதம் அளவுக்கு கடுமையாக ‘அடி’ வாங்கியிருக்கிறது.

கடந்த 2014-ல் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்மார்ட்போன்களின் மாபெரும் சந்தையாக இந்தியா இருந்தது. 2016-ம் ஆண்டுக்குள் விற்பனையில் அமெரிக்காவையே மிஞ்சிவிடும் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் திடீரென வீழ்ச்சியை சந்தித்துள்ளது இந்தியா. எனினும், இது தற்காலிகமானதுதான் என பல நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.