September 25, 2021

ஸ்டேட் போர்ட் பள்ளி நேரங்களில் மாற்றம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.முப்பருவ கல்வி முறையுடன், மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கல்வி்த்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
School Uniforms
இதையடுத்து இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 45 நிமிடமாக இருந்த ஒரு பாடவேளை 40 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

மேலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை அன்று கடைசி ஒரு மணி நேரம் மாணவர்களின் பன்முக திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், ஆடுதல், நடித்தல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி, பழமொழி கூறுதல் போன்ற நடவடிக்கையில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு நடைபெறும் காலை வழிபாடு முறை வாரம் தோறும் திங்கள்கிழமை மட்டும் பொது காலை வழிபாட்டு கூட்டமும், மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அமைய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வியுடன் மாணவர்களின் தனித்திறமைகளையும் வளர்க்க பள்ளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை. இந்த கோரிக்கைகளை ஏற்று, இதனை உடனடியாக அமல்படுத்த முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.