September 25, 2021

இந்தியன் ரயில்வே தனியார்மயமா? நெவர்.! பிரதமர் திட்டவட்டம்!

“ரயில்வேயை தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். ரயில்வே தனியார் மயம் ஆகாது. அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு கிடையாது. எனவே ரயில்வே தொழிலாளர்கள் அதுபற்றி கவலைப்பட தேவை இல்லை. இது தொடர்பாக வெளியாகும் வதந்திகளை ரெயில்வே தொழிற்சங்கங்கள் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.”என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
modi rail
பிரதமர் மோடி நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். வாரணாசியின் புறநகர் பகுதியில் உள்ள டீசல் ரயில் என்ஜின் தொழிற்சாலையில் விரிவாக்க பணிகளை தொடங்கி வைத்த அவர், அங்கு தயாரிக்கப்பட்டுள்ள 4,500 குதிரை சக்தி திறன் கொண்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய ரயில் என்ஜினை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் சிறுவயதில் ரயில் நிலையத்தில் தான் டீ விற்றதையும், அந்த வகையில் ரயில்வேயுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பு பற்றியும் குறிப்பிட்டவர்,”ரயில்வேயை தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியாகும் வதந்திகளை ரயில்வே தொழிற்சங்கங்கள் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.ரயில்வே துறைக்கு நாடு முழுவதும் ஏராளமான சொத்துகள் உள்ளன. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நாம் மேம்படுத்த முடியும்.

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளை அதிகரிப்பதற்கும், தொழில்நுட்ப ரீதியில் ரயில்வேயை மேம்படுத்துவதற்கும், அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்குவதற்கும் சாமானிய மக்கள் மீது நாம் ஏன் சுமையை ஏற்றவேண்டும்? நம் நாட்டில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்களிடமும், வெளிநாட்டு நிறுவனங்களிடமும் ஏராளமான நிதி உள்ளது. மேற்கண்ட வசதிகளுக்காக அந்த பணத்தை நாம் பயன்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை.இதனால் ஒட்டு மொத்தமாக நமது தேசத்துக்குத்தான் நன்மை கிடைக்கும். எனவே இந்த விஷயத்தில் யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை.

உதாரணமாக ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு ரயில் நிலையம் இருந்தால், அதன் வழியாக சில ரெயில்கள் நின்று செல்லும். அந்த ரயில் நிலையத்தின் அருகே ரயில்வேக்கு சொந்தமாக ஏராளமான நிலம் இருக்கும். அந்த இடத்தில் கட்டிடம் கட்டி அங்கு திறன் மேம்பாட்டு மையம் அமைத்தால் அந்த கிராமத்திலும், அதன் சுற்றுப்புற பகுதியிலும் உள்ள வேலையில்லாத ஏராளமான இளைஞர்கள் பயன் அடைவார்கள்.

நாடு முழுவதும் 4 ரயில்வே பல்கலைக்கழகங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ரயில்வே தொடர்பான பணிகளில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் வேலைக்கு செல்லும் முன், இந்த பல்கலைக்கழங்களில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
ஒரு காலத்தில் நாம் வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்தோம். உணவு தானிய உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற வேண்டும் என்ற லால் பகதூர் சாஸ்திரியின் கனவு இப்போது நனவாகி இருக்கிறது. தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கண்ணீர் புகை குண்டுகள், ராணுவ தளவாடங்கள் போன்றவற்றை உள்நாட்டில் இனி நாமே உற்பத்தி செய்து தன்னிறைவு பெறவேண்டும்.”என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.