September 25, 2021

இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு தடை!

“ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியவுடன் அவற்றை நாங்கள் கவனத்தில் கொண்டோம். இந்த நிகழ்வுகள், எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கின்றன. அதன் நடவடிக்கைகளை ஒடுக்க விரும்புகிறோம். ஆகவே, அந்த இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது.” என்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
isis ban
ராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக, அதன் நடவடிக்கைகள் உலகின் பகுதிகளிலும் பரவி வருகின்றன.அந்த இயக்கத்துக்கு ஆதரவாக, டுவிட்டரில் பிரசாரம் செய்து வந்த பெங்களூரைச் சேர்ந்த மெஹதி மசூர் பிஸ்வாஸ் என்ற 24 வயது பட்டதாரி வாலிபர், கடந்த சனிக்கிழமை போலீஸ் பிடியில் சிக்கினார்.

இந்நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, ஐ.எஸ். இயக்கத்தால் இந்தியாவுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றை ஒடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்,”ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியவுடன் அவற்றை நாங்கள் கவனத்தில் கொண்டோம். இந்த நிகழ்வுகள், எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கின்றன. அதன் நடவடிக்கைகளை ஒடுக்க விரும்புகிறோம். ஆகவே, அந்த இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது.

இந்திய வாலிபர்கள் சிலர் ஐ.எஸ். இயக்கத்தை ஆதரித்தது உண்மைதான். ஆனால் அந்த எண்ணிக்கை, புறக்கணிக்கத்தக்க அளவுக்கு மிகவும் குறைவானதுதான். இருப்பினும், இந்த பிரச்சினையை நாங்கள் சீரியசாக எடுத்துக்கொண்டுள்ளோம்.
இந்தியாவைச் சேர்ந்த சிறுபான்மையினர், தங்கள் பிள்ளைகள் அந்த இயக்கத்தின் பிடியில் சிக்குவதை ஊக்குவிப்பது இல்லை. அதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.

ஐ.எஸ். இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும், சந்தேகத்துக்குரிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எந்த அப்பாவியும் காவலில் வைக்கப்பட மாட்டார்கள். அப்படி யாராவது வைக்கப்பட்டால், அதை எனது கவனத்துக்கு கொண்டு வரலாம்.

இந்த விவகாரம் குறித்த கேள்விகளுக்கு மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி கிரென் ரிஜிஜு பதில் அளிக்கையில்,”ஐ.எஸ். இயக்கம் பற்றிய விவகாரம், மிகவும் உணர்வுபூர்வமானது. அதைப்பற்றி சபையில் விரிவாக விவாதிக்க முடியாது. இருப்பினும், இந்த விவகாரம் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டியது இல்லை.

பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. தேசிய பாதுகாப்பு படையை பலப்படுத்துதல், குடியேற்ற விதிமுறைகளை தீவிரப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஐ.எஸ். இயக்கத்தில் இந்திய இளைஞர்களின் தொடர்பு பற்றி இரண்டு சம்பவங்கள் வெளிப்படையாக தெரிய வந்துள்ளன. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள், ஐ.எஸ். இயக்கத்தில் சேர சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் திரும்பி வந்து விட்டார். பெங்களூரில், ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக டுவிட்டரில் பிரசாரம் செய்து வந்தவர் பிடிபட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் வழியிலான இத்தகைய இயக்கங்களின் நடவடிக்கைகளை ஒடுக்க ‘சைபர்’ பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும்.”என்று கிரென் ரிஜிஜு கூறினார்.