இடுப்பை மெயின்டெயின் பண்ணினால் இன்சுலினுக்கு வேலையில்லை!

சமீப காலமாக சேலை, சுடிதாருக்கு டாட்டா காட்டிவிட்டு டைட் ஜீன்ஸ், குட்டி டாப், குர்தி, லெகின்ஸ் என நவநாகரிக உடைகளை அணிவதே இளம்பெண்களின் விருப்பமாக உள்ளது.அதே போல இளைஞர்களின் ஆசையும் இறுக்கமான உடைகள்தான்.ஆனால் இந்த ஆடைகளுக்கு உடல்வாகும் ஒத்துழைக்க வேண்டும். மாறி வரும் உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், வயதுக்கு மீறிய உடல்பருமனோடு இருக்கும் இளம்ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த உடைகளை நினைத்து பார்க்கவே முடியாது. இவர்களுக்கு டிரெண்டி டிரஸ்ஸிங் மிகப்பெரிய கனவு. ஆனாலும் உடற்பயிற்சி மற்றும் உணவில் கவனம் செலுத்தி இடுப்பை மெயின்டெயின் பண்ணினால் ஒவ்வொருவரின் கனவும நனவாகும் என்கிறார்கல் மருத்துவர்கள்
SEP 28 - Health iduupu
மேலும் உங்கள் இடுப்பை விட வயிற்றில் அதிகமான கொழுப்பு இருந்தால், உங்களின் செல்கள் அனேகமாக இன்சுலினை எதிர்க்கலாம். அதனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் ஏற்படலாம். இந்நிலையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை போதுமான உடற்பயிற்சியின்மையும், உடல் பருமனும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அது மட்டுமின்றி இந்த சர்க்கரை நோய்க்கு முக்கியமான அளவீடு `தொந்தி’தான் என்பது தெரியுமா?. வயிற்றில் அதிகமான கொழுப்புச் சேருவது, ஈரலிலும் அதிகமான கொழுப்பைச் சேர வைக்கிறது. அது, ரத்த ஓட்டத்திலிருந்து இன்சுலினை நீக்கும் அதன் பணியை பாதிக்கிறது. நீங்கள் உணவு உண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அதை அதிகமாகாமல் தடுபதற்காக கணையம் `இன்சுலினை’ சுரக்க வேண்டும். இன்சுலினுக்கு செல்கள் போதுமான அளவு எதிர்வினையாற்ற முடியவில்லை என்றால் அது இன்சுலின் எதிரப்பு நிலை எனப்படுகிறது. அப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிக்கிறது. உடனே கணையமானது பெருமளவிலான இன்சுலினைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்தால், அது செல்களுடன் ஒட்டிக்கொள்கிறது. அப்படி ஒருமுறை ஒட்டிக்கொண்டால் மீண்டும் அது நீங்குவதில்லை. கடைசியில் அது `சார்பிட்டால்’ என்ற நஞ்சாகிவிடுகிறது. அது செல்களைச் சிதைத்து, உங்கள் உடம்பின் நரம்புகள், ரத்த நாளங்கள், திசுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதிகமான இன்சுலின் சுரப்பு, உங்களை அதிகமாகச் சாப்பிட வைத்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது. அதிகமான எடை அல்லது தொந்தியும் தொப்பையுமாக இருப்பவர்களுக்கு, சராசரியான எடை கொண்டவர்களை விட `விசரால்’ கொழுப்பு அபாயம் அதிகம். அடிவயிற்று பகுதியில் ஆழமாக உறுப்புகளைச் சுற்றி அமைந்திருப்பதுதான் `விசரால்’ கொழுப்பு. தோலின் மேலடுக்கை ஒட்டிள்ள `சகுட்டேனியஸ்’ கொழுப்பை விட இது அதிக நோய் அபாயத்தை ஏற்படுத்தும். `விசரால்’ கொழுப்பு, சர்க்கரை வியாதி போன்றவற்றுடன் தொடர்புடையது.

சிம்பிளாக சொல்வதென்றால் பெண்களுக்கு இடுப்பளவு 35 இஞ்சுகளுக்கு மேலும், ஆண்களுக்கு இடுப்பளவு 40 இஞ்சுகளுக்கு மேலும் இருந்தால் அபாயத்தின் அறிகுறி. தொந்தியைக் கரைக்க கொழுப்பை எரிக்கும் உணவுகளைச் சாப்பிடலாம். அவற்றில் புரதங்கள், நார்ச்சத்துச் செறிந்த மாவுச்சத்து உணவுகள் மற்றும் முழுத் தானியங்கள் அடங்கும். பூரிதக் கொழுப்பு அளவைக் குறையுங்கள். `விசரால்’ கொழுப்பிலிருந்து நீங்க, உங்கள் அத்தியாவசியமான `பேட்டி ஆசிட்களை’ எடுத்துக்கொள்ளலாம். தினமும் 35 சதவீதம் புரதம் (பீன்ஸ், கொட்டை வகைகள், பச்சைக் காய்கறிகள், மீன், கோழி இறைச்சியில் உள்ளது), 35 சதவீதம் அதிக நார்ச்சத்து கொண்ட மாவுச்சத்து பொருட்கள், 30 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்பு (ஆலிவ் எண்ணை போன்றவை) என்று எடுத்துக்கொள்ளலாம்.

அத்துடன் இதய பகுதிக்கு வலுவளிக்கும் பயிற்சிகள் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். அவற்றைத் தவற விடாதீர்கள். நீங்கள் இதயத் துடிப்பு அதிகரிப்பதை உணரும் வகையில், வியர்க்கும் வகையில் தீவிரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இடையிடையே உங்களால் பேச முடிகிற அளவுக்கு இருக்க வேண்டும். தொந்தியைக் கரைப்பதற்கு சற்று அதிக காலம் ஆகும். ஆனால் அது முடியாத காரியமல்ல. சரியான அணுகுமுறையின் முலம் நீங்கள் அதிலிருந்து விடுதலை பெறலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஸ்ரீவித்யா.