March 23, 2023

இ,சிகரெட்டில் போதை வரவழைக்கும் நறுமணம்!

பார்க், பீச், ரயில், பஸ், திரையரங்கு… எனப் பொது இடங்களில் எங்குவேண்டுமானாலும் எங்கள் நிறுவனத்தின் சிகரெட்டைப் புகைக்கலாம். நெருப்பு இல்லை, சாம்பல் இல்லை, அதிக அளவில் புகை இல்லை. சிகரெட் பிடித்து முடித்ததும் சட்டைப் பையில் போட்டு எடுத்தும் செல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்குப் பாதகம் ஏற்படுத்தாத சிகரெட்!’ – இ-சிகரெட் நிறுவனங்களின் ஈர்ப்பு அழைப்பு இது. அது என்ன இ-சிகரெட்? ‘புகை பிடிக்கும் பழக்கத்துக்கு மாற்றாக, புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டு வெளியே வர கண்டுபிடிக்கப்பட்டதுதான் எலெக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்’ என்கிறார்கள். இந்நிலையில் இ,சிகரெட்டில் போதை வரவழைக்கும் நறுமணத்தை கலந்து புகைத்து உச்சகட்ட போதையில் திளைக்கின்றனர். எவ்வித பரிசோதனையிலும் இந்த போதை கண்டறியப்படுவதில்லை என்பதால் இளைஞர்களிடையே இது அதிவேகமாக பரவி வருகிறது.
sep 4 - e- cigrate
தற்போதைய இளைஞர்களிடையே புது வித போதை பழக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. அதாவது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த புகையிலை, சிகரெட்டுக்கு மாற்றாக இ, சிகரெட் என்ற சிகரெட் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேப்பரைஸ்டு சிகரெட் எனப்படும் ரீபிள் பேனா போல நீண்ட வடிவத்தில் காணப்படும்.இதில் நறுமணத்தை அளிக்கும் கேட்ரிஜ் இருக்கும். அந்த சிகரெட் பேட்டரியால் இயங்கும். அதை வாயில் வைத்து இழுக்கும்போது கேட்ரிஜ்ஜில் உள்ள நறுமணத்தோடு கூடிய புகை போன்ற மெல்லிய இழை மூச்சுக்குழலுக்குள் சென்று திரும்பும். ஆனால் புகை ஏதும் வராது. இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது

இந்த சிகரெட்டை வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுக்குள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. சென்னையை பொறுத்தவரை 21 இடங்களில் இந்த ஏஜென்சிகள் உள்ளன. இவற்றில் இ,சிகரெட்டை வழக்கமாக பெட்டிக்கடைகளில் வாங்குவது போல வாங்க முடியாது. ஆன்லைன் முறையில் பதிவு செய்தால் டோர் டெலிவரி செய்யப்படும். இந்த சிகரெட் தரத்துக்கு ஏற்ப ஒரு சிகரெட் ரூ.3500 வரை விற்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த சிகரெட் தற்போது போதை பொருளாக பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. புகையிலை இல்லாத, நிகோடின் இல்லாத சிகரெட் என்ற நிலை மாறி, அதிகளவு நிகோடின் கலந்த நறுமண கலவையை சில நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. அதிகளவு நிகோடின் கலக்கப்பட்ட இ,சிகரெட்டை பயன்படுத்துவோர் கஞ்சா அடித்த போதைக்குள்ளாகின்றனர். சிலர், போதை தரும் நறுமணங்களையும் வாங்கி இ,சிகரெட் கேட்ரிஜ்ஜில் பயன்படுத்தி சிகரெட்டை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் 3 மணி நேரத்தில் தொடங்கி 7 மணி நேரம் வரை நிறை போதையில் காணப்படுகின்றனர்.

கேட்ரிஜ்ஜில் கலக்கப்படும் ‘ஜிகால்’ என்ற ஒரு வகை பிளேவரில் ஆல்கஹாலில் உள்ளது போல 2 மடங்கு போதை உள்ளது. இந்த பிளேவரை இளைஞர்கள் பலர் தற்போது துணிச்சலாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த போதையில் இருப்பவர்களை எவ்வித மருத்துவ பரிசோதனையிலும் கண்டறிய இயலாது என்பதால் பணியாற்றும் இடங்களுக்கும் பலர் போதையில் செல்ல தொடங்கியுள்ளனர்.

என்னென்ன பாதிப்பு வரும்: மற்ற சிகரெட்டுகளை போல இ,சிகரெட்டுகளை சில நொடிகளில் புகைத்து விட முடியாது. ஒரு சிகரெட் பிடிக்க முழுமையாக 10 நிமிடம் தேவைப்படும். இவ்வாறு தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு புகையே இல்லாத புகை போன்ற உணர்வை அனுபவிக்கும்போது வாய் வலி, மூச்சுகுழாயில் வலி, இரைப்பு போன்றவை ஏற்படும். தொடர்ந்து இந்த சிகரெட்டை பிடித்து வருவோருக்கு நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும். தற்போது கலக்கப்படும் போதை பிளேவரால் போதையிலேயே மரணம் ஏற்படும்.

இ,சிகரெட்டை அமெரிக்காவில் மட்டும் 2.5 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த சிகரெட்டால் நன்மையை விட தீமை அதிகம் என்ற நிலையில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இ, சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இ, சிகரெட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.