September 18, 2021

இந்தாண்டு (ம்)பருவமழை குறையும் வறட்சி அதிகரிக்கும்! ஏன்? ஏன்??

நமது நாட்டில் பருவ மழை குறைவாக இருக்கும். 93 சதவீதம்தான் பருவமழை பெய்யும் என்று கடந்த மாதம் இந்திய வானிலை ஆய்வு துறை கணித்திருந்தது. ஆனால் இப்போது, பருவ மழை மேலும் குறையும் என்று இந்திய வானிலைஆய்வு துறையின் திருத்திய கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதாவது, 93 சதவீத பருவ மழை என்பது 5 சதவீதம் குறைந்து, 88 சதவீத பருவமழைதான் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
edit weather jun 4
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இது சராசரிக்கும் குறைவாகத்தான் இருக்கும். இதனால் டெல்லி உள்ளிட்ட வடமேற்கு இந்திய பகுதியில் வறட்சி தாண்டவம் ஆடும் நிலை உருவாகும்.இந்திய வானிலை ஆய்வு துறை, பருவமழை குறைவதற்கான வாய்ப்பு 66 சதவீத அளவுக்கு உள்ளதாக கூறுகிறது. (50 ஆண்டு சராசரியில், 90 சதவீதத்துக்கும் குறைவானால் பருவமழை பற்றாக்குறை என பொருள்.) சராசரி அளவுக்கு மழை பெய்வதற்கு 7 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது.

இப்படி பருவமழை குறைந்து போவதற்கு என்னதான் காரணம் என்ற கேள்விக்கு இந்திய வானிலை ஆய்வு துறை பதில் அளித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் கடல் பரப்பு வெப்ப நிலை, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (7 முதல் 24 மாதங்கள் வரை) சராசரி வெப்ப நிலையை விட அதிகமாகும். இது ‘எல் நினோ’ என அழைக்கப்படுகிறது. இந்த மாற்றம் பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகள் இடைவெளியிலும் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இந்த எல்நினோ நிலை இந்த ஆண்டு உள்ளது. பசிபிக் பெருங்கடல் பரப்பு வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால்தான் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு கோடை வெயில் வறுத்தெடுத்து, நூற்றுக்கணக்கானோரை பலிவாங்கியது.இந்த எல் நினோவின் கைவரிசையால்தான், பருவ மழையும் குறையப்போகிறது. எல்நினோவுக்கும், பருவ மழை குறைவதற்கும் தொடர்பு இருப்பதாக உலக அளவில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு துறையின் நெடுந்தொலைவு முன்னறிவிப்பு பிரிவின் தலைவர் டி. சிவானந்த பாய் கூறும்போது, ‘‘முதலில் அளவீடு செய்யப்பட்ட ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகிறபோது, இப்போது எல்நினோ அளவீடு மேம்பட்டுள்ளது’’ என்கிறார்.

மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள ஐ.ஐ.டி.எம். என்னும் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம், எல்நினோ நிலவரம் மேலும் வலு அடைந்து, பருவமழை காலத்தில் மிதமாகும் என கூறி உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் எல்நினோ தாக்கம் நிலவுவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் அது கணித்துள்ளது.

எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் வடமேற்கு மாநிலங்களில் 85 சதவீத மழையும், மத்திய மாநிலங்களில் 90 சதவீத மழையும் பெய்யும்.தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் 92 சதவீத மழையும், வட கிழக்கு மாநிலங்களில் 90 சதவீத மழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளது.

முதலில் கணித்ததை விட இப்போது பருவமழை மேலும் குறையும் என இந்திய வானிலை ஆய்வு துறை கணித்திருப்பதை அடுத்து, பல்வேறு துறை செயலாளர்களின் உயர் மட்ட அவசர கூட்டத்தை மத்திய மந்திரிசபை செயலாளர் அஜித் சேத் கூட்டி, ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

நாட்டில் வறட்சி நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால், அதை சமாளிக்க தயார் நிலையில் இருக்கும்படி அனைத்து அமைச்சகங்களும், மாநிலங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.