September 25, 2021

இதோ வந்துட்டேன்! – ஆர். கே. நகர் தொகுதியில் சசிபெருமாள்!!

சேலம் மாவட்டம், கஞ்சமலையருகே உள்ளே ஒரு அழகிய ஊரைச் சேர்ந்தவர் சசிபெருமாள். அது 1972. 41 ஆண்டுகளுக்கு முன்பு.. தமிழகத்தில் நீண்ட காலம் அமலில் இருந்த மதுவிலக்கு தளர்த்தப்பட்டு கள்ளுக்கடைகள் தொடங்கப்பட்ட காலகட்டம். கர்மவீரர் காமராஜர் தலைமையில் மதுவிலக்கு கோரி தமிழகமெங்கும் கள்ளுக்கடை மறியல் போராட்டம். 49 ஆயிரம் பேர் கைது. 5 வார தண்டனை அளிக்கப்படுகிறது. ஆனால், 5 நாட்களிலேயே விடுதலை செய்யப்படுகிறார்கள். சேலத்தில் இருந்து மறியலில் பங்கேற்று சிறை சென்றவர்களுக்கு “அறப்போர் தொண்டர்” என்ற பட்டத்தை சேலம் நேரு கலையரங்கில் காமராஜர் அவர்கள் வழங்கினார். அப்போது கர்மவீரரின் கரங்களால் பட்டம் பெற்றவர்களில் ஒருவர் 16 வயது இளைஞன் சசிபெருமாள்!!
sasi perumal
மதுவிலக்கு தளர்த்தப்பட்ட 1971க்கு அடுத்த ஆண்டு தொடங்கிய சசிபெருமாளின் போராட்டம் இன்று 57வயது காந்தியவாதி சசிபெருமாளின் போராட்டமாக மட்டுமல்லாமல் பொதுமக்களின் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

1983ல் மதுவிலக்கு மாநாடு. மதுக்கடைகளை மூடக்கோரி தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள். சேலம்-சென்னை நடைபயணம். 2009ல் சென்னை, சேப்பாக்கத்தில் 9 நாள் உண்ணாவிரதம் என்று ஒவ்வொரு கட்டமாக சசிபெருமாள் நடத்திய மதுவிலக்குப் போராட்டத்தின் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நடைபயணம், உண்ணாவிரதம் போன்ற பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளார். மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டங்கள் நடத்திய இவர், சமீபத்தில் சிதம்பரத்தில் மதுபானக்கடையை மூட வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில் சசிபெருமாள் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக நேற்று திடீரென அறிவித்தார்.இதுதொடர்பாக சசிபெருமாள் நிருபர்களிடம்,”சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேசிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளேன். இந்த தேர்தலின் போது, என்னுடைய பிரதான கொள்கையான மது ஒழிப்பை வலியுறுத்தும் வகையில், மது ஒழிப்பு வேட்பாளராக களம் இறங்குகிறேன்.

வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நான் மனு தாக்கல் செய்ய உள்ளேன். மேலும் எனக்கு ஆதரவு அளிக்க கோரி, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் ஆதரவு திரட்ட உள்ளேன்.”என்று அவர் கூறினார்.