October 18, 2021

இது கதிர்வேலன் காதல் விமர்சனம்!

சுந்தர பாண்டியன் மூலம் நட்பு பிளஸ் காதல் என்ற பாணியில், குடும்பத்தோடு படம் பார்க்க வைத்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்,மற்றும் அதே டைப்பில் ஒ.க.ஒ.க. ஹிட கொடுத்த உதயநிதி ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது படம். இந்த இருவருடைய முதல் படத்தின் பாதிப்பும் இப்படத்தில் இருந்தாலும், எந்த வித ஆபாசமான காட்சிகளோ, வசனங்களோ இல்லாமல் இருப்பதற்காக இருவருக்கும் ஒரு சபாஷ் சொல்லலாம் என்றாலும் படத்தை படு ஸ்லோவாக கொண்டு போனதற்கு ஒரு கொட்டும் கொடுக்க வேண்டும்!
Idhu_Kathirvelan_Kadhal_
மதுரையில் உள்ள உதயநிதி, தனது அக்காவுக்கும், மாமாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க, கோவைக்கு செல்கிறார். அங்கு நயன்தாராவை பார்க்கும் உதயநிதி அவர் மீது காதல் கொள்கிறார். நயன்தாராவுக்கு வேறு ஒருவர் மீது காதல் ஏற்படுகிறது. இதனால், நயனதாராவுடன் நண்பராக பழகும் உதயாநிதி, சில பல குளறுபடிகளுக்கு இடையே, நயன்தாராவை மீண்டும் காதலிக்க, பதிலுக்கு நயன்தாராவும் காதலிக்கிறார்.

எந்த பிரச்சனையும் இன்றி உதயநிதி- நயன்தாரா காதல் கைகூட, இறுதியில் உதயநிதியின், தந்தையின் மூலம் காதலுக்கு எதிர்ப்பு வருகிறது. இந்த எதிர்ப்பை, யாரையும் எதிர்க்காமல், உதயநிதி எப்படி சமாளித்து நயன்தாராவை கரம்பிடிக்கிறார் என்பதுதான் ‘இது கதிர்வேலன் காதல்’. உதயநிதி இரண்டாவது படத்தில் நடனத்தில் முன்னேறி இருக்கிறார். இயல்பாக நடிக்க முயற்சிப்பது அழகாக இருக்கிறது. இவர். தனக்கு எந்தக் கதை சரியாக வரும், தான் எப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பொறுமையாக யோசித்து கதையை தேர்வு செய்திருக்கிறார் ஹீரோ உதய். தேவையில்லாத சண்டைக் காட்சிகளோ, ஹீரோ பில்&டப்களோ இல்லாதவரை அவருக்கு ஹீரோவாகவும் எதிர்காலம் காத்திருக்கிறது. அதேபோல் ஒரு காட்சியில் சந்தானம் உதயநிதியைப் பார்த்து ‘‘உன்கிட்டலாம் நான் எக்ஸ்பிரஷன்ஸ் எதிர்பார்த்தது என் தப்புதான். கண்ணாடியைப் போட்டு மேனேஜ் பண்ணு…’’ என காமெடி செய்வார்.அதற்கு தியேட்டரே கைகொட்டி சிரிப்பதை உதய் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நயன்தாராவின் அழகு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. அவர் வரும் காட்சிகளை தனித்திறனோடு திறமையான நடிக்கும் அளவுக்கு மிகவும் தேறிவிட்டார். சந்தானம் எப்போதும் போல தனது வாய்ஜாலத்தில் ரசிகர்களை சந்தோஷப்படுகிறார்.தன்னை நம்பி கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்து இப்படத்திலும் டபுள் ‘ஓகே ஓகே’ வாங்குகிறார் சந்தானம்! இருந்தாலும் காட்சிக்கு காட்சி ‘பொண்ணுங்கிறது….’, ‘காதல்ங்கிறது…’ என எதற்கெடுத்தாலும் ஒரு உதாரணம் சொல்வது கொஞ்சம் போரடிக்கிறது

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சிகளிலும் பிரம்மாண்டம் தெரிகிறது. இசை ஹாரிஸ் ஜெயராஜ். எல்லா பாடல்களும், பின்னணி இசையும் ரொம்ப சுமார் ரகம் தான்.இதே ரேஞ்சில் போனால் ஹாரிஸுக்கு கோலிவுட் டாட்டா சொல்லிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் நலம்.மொத்தத்தில் இதுவும் கொஞ்சம் ஓ கே. ஓ. கே ரகம்தான்