September 20, 2021

இடைத்தேர்தலை நிறுத்தும் நோக்கத்தில்தான் போட்டி! – டிராபிக் ராமசாமி தகவல்!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். தி.மு.க. உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
traffic ramasmay
எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்த தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், தன்னை பொது வேட்பாளராக அறிவித்து ஆதரவு தர வேண்டும் என்று டிராபிக் ராமசாமி வேண்டுகோள் விடுத்து தமிழக தலைவர்களை நேரில் சந்தித்து வருகிறார்.

இதனிடையே பத்திரிகையாள் சந்திப்பின் போது, ’ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெறுவீர்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்கிறீர்கள். இப்படியெல்லாம் கேட்காதீர்கள். ஏற்கெனவே தலா இருமுறை நாடாளுமன்றம் மற்றும் சட்ட சபைத் தேர்தலில் நான் போட்டியிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தோற்றிருக்கலாம். ஆனால், அன்றைய நிலை வேறு. இன்றைக்கு நிலைமை வேறு. தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதற்கான வாய்ப்பை ஜெயலலிதாவே ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

திமுக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறேன். அந்த முக்கியத் தலைவர்கள் யார் என்று கேட்கக் கூடாது. ரகசியம். அவர் கள் என்னிடம் ‘எங்கள் கட்சி உறுப்பினர்கள் 99 சதவீதம் உங்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள்’என்று நம்பிக்கை அளித்துள்ளனர். எனவே, இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி, வெற்றியும் பெறுவேன்.

’எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒதுங்கிவிட்ட நிலையில் நீங்கள் மட்டும் போட்டியிடுவதன் நோக்கம் என்ன?’என்று கேட்டால்,”எதிர்க்கட்சிகள் ஒதுங்கிவிட்ட தாக நான் கருதவில்லை. இதன் பின்னால் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இந்த இடைத்தேர்தல் சட்ட விரோதமானது. ஓர் ஆண்டுக்குள் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்தத் தேர்தலை நடத்தக் கூடாது என்று ஒரு தேர்தல் விதிமுறைகூட இருக்கிறது. அதனால்தான் எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை. அந்த விதிமுறையை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். அது கிடைத்ததும் இந்த தேர்தல் செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். தொகுதியின் வேட்பாளராக இருப்பவர்தான் அப்படி ஒரு வழக்கு தொடர முடியும் என்று எனது வழக்கறிஞர்கள் சொன்னார்கள். அதனால்தான், தேர்தலில் போட்டியிடுகிறேன்.

’அது சரி, உங்களது தேர்தல் வாக்குறுதிகள் என்ன? வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்கிறீர்கள்.தொகுதி மக்கள் யாருக்கும் எந்த சலுகையும் கிடையாது. இலவ சங்களும் இல்லை. எல்லோரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகள் உட்பட சட்டத்தை யாரும் மீறக் கூடாது. குறிப்பாக, இந்த இடைத் தேர்தலில் ஓட்டுக்காக யாரேனும் பணம் கொடுத்தால் வாங்கக் கூடாது. அதேசமயம், மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் பட்சத்தில் உயிரைக் கொடுத்தா வது அவற்றை பெற்றுத்தருவேன். இவையே எனது தேர்தல் வாக்குறுதிகள்” என்று தெரிவித்தார்.