August 13, 2022

இங்குள்ள பத்திரிகைகள் அரசை ஏன் விமர்சனம் செய்யவில்லை?கருணாநிதி விளக்கம்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில்,”அதிமுக ஆட்சியின் தவறுகளை மறைத்து, தமிழ் நாட்டு நாளேடுகள் சில ஒரேயடியாக புகழ்வதற்கு காரணம் என்ன?

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பத்திரிகைகளுக்கு எவ்வளவு விளம்பரங்கள் அரசின் சார்பில் தரப்பட்டுள்ளன என்பதை பாருங்கள்.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்துக்கு முழுப் பக்க விளம்பரம். மறைந்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் மலரஞ்சலி செலுத்தியதற்கு அரைப் பக்க விளம்பரம். சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கு முழுப் பக்க விளம்பரம். அதே விழாவில் தோரணவாயில் திறப்புக்காக அரைப்பக்க விளம்பரம் . எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா முழுப் பக்க விளம்பரம். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி தொடக்க விழா முழுப் பக்க விளம்பரம்.
sep 1 - karunanidhi
ஆங்கில நாளேடுகள் அனைத்திலும் முதல் பக்கத்தில் இந்த விளம்பரங்கள். அதே நாளில், திருவரங்கம் தேசிய சட்டப் பள்ளி திறப்பு விழா முழுப்பக்க விளம்பரம். இந்த இரண்டுமே முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சிகள். காவல் துறைக்கு முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழாவிற்காக முழுப்பக்க விளம்பரம்.

இவை அத்தனையும் ஆகஸ்ட் 15 முதல் 23 வரை ஒரு வாரத்தில் தரப்பட்ட அரசு விளம்பரங்கள். இதற்காக அரசு செலவழித்துள்ள தொகை எவ்வளவு?

இந்து முழுப்பக்க விளம்பர கட்டணம் ரூ.26 லட்சத்து 38 ஆயிரத்து 209. முதல் பக்கத்தில் வெளியிட 2 மடங்கு தொகை. அதாவது ரூ.52 லட்சத்து 76 ஆயிரத்து 419.

இந்தியன் எக்ஸ்பிரஸ் முழுப் பக்க விளம்பர கட்டணம் ரூ.31 லட்சத்து 67 ஆயிரத்து 736.

டைம்ஸ் ஆப் இந்தியா முழுப்பக்க விளம்பர கட்டணம் ரூ.17 லட்சத்து 36 ஆயிரத்து 582.

டெக்கான் கிரானிகல் ரூ.12 லட்சத்து 4 ஆயிரத்து 632.

தினத்தந்தி ரூ.15 லட்சத்து 27,240.
தினமணி ரூ.10 லட்சத்து 36,464.

ஆக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாளேடுகளுக்கு அரசு விளம்பரத்தால் கிடைத்த தொகை இவை:

இந்து நாளிதழ்: ரூ. 2,11,13,664
இந்தியன் எக்ஸ்பிரஸ் 2,53,41,888
டைம்ஸ் ஆப் இந்தியா 1,38,92,736
டெக்கான் கிரானிகல் 96,37,056
தினத்தந்தி 1,26,17,920
தினமணி 82,91,712
நமது எம்.ஜி.ஆர் 84,56,448
மாலை முரசு 1,19,82,400
மக்கள் குரல் 84,56,448
தினபூமி 84,56,448

இவை தவிர ஜனசக்தி, தீக்கதிர், மாலைமலர், எகனாமிக் டைம்ஸ் ஏடுகளுக்கும் விளம்பரங்கள். அவைகளை நான் கணக்கில் சேர்க்கவில்லை. மொத்தமாக கடந்த வார விளம்பரங்களுக்காக அரசு கொடுக்கும் தொகை ரூ.12 கோடியே 72 லட்சத்து 46 ஆயிரத்து 720.

இந்த நிதியாண்டுக்கு செய்தி விளம்பரத்திற்கான நிதி ஒதுக்கீடே ரூ.49 கோடியே 45 லட்சத்து 91 ஆயிரம்தான். ஆனால் ஒரு வாரத்துக்கே 12 கோடி 72 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது.

விளம்பரத்திற்காக அனைத்துத் துறைகளுக்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு:
2009-10ம் ஆண்டு ரூ.37.48 கோடி
2010-11ம் ஆண்டு ரூ.45.67 கோடி
2011-12ம் ஆண்டு ரூ.39.97 கோடி
2012-13ம் ஆண்டு ரூ.35.44 கோடி

ஆனால் 19 துறைகளின் சார்பில் ஓராண்டு சாதனை குறித்த ஒரு நாள் விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்டது மாத்திரம் ரூ.40.98 கோடி.

செய்தித் துறை சார்பில் விளம்பரம் செய்ய ஆண்டு ஒதுக்கீடு ரூ.12 கோடி. ஆனால் 1 வாரத்தில் செலவு ரூ.16 கோடியே 64 லட்சம்.

ஒரு வாரத்துக்கே இவ்வளவு தொகை கிடைக்கிறது என்றால் எந்தப் பத்திரிகை அரசை விமர்சனம் செய்யும்?”என்று கருணாநிதி கூறியுள்ளார்.